நல்லாட்சி எதிர்பார்ப்பு நீதிமன்ற தீர்ப்பு | தினகரன்

நல்லாட்சி எதிர்பார்ப்பு நீதிமன்ற தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலாளரான லலித் வீரதுங்கவுக்கும் தொலைத் தொடர்பு ஒழுங்காக்கல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்டவுக்கும் தலா மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் தலா இருபது இலட்சம் ரூபா அபராதத் தொகையும், தொலைத் தொடர்பு ஒழுங்காக்கல் ஆணைக்குழுவுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால் தொலைத்தொடர்பு ஒழுங்காக்கல் ஆணைக்குழு சபைக்கு சொந்தமான கணக்கிலிருந்து 60 கோடி ரூபாவை ஜனாதிபதி காரியாலய கணக்கிற்கு மாற்றி செலவு செய்ததாகும்.

இலங்கை தொலைதொடர்பு ஒழுங்காக்கல் ஆணைக்குழுவுக்கு சபையின் சட்ட வழங்கலுக்கு எதிரான வகையில் அந்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை உபயோகப்படுத்தி “சில்” துணியை வாங்கி விநியோகம் செய்துள்ளார்கள்.

அதனை வெசாக் பொசன் காலத்தில் விநியோகிக்காமல் தேர்தல் காலத்திலேயே விநியோகித்துள்ளார்கள். அதனை அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு பெறுவதற்காகும். அது தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்குகளைப் பெற மக்களுக்கு இலஞ்சம் கொடுத்த செயலாக கருதலாம். அது தேர்தல் சட்டத்துக்கு எதிரானது.

இந்த சில் துணியை விநியோகித்தது நிச்சயமாக நியாயமற்ற செயலாகும். அவர்கள் அதற்கான அரசாங்க நிறுவனமொன்றின் நிதியை உபயோகித்து உள்ளார்கள். அரச நிறுவன நிதி என்பது நாட்டு மக்களுக்கு உரியதாகும். அவ்வாறான உரிமையை தெரிவு செய்யப்பட்ட நபரொருவர் தேர்தல் இலாபத்தை நோக்காகக் கொண்டு உபயோகப்படுத்தியது நியாயமற்ற செயலாகும். தேர்தலின் போது அபேட்சகரின் சொந்தப் பணத்தையோ அல்லது அவரது கட்சியின் பணத்தையோ தான் அவர்கள் உபயோகப்படுத்த முடியும்.

அரச சேவையாளராக இருபது வருடங்கள் அனுபவமுள்ள ஒருவரான சில் துணி வழக்கின் முதலாவது குற்றஞ்சாட்டப்பட்டவர், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிடவும் முப்பது வருடங்கள் அரச சேவையில் ஈடுபட்ட இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் பொது சொத்துக்கள் சட்டத்தில் கீழ் தவறாக நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் என்பதை அறியாதவர்களல்ல. ஆகவே அவர்கள் தெரிந்தே தாங்கள் விரும்பும் அபேட்சகரை தேர்தலில் வெற்றிபெற செய்ய அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

பீ. பீ. ஜயசந்தர தொடர்பாக மகிந்த அரசாங்கம் பின்பற்றிய நடைமுறை எமக்கு ஞாபகம் வருகின்றது. அவரும் இவ்வாறான குற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டவரே.

இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்துக்கு சொந்தமான லங்கா மெரையின் சர்விஸ் லிமிடட் நிறுவன 90 வீத பங்குகளை தனியார்மயப்படுத்தும் போது பர்க் நிறுவன தலைவராக இருந்து டெண்டர் நடைமுறையை மீறியது தொடர்பாகவே அவர் மீது குற்றம் சாட்டப்படடது. அவ் ஒப்பந்தம் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. வழக்கு தீர்ப்பின் படி அரசுக்கு ஐந்து இலட்ச ரூபா அபராதத் தொகை செலுத்தும் படி ஜயசுந்தரவுக்கு உத்தரவிடப்பட்டது. அத்துடன் அக் குற்றம் காரணமாக அவருக்கு எந்தவொரு அரசு பதவியும் வாழ்நாளில் வகிக்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜயசுந்தரவுக்கு வழங்கப்பட்ட அத்தீர்ப்பு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன் நீக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகிய சிறிது காலத்தில் அப்போதைய நீதியரசரான சரத் நந்த சில்வா ஓய்வு பெற்ற பின் அப் பதவிக்கு அசோக சில்வாவை மகிந்த ராஜபக்ஷ நியமித்தார். ஜயசுந்தர நீதிமன்ற தீர்ப்பை நீக்குமாறு கோரி மேன்முறையீடு செய்தார். அதன் பிரகாரமே தீரப்பு மாற்றப்படடு அரசாங்க பதவி வகிக்க தகுதிப் பெற்றார். மகிந்த ராஜபக்ஷ அவரை நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் நியமித்தார்.

சுனமி அனர்த்தத்தை யாரும மறக்க மாட்டார்கள் 2004 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் மறுநாள் ஏற்பட்ட சுனாமியினால் 35,322 பேர் பலியாகினார்கள். 516,000 பேர் வீடு வாசல்களை இழந்தார்கள். அப்போது பிரதமராக மகிந்த ராஜபக்ஷவும் அவரது செயலாளராக லலித் வீரதுங்கவும் இருந்தார்கள்.

அப்போதைய ஜனாதிபதி செயலாளர் டபிள்யூ. ஜே. எஸ். கருணாரத்ன சுற்றறிக்கை ஒன்றை வெளியிடடு மக்கள் வங்கியின் விசேட கணக்கில் மட்டும் அனர்த்த உதவி ஜனாதிபதி நிதியம் நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு கூறியதை ஏற்காது அப்போதைய பிரதமரின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும் மேலதிக செயலாளர் காமினி செனரத்தின் கீழ் வங்கிக் கணக்கொன்று ஆரம்பிக்கப்ப்டடது.

பிரதமரின் புனர்வாழ்வு நிதியம் என்னும் பெயரிலேயே கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. கணக்கில் நூற்று இருபது மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது. சில தினங்களில் ஹம்பாந்தோட்ட சுனாமி உதவி மற்றும் அபிவிருத்தி தி்டடம் (ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை) எனும் கணக்கு ராஜகிரிய ஸ்டார்ன்டர்ட் சார்டட் கிளையில் திறக்கப்பட்டது கணக்கின் முகவரி 166/ஏ, பெங்கிரிவத்த பாதை, மீரிகான, நுகேகொடை, கணக்கு உரிமையாளர் காந்தினி என்பவராவார். அவர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரியாவார்.

அக் கணக்கிற்கு பிரதமர் புனர்வாழ்வு நிதிய கணக்கிலிருந்து 82958247 ரூபா மாற்றப்பட்டிருந்தது. அது மகிந்த ராஜபக்ஷ முதன் முறையாக ஜனாதிபதியாகப் போட்டியிட்ட காலமாகும். சுனாமி நிதியம் துஷ்பிரயோகம் தொடர்பாக கபீர் ஹாஷிம் முறைப்பாடொன்றையும் முன்வைத்திருந்தார். மகிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியாவதற்கு தன்னுடைய தீர்ப்பு காரணமென அத்தீர்ப்பு தொடர்பாக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கூறியது மக்களுக்கு ஞாபகத்திலிருக்கும் ஜயசுந்தரவினதும் மகிந்த ராஜபக்ஷவினதும் தவறான கொடுக்கல் வாங்கல்கள் கடந்த காலத்திலும் தற்போதும் அவ்வாறே உள்ளது.

அனுஷ பெல்பிட்ட போன்றோர் அக்கொடுக்கல் வாங்கல்களில் கையுதவிக்காரர்களாகவே எண்ண வேண்டியுள்ளது. சில் துணி வழக்கு மகிந்த ரெஜிமெந்துவின் வழக்குகளில் ஒன்று மாத்திரமே. இந்த வழக்கின் தீர்ப்பு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த 62 இலட்சம் மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பாகும். அவர்கள் எதிர்பார்க்கும் இன்னும் பல தீர்ப்புகள் உள்ளன. அவ்வழக்குகளும் இவ்வாறு நியாயமான முறையில் தீர்க்கப்படும் போது மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். 


Add new comment

Or log in with...