முறி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு | தினகரன்

முறி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

 
மத்திய வங்கியில் கடந்த 2015 - 2016 காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திறைசேரி முறி தொடர்பில் விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் (PCoI) உத்தியோகபூர்வ கால எல்லை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி நிறைவடையும் நிலையிலேயே, அதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் வர்த்தமானி இன்று (25) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான, கே.ரி. சித்ரசிறி, பிரசன்ன சுஜீவ ஜயவர்தன மற்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் கே. வேலுப்பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
 
இவ்வாணைக்குழுவின் கால எல்லை, கடந்த ஏப்ரல் 27 இல் நிறைவடைந்த நிலையில் ஜூலை 27 ஆம் திகதி வரை நீடிக்கபட்டிருந்தது.
 
தற்போது, இதன் கால எல்லை, மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு, ஒக்டோபர் 27 வரை அதன் உத்தியோகபூர்வ காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பில் நேற்றைய தினம் (24) அர்ஜுன் அலோசியஸின் இலத்திரனியல் உபகரணங்களை, CID யில் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்ததோடு, பின்னர் அவ்வுபகரணங்கள் அவரால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான விசாரணைகளுக்காக, வாக்குமூலம் வழங்க முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு இன்று (25) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், உத்தியோக ரீதியான பணி காரணமாக அவரால் சமூகமளிக்க முடியாது எனவும் மற்றுமொரு தினத்தில் ஆஜராவதாக,  அவரது வழக்கறிஞர் சந்துன் கமகேவினால், ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
 
ஆயினும் குறித்த ஆணைக்குழு மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...