Monday, April 29, 2024
Home » காட்டு யானைகளால் மக்கள் குடியிருப்புகளுக்கு பல்வேறு சேதம்

காட்டு யானைகளால் மக்கள் குடியிருப்புகளுக்கு பல்வேறு சேதம்

by Prashahini
October 16, 2023 10:55 am 0 comment

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் நேற்று முன்தினம் (15) காட்டு யானைகள் சில உட்புகுந்து பல்வேறான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியினை அண்டிய மக்கள் குடியிருப்புக்குள் உட்புகுந்த இக்காட்டு யானைகள் வீடுகள் மற்றும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை போன்றவற்றின் சுற்று மதிற்சுவர்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் பயன் தரும் பல மரங்களையும் நாசம் செய்துள்ளன.

மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம், செடி, கொடிகள் பலவற்றையும் இக்காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இரவு வேளைகளில் காட்டு யானைகள் பல இப்பிரதேசத்தில் நடமாடுவதால் பல்வேறான இன்னல்களுக்கு தாம் தினமும் முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெறுமதி மிக்க உணவுப் பைகளை இக்காட்டு யானைகள் கட்டடங்களின் சுவர்களை உடைத்து உண்டு நாசப்படுத்தியுள்ளதுடன், மக்களையும் அச்சப்படுத்தியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி மற்றும் அட்டாளைச்சேனை சம்புக்களப்பு போன்ற மக்கள் குடியிருப்புப் பகுதியினை அண்டிய பகுதி நீரேந்து பிரதேசமாகவும், நீர்த்தாவரங்கள் மற்றும் சிறிய பற்றைக்காடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. இப்பகுதியில் பகல் வேளைகளில் தரித்து நிற்கும் காட்டு யானைகள் இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து பல்வேறான தேசங்களை உண்டு பண்ணி வருவதுடன் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு காட்டு யானைகளின் வருகையினை தடுப்பதற்கு வழிவகையினை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT