Monday, May 6, 2024
Home » காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் 200 நாட்களைத் தொட்டது; 34,183 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் 200 நாட்களைத் தொட்டது; 34,183 பேர் பலி

மருத்துவமனை புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் 283 ஆக உயர்வு

by Gayan Abeykoon
April 24, 2024 8:03 am 0 comment

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று (23) 200ஆவது நாளை தொட்ட நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,183 ஆக உயர்ந்துள்ளது என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை குறைவதற்கான சமிக்ஞைகள் இல்லாத நிலையில் வடக்கு, மத்திய மற்றும் மக்கள் நிரம்பி வழியும் தெற்கு காசாவில் இஸ்ரேலின் அதிரடி தரைவழி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதோடு வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடைவிடாது இடம்பெற்று வருகின்றன.

மத்திய காசாவின் நுஸைரத், புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்கள் மீது கடந்த 48 மணி நேரமாக இடைவிடாது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கில் காசா நகர், அதன் கிழக்கு பகுதியான ஷுஜாயி மற்றும் செய்தூன் பகுதிகளில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அங்கு தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் கட்டடங்கள் தாக்கி அழிக்கப்பட்டு வருவதாகவும், அது ஒரு தகர்ப்பு நடவடிக்கை போன்று இருப்பதாகவும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் விபரித்துள்ளார்.

மறுபுறம் காசா நகரில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே மோதல்களும் பதிவாகியுள்ளன. இந்த நகரில் இராணுவ நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டு பலஸ்தீன போராட்டக் குழுக்கள் நீக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் கூறி வரும் நிலையிலேயே அங்கு மோதல் நீடித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

குறிப்பாக இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் நீடித்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. ரபாவின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் கடுமையான சூடு நடத்தி வருவதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. அங்கு ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் தாக்குதல்களில் 77,143 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கான் யூனிஸ் நகரில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் இந்த மாத ஆரம்பத்தில் வாபஸ் பெற்ற பின் அங்குள்ள நாசர் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு நிறுவனத்தால் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த புதைகுழியில் தேடுதல் நடத்தி வருவதோடு தமது அன்புக்குரியவர்களை தேடி உறவினர்கள் அங்கு விரைந்து வருகின்றனர். இந்த புதைகுழியை தோண்டுவது மற்றும் உடல்களை அகற்றுவதற்கு உதவியாக 1,500 பிரேதப் பைகள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வழங்கி இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

‘எனது மகன் ஜமாலின் உடலைத் தேடி ஐந்தாவது நாளாகவும் நான் இங்கு வந்திருக்கிறேன். துரதிருஷ்டவசமாக எனது மகனின் உடலை என்னால் கண்டுபிடிக்கக் கிடைக்கவில்லை’ என்று ராயிதா அபூ அல் ஓலா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

நாசர் மருத்துவமனை முற்றவெளியில் இந்தத் தேடுதல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதோடு இஸ்ரேல் இது தொடர்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய படை சுற்றிவளைப்புகள் மற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்குள்ள ‘மருத்துவ உட்கட்டமைப்புகள் சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது’ என்று ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரான ட்லாலங் மொகோகெங், ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலுக்கு மத்தியில், சுகாதார வழங்குநர்கள் பல மாதங்களாக மருத்துவப் பொருட்களுக்கான மிகக் குறைந்த அணுகலுடன் இக்கட்டான சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளும் ஸ்தம்பித்திருக்கும் சூழலில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தமது நிபந்தனைகளை மாற்றியதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஹமாஸ் அமைப்பு பதிலளித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமது அமைப்பின் நிபந்தனைகள் முதல் நாளில் இருந்து தெளிவானது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசே ஒப்பந்தத்தை தடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுடனான பணயக்கைதிகள் பேச்சுவார்த்தையில் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ‘கோல் கம்பத்தை நகர்த்தியதோடு அதன் நிபந்தனைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் கடந்த திங்களன்று (22) குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹமாஸ் அமைப்பு கூறியதாவது, ‘ஹமாஸ் மற்றும் போராட்டக்காரர்களின் நிபந்தனைகள் முதல் நாளில் இருந்து தெளிவாக உள்ளதோடு அவை கடந்த மார்ச் மாதம் முன்வைக்கப்பட்டு அனைத்து தரப்புகள் மற்றும் மத்தியஸ்தர்களால் வரவேற்கப்பட்டது.

இந்த நிபந்தனைகள் எமது மக்களின் தேசிய நிலைப்பாடு என்பதோடு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று, ஆக்கிரமிப்பு படைகளின் வெளியேற்றம் மற்றும் காசாவின் அனைத்து பகுதிகளிலும் தமது இடங்களில் இருந்து வெளியேறிய குடியிருப்பாளர்கள் திரும்புவது மற்றும் மீள் கட்டமைப்பை ஆரம்பிப்பதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கே இஸ்ரேல் முயற்சித்து வரும் நிலையில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி ஸ்தம்பித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT