Tuesday, April 30, 2024
Home » பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞனின் விதைகள் நீக்கம்

பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞனின் விதைகள் நீக்கம்

- பொலிஸ் சார்ஜன்ட், கான்ஸ்டபிள் கைது

by Rizwan Segu Mohideen
April 11, 2024 3:05 pm 0 comment

– போதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி தப்பியோடியதாக பொலிஸார் தெரிவிப்பு

மதவாச்சி பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் விதைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆயினும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலம்,

கடந்த ஏப்ரல் 07ஆம் திகதி மாலை மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள மதவாச்சி ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார் நோக்கிச் சென்ற பட்டா ரக லொறியை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டது. ஆயினும் அதனை மீறி பயணித்த குறித்த வாகனத்தை, பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று பின்தொடர்ந்த நிலையில், பொலிஸாரை தவிர்ப்பதற்காக அவர்கள் உள்வீதிகளில் சென்றபோது அப்பிரதேசத்தில் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று குறித்த லொறி தப்பி ஓடுவதைக் கண்டு, முச்சக்கரவண்டியில் பின்தொடர்ந்துள்ளனர். அதன்படி, அதிகாரிகள் லொறியை நிறுத்த முற்பட்டதுடன், லொறியை வீதியொன்றிற்குள் திருப்ப முயன்றபோது, ​​லொறியின் வேகம் குறைந்த நிலையில், சுற்றிவளைப்பு குழுவின் பொலிஸ் சார்ஜன்ட் லொறியின் அருகில் சென்று சோதனையிட்ட போது, லொறியை மீண்டும் முன்னோக்கி செலுத்தியுள்ளனர். அப்போது லொறியின் இடதுபுற கதவில் சார்ஜன்ட் தொங்கிய நிலையில், அவரை தள்ளிவிட்டு லொறியை செலுத்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒருவாறு லொறியை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் துலாவெலிய பகுதியில் லொறியை நிறுத்தியுள்ளனர்.

லொறியை மடக்கிப் பிடிக்கச் சென்ற போது, ​​அதிலிருந்த சாரதி உதவியாளர், லொறியில் இருந்த 5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய பிளாஸ்டிக் போத்தலை வீசியுள்ளதுடன், அந்த மதுபானத்துடன் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் உத்தரவை மீறி, மது போதையில் வாகனம் ஓட்டியமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த இளைஞனின் தரப்பு
இதேவேளை, குறித்த இளைஞர் லொறியை நிறுத்தாது சென்றதால் துரத்திச்சென்ற போக்குவரத்து பொலிசார் லொறியை நிறுத்தி இருவரையும் வாகனத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதாக காயமடைந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது தாக்குதலில் இளைஞனின் விதைப்பை பலத்த சேதமடைந்துள்ளதுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் விதைகள் அகற்றப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தாயார் தெரிவித்தார்.

மதவாச்சி, துலாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய திலிஷ சங்கீத எனும் இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பொலிஸ் தரப்பு
கைது செய்யப்பட்ட சாரதி மற்றும் சாரதி உதவியாளர் முறையே 23 வயது மற்றும் 20 வயதுடைய துலாவெலிய, மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், லொறியின் சாரதி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு, அநுராதபுரம் வைத்தியசாலை பொலிஸாரிடம் வாக்குமூலமொன்றை வழங்கிய அவர், தம்மை கைது செய்ய சென்ற போது, ​​மதவாச்சி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களின் வாக்குமூலம் தொடர்பில் அநுராதபுரம் வைத்தியசாலை பொலிஸார் கெபிதிகொல்லாவ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்ததையடுத்து, கெபிதிகொல்லாவ பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் இன்றையதினம் (11) கெபிதிகொல்லாவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT