Home » அமீரகம் உடனான இந்திய வர்த்தகம் 80 பில்லியன் டொலர்கள் வரை உயர்வு

அமீரகம் உடனான இந்திய வர்த்தகம் 80 பில்லியன் டொலர்கள் வரை உயர்வு

by Rizwan Segu Mohideen
April 5, 2024 3:59 pm 0 comment

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான (யூ.ஏ.ஈ) இந்தியாவின் வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் ஐக்கிய அரபு இராச்சியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதன் பயனாக இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பாரிய முன்னேற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த பத்தாண்டில் யூ.ஏ.ஈ இல் இந்தியா குறித்த பார்வையில் பாரிய மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூரத்தில் நடைபெற்ற தெற்கு குஜராத் வர்த்தக சம்மேளனத்தின் கூட்டுறவு உச்சிமாநாட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் மத்திய வர்த்தகம், கைத்தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் யூ.ஏ.ஈ பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்-மரி, வெளியுறவு அமைச்சர் தானி பின் அஹ்மத் அல் சியோதி ஆகியோர் தலைமையிலான ஐக்கிய அரபு இராச்சியம் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன் பயனாக யூ.ஏ.ஈ உடனான எமது வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.

அதேநேரம் முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி வரையும் எந்தவொரு இந்தியப் பிரதமரும் யூ.ஏ.ஈ. க்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவில்லை. பிரதமர் மோடி 2016 இல் மேற்கொண்ட விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. அபுதாபியில் முதலாவது இந்து கோவிலை நிர்மாணித்து திறந்து வைக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதேநேரம் தற்போது நாம் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறோம், மிக விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம். அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவை 30 ட்ரில்லியன் டொலர் பொருளாதாரமாக மாற்ற முடியும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT