Sunday, May 19, 2024
Home » தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒரு ஆசனமும் கிடைக்காது!

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒரு ஆசனமும் கிடைக்காது!

by Gayan Abeykoon
April 5, 2024 4:34 pm 0 comment

ந்தியாவில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று நடிகையும் அ.தி.மு.க நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் பரபரப்பு கருத்துக் கணிப்பீடு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளில் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, அ.ம.மு.க, த.மா.கா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பா.ஜ.க 19 இடங்களிலும், பா.ம.க 10 இடங்களிலும், அ.ம.மு.க 2 இடங்களிலும், த.மா.கா – 3 இடங்களிலும் மற்ற கட்சிகள் தலா ஒவ்வொரு இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பா.ஜ.கவில் தமிழகத்தில் முக்கியமான நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். அவர்கள் ஆபத்தை எதிர்கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதாவது தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னையில் போட்டியிடுகிறார். அவர் தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்தவர். அந்தப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழக பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை தற்போது, கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் 19 தொகுதிகளிலும் பா.ஜ.க வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் தீவிர பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மண்ணை அள்ளிப் போடுவது போல் அ.தி.மு.க நிர்வாகி காயத்ரி ரகுராம் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் பா.ஜ.கவுக்கு முட்டைதான் கிடைக்கும் என்கிறார் அவர். அதாவது ஆந்திரா, கேரளா, தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க ஒரு இடங்களில் கூட வெல்லாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உத்தரபிரதேசத்தில் 65 இடங்களிலும் மத்திய பிரதேசத்தில் 24 இடங்களிலும் குஜராத்தில் 23 இடங்களிலும் வெல்லும் எனக் குறிப்பிட்டுள்ள காயத்ரி, மற்ைறய மாநிலங்களில் பெரும்பாலும் ஒற்றை இலக்கங்களில் பா.ஜ.க வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.  திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 214 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெல்லும் என்கிறார் அவர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT