Thursday, May 9, 2024
Home » IPL 2024 CSK vs SRH: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சன்ரைசர்ஸுடன் மோதும் CSK

IPL 2024 CSK vs SRH: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சன்ரைசர்ஸுடன் மோதும் CSK

by Prashahini
April 5, 2024 12:03 pm 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று (05) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள CSK 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக செயல்படத் தவறினர். இந்த ஆட்டத்தில் பவர்பிளேவில் ஓட்டங்கள் சேர்க்க CSK தடுமாறியது. இது இறுதிக்கட்ட ஓவர்களில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கியது.

மிடில் ஆர்டரில் அஜிங்க்ய ரஹானே, டேரில் மிட்செல் ஆகியோர் போராடிய போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஷிவம் துபே பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் தொடுக்க முடியாமல் போனது. அதேவேளையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் முதல் இரு ஆட்டங்களிலும் களமிறங்காத தோனி 16 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசியது நேர்மறையான விஷயமாக அமைந்தது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSKவின் பந்து வீச்சும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. மத்தீஷா பதிரன, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் மட்டுமே குறைந்த அளவில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர். தீபக் ஷாகர், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சராசரியாக ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் விட்டுகொடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் முஸ்டாபிஸூர் ரஹ்மான் களமிறங்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

T20 உலகக் கோப்பை தொடருக்கான விசா நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்காக முஸ்டாபிஸூர் ரஹ்மான், பங்களாதேஷ் சென்றுள்ளார். 3 ஆட்டங்களில் 7 விக்கெட்கள் வீழ்த்திய அவர், களமிறங்காதது CSK அணிக்கு சற்று பின்னடைவை கொடுக்கக்கூடும். அவருக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி, ஷர்துல் தாக்குர், தீக்சனா, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் கணிக்க முடியாததாக திகழ்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 209 ஓட்டங்கள் இலக்கை துரத்தி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது ஹைதராபாத் அணி. அதன் பின்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ஓட்டங்களை வேட்டையாடி வரலாற்று சாதனை படைத்தது.

ஆனால் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக அப்துல் சமத், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 29 ஓட்டங்கள் சேர்த்திருந்தனர். மற்ற எந்த துடுப்பாட்ட வலீரர்களும் 25 ஓட்டங்களை எட்டவில்லை. தொடக்க வீரரான மயங்க் அகர்வாலிடம் இருந்து 3 ஆட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. இதுவரை 59 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ள அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சும் பலவீனமாக காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. ஜெயதேவ் உனத்கட், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கின்றனர். 4 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள பாட் கம்மின்ஸ் ஓரளவு ரன் குவிப்பை கட்டுப்படுத்துபவராக உள்ளார். அவருக்கு மற்ற பந்து வீச்சாளர்கள் உறுதுணையாக செயல்பட்டால் CSK துடுப்பாட்ட வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT