Monday, May 20, 2024
Home » தொழிலதிபர் தேசமானிய பெருமாள் பழனியப்பன் விசேட விருது வழங்கி கௌரவிப்பு
தினகரன் 92ஆவது பிறந்த தின நிகழ்வில்...

தொழிலதிபர் தேசமானிய பெருமாள் பழனியப்பன் விசேட விருது வழங்கி கௌரவிப்பு

by Gayan Abeykoon
April 5, 2024 12:08 pm 0 comment

தினகரனின் 92 ஆவது   பிறந்த தின நிகழ்வு லேக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.  தினகரன் பத்திரிகையுடன் நெருங்கிப் பயணிக்கும் சமூகப் பணியாளர்களும், நீண்ட காலம் ஊடகத்துறையில் பணியாற்றிய ஊடகத் துறை சார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  சபைத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் முன்னிலையில் தினகரன் , தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர்  தே.  செந்தில் வேலவர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது  ரஞ்ஜிதா வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தொழிலதிபர் தேசமானிய பெருமாள் பழனியப்பன்  விசேட விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருந்தால் இறைவன் எப்பொழுதும் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருப்பான் என்று கூறுபவர்தான் தேசமானிய  பெரியார்  பெருமாள் பழனியப்பன். மலையக மக்களின் கல்வி, பொருளாதாரம், சமய,  சமூக மேம்பாடு தொடர்பாக கவனம் செலுத்தி அக்கறையுடன் செயற்பட்டு வருகின்ற  மனித நேயமிக்க மனிதர். 2016 இல் சுற்றாடல் தினத்தில் கண்டி நகரில் வீட்டில் சுற்றுச் சூழலை வைத்திருந்தவர்களுக்கான முதலிடச்  சிறப்பு விருது,  அகில இலங்கை சமாதான நீதவான், கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் முதல் பொருளாளர், வர்த்தக ரீதியாக  அமெரிக்கா, ஆஜன்டீனா, துருக்கி, துபாய், லண்டன், பிரேசில்  என இன்னும் எத்தனையோ நாடுகளுக்கு  விஜயம் செய்தவர். சமூக வேந்தன், தேசமானிய போன்ற பல சிறப்புப் பட்டங்களையும் பெற்ற சமூகச் செயற்பாட்டாளர் தொழிலதிபர் தேசமானிய பெ. பழனியப்பன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

 

நீங்கள் ஒரு பிரபல்யமான சமூக செயற்பாட்டாளராக உருவாவதற்கான காரணம் என்ன?

பள்ளி செல்லும் பருவத்தில் மாடுகளுக்கு புல்வெட்டி வைத்திருப்பார் சின்னம்மா. நான் அந்தப் புல்லுகளை ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரம் சென்று தலையில் வைத்து தூக்கி வருவேன்.  அதே போன்று தோட்டத்தில் செய்கை பண்ணப்படும் மரக்கறி வகைகளை மிக நீண்ட தூரம் சந்தைக்கு எடுத்து செல்வேன். அவுஸ்திரேலியா ஆடுகள் வளர்த்தேன். இதுவும் ஒரு புதுமையான வாழ்க்கைதான்.

1972 களில் அட்டனில் ராம்  சைட் வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் கடையில்  வேலை பார்த்தேன். அங்கு கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகம். ஒரு தடவை விடுமுறை தினத்தில் சாரதி பயிற்சியினை பெற்றுக் கொண்டமைக்காக நான் தண்டனை வாங்கினேன். இந்த தண்டனை நியாயமானதாக இல்லை என்றாலும் அங்கு வேலை செய்தேன்.  இப்படிப் பல தரப்பட்ட  பாடங்கள் அந்த கடையில்  படித்தேன்.

1975 களில் திகன டொலமைட்  தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக தொழில் புரிந்தேன். அங்கு நிருவாக விடயங்களை எளிதில் புரிந்து கொண்டேன். இவை தவிர ஒருவரிடம் எப்படி வேலை வாங்குதல், ஒருவர் திடீரென சுகயீன விடுமுறை எடுத்தால்  அந்த இடத்தை எப்படி நிரப்புதல், புதிய ஒருவரை வேலைக்கு அமர்த்துதல் போன்ற பல விடயங்களை அங்கு கற்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் 1976 களில் மாமா மகள் லீலாவதியை திருமணம் செய்து கொண்டேன்.  எனக்கு மூன்று பிள்ளைகள்.  அக்கால கட்டத்திலேயே கண்டி கொழும்பு வீதியில்  அமைந்துள்ள மாமாவின் கடையான சந்திரா ஸ்டோர்ஸ்  கடையில் இணைந்து கொண்டேன். மருமகன் நன்றாக தொழில் செய்கிறான் என்ற கவனத்தை மாமாவிடமிருந்து பெறத் தொடங்கினேன். அது பல சரக்குக் கடையாகும். அங்கு வியாபாரத்திலும் ஈடுபட்டுக் கொண்டு சில சமயம் லொறி சாரதியார் வேலையினையும்  செய்தேன். லொறி சாரதி திடீர் சுகயீன விடுமுறையென்றால் அதிகாலை விடிய 2.00 மணிக்கு செல்ல வேண்டும். மாமா எழுப்பி விடுவார்.  கந்தளாய், இங்குரான போன்ற சீனித் தொழிற்சாலைக்கு லொறியினை எடுத்துச் செல்வேன். சாரதி விடுமுறையென்றாலும்  சீனி லொறியில் வந்து இறங்கும். வியாபாரம் தொய்வின்றி நடைபெறும்.  வாடிக்கையாளர்கள் கடைக்கு ஆர்வத்துடன் வருவார்கள்.

போகப்போக மாமாவின் கடையில் ஒரு முதலாளி என்ற அந்தஸ்து உருவானது. அந்த அந்தஸ்து நிரந்தரமானது அல்ல. அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கின்ற போதுதான்  அந்தஸ்து நிரந்தரமானதும் நிலையானதுமாக உருவெடுக்கும் என்ற சிந்தனை என்னிதயத்தில் சிறகுகள் முளைத்து பறந்து கொண்டிருக்கும் தருணத்திலேயே 1990 களில் நான் தனியாக கடையொன்றை திறந்தேன். அதன் மூலம்தான் நான் விருட்சமானேன். 200 குடும்ப உறவினர்கள் தொழில் ரீதியாக உயர்ந்து நிற்கின்றார்கள்.  இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வருகின்றேன்.

 

உங்கள் ஆரம்ப காலம் எப்படி இருந்தது?

1955 ஆண்டில் பண்டாரவளையில் பிறந்தவன்.  குடும்பத்தில் 07 சதோதரர்கள். நான் கடைசி செல்லப் பிள்ளை. ஒரு சகோதரன்,   ஐந்து சகோதரிகள். தந்தை புகையிரத திணைக்களத்தின் அதிகாரியாக கடமையாற்றியவர். அக்காலத்தில் அவருடைய  சம்பளம் சிறியளவினாலும் அன்று அன்றாட வாழ்க்கை நிலையை சமாளிக்க போதுமானதாக இருந்தது. அந்தக் காலம் மாதம் 1000 ரூபா சம்பளம் என்றாலும் அது பெரிய காசு.  நான் பாடசாலைக்கு என்னுடைய சொந்த ஊரான பண்டாரவளையிலேயே உள்ள புனித சென் மேரிஸ் கல்லூரிக்கும் மற்றும் புனித ஜோசப் கல்லூரிக்குமே  சென்றேன்.

தந்தை ஓய்வூதியம் பெற்று வந்தமையால் அப்பாவின் ஓய்வூதியப் பணம் குடும்ப செலவை சமாளிக்க  முடியவில்லை. கஷ்டங்களை எல்லாம் காட்டிக் கொள்ளாமல்  என்னை ஆளாக்கிய அம்மா, அப்பா மற்றும் சகோதரர்களுடைய நிலைமையை மெல்ல புரிந்து கொண்டேன்.  குடும்பத்தவர்கள் மீது அதிக ஈர்ப்புக் கொண்டவன். இரத்த பாசம் அதிகம். இருந்த இடத்தில் இருப்பதால் எந்தவிதமான அர்த்தங்களுமில்லை. இரத்த உறவுகளை வாழவைப்பது என்றால் ஊரை விட்டுச் செல்ல வேண்டும் என்ற யோசனை எனக்குள் இருந்தது. உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கு எத்தனையோ விதமான சவால்களையும் இடர்களையும் அனுபவித்திருக்க  வேண்டும். அவற்றை எண்ணி நான் பயந்து விடக் கூடாது. நான் ஓரே இடத்தில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றேனே என்று எனக்கு ஒரு கட்டத்தில் என் மீதே சலிப்பு ஏற்பட்டது.

நான் கடையொன்றுக்கு சென்றால் வீட்டுக்கு நாலு பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் இயலும், வியாபாரத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என நம்பினேன். ஏனெனில் அப்போது நிலவிய உக்கிரமான குடும்ப வாழ்க்கைச் செலவு காலத்தின் எல்லா நெருக்குவாரங்களுக்கும் மலையக குடும்பங்கள்  அடிபணிய வேண்டும் என்பது எனக்கு அவ்வளவு சரியாகப்பட வில்லை.

அப்படியே நான்  அப்பா உழைப்பில் வீட்டிலேயே இருந்திருந்தால் வெறும் சோம்பேறியாகவே வளர்ந்திருப்பேன். இரத்த பாசம் என்னை விடவில்லை. கொடிய வறுமையின் கீழ் நசுக்குப்படாமல் வாழ வேண்டும் என்கின்ற மனக்கொதிப்புணர்வு எனக்குள் எப்பொழுதும் பாத்தி கட்டி இருந்தன. அதுதான் 1972 களில் நான் வீட்டை விட்டு வெளியே வந்து ஹற்றனில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் கடையில் சேர்ந்த கதையாகும். இங்கே தான் முதல்பாடம்  படித்தேன்.

 

நீங்கள் தங்களுக்காக அல்லாமல் பிறருக்காக வாழ வேண்டும். பிறருக்காக உழைக்க வேண்டும். பிறருடைய சந்தோசத்திலே நீங்கள் சந்தோசம் காண வேண்டும் என்ற மனவெளிப்பாடுகள் தான் உங்கள் வாழ்க்கைப் புத்தகத்தில் தெளிவாக படிக்கக் கூடியதாக இருக்கின்றன. இந்த நல்லெண்ணம் தான் மேலும் உங்களை ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றதா?

நிச்சயமாக. நான்  கடந்து வந்த பாதையில் பிறர் வாழவே நான் கடினமாக உழைத்தேன்.  பல உண்மைகளை நிதர்சமானக சந்தித்து  இருக்கின்றேன். உண்மையிலேயே வெளிப்படையாக ஒழிவு மறைவின்றி சொல்லப்போனால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 200 பேர் அளவில் மிக உயர்ந்த நிலையில் செல்வச் செழிப்புடன் இருக்கின்றார்கள். தொப்புள் கொடி உறவுகள்  ஒளிந்து மறைந்து எங்கெல்லம் இருந்தார்களோ அங்கெல்லாம்  தேடிச் சென்று அவர்களைக் கொண்டு வந்து உயர்ந்த கதிரையில் அமர வைத்துள்ளேன். இந்த சந்தோசமான செய்தியிலேயே என் மனம் ஆத்ம திருப்தி கண்டு இருக்கிறது.  பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கு கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் குடும்ப உறவினர்களை இணைத்துக் கொள்வதில்லை. அவர்கள் இன்னும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் தனியாகவே தங்கள் வர்த்தகத்தை செய்து கொண்டு போவதையே காணுகின்றேன். அவர்கள் எங்களைப் பார்த்து பொறாமைப்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் இன்னும் பெரியளவில் வெற்றி இலக்க அடையவில்லை.

குடும்ப உறவை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலையில் நான் தேர்ந்தெடுத்த யுக்தியின் மூலம் நான் மட்டும் உயராமல் என்னோடு சேர்ந்த அத்தனை பேரும் இன்று எழுந்து நிற்கிறார்கள். உதவி செய்யும் மனப்பான்மை இருந்தால் இறைவன் அள்ளிக் கொடுப்பான். இதுவே என் வாழ்க்கையில் நடந்த உண்மை. நான் இந்தளவு உயர்வேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை. இது தான் உண்மை.

 

உங்கள் வாழ்க்கையின் வெற்றிப் பயணத்தில் துணை நின்ற பலர் இருக்கலாம். உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர் பற்றி கூறுவீர்களா?

உண்மையிலேயே இது நல்லதொரு கேள்வியாகும்.  நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. என் மாமாவுக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பைப் பலரும் அறிவார்கள். அதேபோல் முத்தையா முரளிதரனின் தந்தை தொழிலதிபர் எஸ். முத்தையா அவர்களுக்கும் எனக்கும் இடையிலான நெருக்கமான உறவு அதிகம். அநேகமாக என் வளர்ச்சியின் பின்னணியில் என் மாமாவும் தொழிலதிபர் எஸ். முத்தையாவும் இருக்கின்றார்கள்.

1990 களில் என் மாமாவின்   கடையிலேயே  நான் 15 வருடங்கள் ஊதியம் செய்தேன். அதற்காக மாமா அப்பொழுது 25 இலட்சம் கையில் பணம் தந்தார்.  அதற்கு மாமாவின் கடை எதிரே ஒரு கடை இருக்கிறது வாங்கவா என அவரிடம் கேட்டுத்தான் நான் வாங்கினேன். ஆனால் கடையினை நடத்த வசதியில்லை.  நான் அக்கடையினை நடத்துவதற்காக முத்தையாவிடம்  நிதி கேட்டேன். முத்தையாவும் மனோகரனும் சேர்ந்து கடையினை நடத்துவற்கான நிதி உதவியினை செய்தார்கள்.

நான் அன்று முதல் இன்று வரையிலும்  நட்பு ரீதியிலான உறவினையே கொண்டிருக்கின்றேன். முருகமலைக் கோயிலின் தலைவராக முத்தையா இருக்கின்றார். செயலாளராக நான் இருக்கின்றேன்.  இது எங்களுடைய நீண்ட நாள் உறவு. சமூக சமய இயக்கச் செயற்பாடுகளிலும் நாங்கள் இருவரும் எண்ணங்களில் ஒன்றுபட்டே செயற்படுகின்றோம் என்பதை நான் இந்த இடத்தில் நினைவு கூற விரும்புகின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் சாமிப் படம் வைத்திருக்கும் இடத்திலேயே என்னுடைய மாமாவின் படத்தையும் வைத்திருக்கின்றேன். இன்று நான் இந்த நிலைமைக்கு ஆளாவதற்கு அவர்தான் முக்கிய காரணம். நான் அவரிடம் கடையொன்று திறக்கப்போகின்றேன். அதுவும் உங்கள் கடைக்கு  முன்னால்  திறக்கப் போகின்றேன் அதற்கு ஆசீர்வாதம் தாருங்கள் என அவரிடம் கேட்டேன். சிலர்  தன் கடைக்கு முன்னால் அதே மாதிரியான கடையினை திறப்பதற்கு இடமளிக்க மாட்டார்கள். ஆனால் அவர் தாராளமாக திறந்து கொள்ளுங்கள். இந்த இடத்தில் நீங்கள் கடை திறக்காமல் வேறு யார்தான் திறப்பது. வேண்டாம் என்று யாரும் சொல்வார்களா?  உங்களுக்கு கிடைக்க வேண்டியது உங்களுக்கும். தனக்கு கிடைக்க வேண்டியது தனக்கும்  கிடைக்கும். எந்தவொரு சம்பாத்தியமாக இருந்தாலும் எல்லோருக்கும் அளந்தது தான் கிடைக்கும்  என்று கூறி நல்லாசிர்வாதம் வழங்கினார்.  தினமும் சாமிப்படம் கும்பிடுவேன். அதற்கு அடுத்ததாக  அவரின் படத்தை நான் தினமும் கும்பிட்டு வருகின்றேன். அவருக்கான மரியாதையினையும்  கண்ணியத்தையும் இன்று வரையிலும் நான் வழங்கி வருகின்றேன்.

ஏனென்றால் என் கடைக்கு வந்த அத்தனை பேரும்  இன்று பெரும்  புள்ளிகளாக கொழும்பில் வர்த்தகம்  செய்து கொண்டிருக்கின்றார்கள். ரஞ்சிதா  கடைக்கு  வருகை தந்த அத்தனை பேரும் வர்த்தகத் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும். யாரும் சோர்ந்து போகவில்லை. எல்லோரும் மின்னி மிளிர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 

உங்கள் மனதை நெருடிய சம்பவங்கள் எவையேனும் உண்டா?

1983 அக்கினி ஜுலை கலவரம் தமிழனாப்பட்ட யாரையும் விட்டு வைக்க வில்லை. வீடுகளும் கடைகளும் கட்டடங்களும் எரிந்து கரும்புகைப்படலம் வானத்தை இருளால் மூடிக்கொண்டன. டயருடன் சேர்ந்து உயிர்களும் உருகி எரியும் பிணவாடை வீசிய காலம். வெளியே மூச்சு விடப் பயம். திகில் நிறைந்த காலம். இப்படியான கால கட்டத்தில் இருந்து நான் உட்பட எங்கள் குடும்பத்தவர்கள் எவரும் தப்பித்துக் கொள்ள முடியாமல் போயிற்று.

இந்த சந்தர்ப்பத்திலேயே மாமா கடையின் வாடிக்கையளராக  இருந்த முஸ்லிம் சகோதரர் பாரிஸ் சுவீட் ஹவுஸ் கடை உரிமையாளரின் வீட்டில் புகழிடம் தந்தார்கள். அது பேராதனை வீதி கட்டுக்கலையில் இருந்தது.  அதே போன்று கண்டி கச்சேரிக்கு முன்னால் ஐ லண்ட் ஹோட்டல் உரிமையாளர் சிங்கள சகோதரர் புகழிடம் தந்தார். அவர் வீடு  அஸ்கிரியவில் இருந்தது.  இந்த நெருடல்கள் மையவாடி வரை தொடரும் போலும்.

 

உங்களது சமூகப் பணிகள் பற்றி

கண்டியில் சமய கலாசார விடயங்கள் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் கட்டிடப் பணிகள் என யார் எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் ஏராளமான  உதவி செய்துள்ளேன். அது கணக்கில்லை. கண்டிக்கு மட்டுமல்ல வெள்ளவத்தையிலுள்ள மயூரா பிளேஸ் கோயிலின் கட்டட நிர்மாணப் பணிகளுக்காகக் கூட கண்டியில் நடிகர் வை.ஜீ. மகேந்திரன்  குழுவினரை அழைத்து வந்து நிகழ்வினை நடத்தி வசூல் செய்து கொடுத்தேன்.

இவைதவிர அவசர மருத்துவ சிகிச்சைகள், கல்வி மேம்பாட்டுக்காக உதவுதல், வீடுகள் நிர்மாணித்துக் கொடுத்தல், பாடசாலைக் கட்டடங்கள் நிர்மாணிப்பதற்காக உதவி செய்தல், கொவிட் தொற்று முதல் அனர்த்தங்கள் ஏற்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் மறுதலிப்பு இல்லாமல் என்னுடைய பங்களிப்பு 1990களில் இருந்து இன்று வரையிலும் செய்து கொண்டு தான் வருகின்றேன்.  இத்தகைய உதவிகள் செய்வதன் மூலமே நான் மென்மேலும் உயர்ந்து நிற்கின்றேன். அடுத்தவர்களுக்கு உதவும் விடயத்தில் எனக்கும்  முத்தையா அவர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. தாம் மட்டும் சந்தோசமாக வாழ்ந்தால்  போதாது தாமும் தம்மை சுற்றியுள்ள சொந்தங்களும் பந்தங்களும் நண்பர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

நேர்காணல்: இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT