Monday, April 29, 2024
Home » இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பது மனிதகுலம் மீதான இறையன்பின் வெளிப்பாடு

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பது மனிதகுலம் மீதான இறையன்பின் வெளிப்பாடு

by sachintha
March 30, 2024 6:11 am 0 comment

நாளை ஈஸ்டர் திருநாள்

கிறிஸ்து உயிர்த்தார் என்பது வெறுமனே ஒரு வரலாற்றுச் செய்தி மாத்திரமல்ல, முழு மனிதகுலத்திற்குமான இறைவனது மாபெரும் வாக்குறுதியாகும்.

இற்றைக்கு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பதான கிறிஸ்து இயேசுவின் பிறப்பு இருளடைந்த உலகிற்கு ஒளியேற்றியிருந்தது மட்டுமல்லாது, அவரது சிலுவைப்பாடுகளும், மரணமும்,உயிர்ப்பும் பாவத்திலே மூழ்கி நிலைவாழ்வை இழந்துபோன மனித குலத்திற்கு நிலைவாழ்வின் நிச்சயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

கிறிஸ்து இயேசுவின் மரணமும், உயிர்ப்பும் உலக சரித்திரத்தில் இடம்பிடித்த உண்மைச் சம்பவம் மாத்திரமல்ல, முழு மனிதகுலத்தின் மீதான இறைஅன்பின் வெளிப்பாடுமாகும்.

மனிதகுலத்தின் பாவம் இறைவனோடிருந்த உறவில் பாரிய பிளவினை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாது, முழுஉலகினையுமே இருளடைய வைத்திருந்தது. இறைமைந்தன் கிறிஸ்து பூமிக்கு மனிதனாக வந்ததன் விளைவு மனிதவாழ்வியலில் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தினை பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டு நற்செய்தியாளர் ‘காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது’ (மத்தேயு4:16 ) எனக் கூறியிருந்தார்.

‘எவரெல்லாம் ஒளியாகிய கிறிஸ்துவை கண்டடைகின்றார்களோ, பாவமெனும் இருளகன்று அவர்களது வாழ்வு பிரகாசமடைகின்றது; ஏனெனில் ‘உலகத்தில் வந்து எந்த மனிதனையும் பிரகாசிக்கச் செய்கின்ற ஒளியே அந்த மெய்யான ஒளி’ என யோவான் நற்செய்தியாளர் திருவிவிலியத்தில் கிறிஸ்து இயேசுவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஆண்டுகள் தோறும் அனுஷ்டிக்கப்படுகின்ற கிறிஸ்து உயிர்ப்பின் திருநாள் கிறிஸ்தவ பண்டிகை அல்லது திருச்சபைக் கலாசாரம் என்பதற்கப்பால் முழு மனிதகுலத்திற்குமே கிறிஸ்து இயேசு மூலமாக இறைவனால் திறந்து விடப்பட்ட நிலைவாழ்வுக்கான வழியென்பதை நினைவூட்டுவதாக அமைகின்றது.

உரோம ஆட்சியாளர்களினாலும், யூத சமயத் தலைவர்களினாலும் சிலுவை மரத்தில் கொலை செய்யப்பட்ட தேவமைந்தனாகிய கிறிஸ்து இயேசு கல்லறையில் வைத்துக் காவல் காக்கப்பட்டிருந்தும், அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை கல்லறை வாயிலில் வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்ட பாரிய கல் புரட்டப்பட்டிருந்தமையும் கல்லறையுள்ளே கிறிஸ்துவின் இறந்த உடல் காணப்படாது உடலைச் சுற்றியிருந்த துணிகள் மடித்து வைக்கப்பட்டிருந்தமையும் உயிர்த்த கிறிஸ்துவின் தரிசனமும் மரித்த கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு சான்றாயமைவது போல் கல்லறையின் திறப்பும் கிறிஸ்து உயிர்ப்பின் உறுதியும் மனிதகுலம் முழுவதற்குமான நிலை வாழ்வின் நிச்சயத்தினையும் தருகின்றது.

கிறிஸ்து இயேசுவை மரணத்தை ஜெயித்த இறைவனென விசுவாசித்து, அவர் மூலமாய் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தந்தையாம் இறைவனுடன் ஒப்புரவானதை நினைவிற் கொண்டு, அவர் காட்டிய பாதையில் வாழ்வோர் மறுமையிலே உயிர்த்த கிறிஸ்துவுடன் நிலைவாழ்வடைவர் என்பது உறுதியாகின்றது.

ஆண்டுகள் தோறும் நினைவு கூரப்படும் கிறிஸ்து உயிர்ப்பின் நாள் இவ்வருடமும் (நாளை) நினைவு கூரப்படுகின்றபோது நிலைவாழ்வைத் தரும் கிறிஸ்து, மரணத்திலிருந்து எழுந்து நிலைவாழ்வைத் தர கல்லறையை விட்டு நம்மிடையே வந்துவிட்டார் எனும் உறுதியினால் மனமகிழ்ச்சி மேலோங்குகிறது.

கிறிஸ்து உயிர்த்தார் என்பதும் அதனை விசுவாசிப்போர் நிலை வாழ்வடைவர் என்பதும் உறுதியான நிலையில் நிலை வாழ்வின் நிச்சயத்தினைப் பெற்றோர் கிறிஸ்து எதிர்பார்க்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் சாட்சிகளாவதன் மூலம் எமக்கடுத்திருப்போரும் உயிர்த்த கிறிஸ்துவை விசுவாசித்து அவர் வழியாய் தந்தையாம் இறைவனோடு ஒப்புரவாவதன் மூலம் இறைவன் தரும் நிலைவாழ்வைப் பெற வழியேற்படும்.

அடைக்கப்பட்ட கல்லறையின் கல் புரட்டப்பட்டிருந்தமை கிறிஸ்து உயிர்ப்பை வெளிப்படுத்தியது போல, மனித உள்ளங்களிலுள்ள உயிர்த்த கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்கு தடையாகவுள்ள மனிதநேயமற்ற பண்புகள் புரட்டப்பட்டு கிறிஸ்துவின் அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற போது உயிர்த்த கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்து நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வழியேற்படும்.

இருளான உலகிற்கு ஒளியேற்ற ஒளியாம் இறைவன் உலகிற்கு வந்தார். பாவத்தில் பலியாகி நிலைவாழ்வை இழந்த மனுக்குலம் அனைத்திற்குமாய் தன்னைப் பலியாக்கி நிலைவாழ்வின் வழியினைத் திறந்தார்.

கிறிஸ்துவின் கல்லறை நாளை திறந்துள்ளது. கிறிஸ்து உயிர்ப்பை நினைவூட்டுகின்றது. எனவே திருவிவிலியத்தின் எச்சரிப்புக்கு செவிமடுப்போம். ‘காலம் நிறைவேறி விட்டது, கடவுளின் அரசு நெருங்கி விட்டது, அனைவரும் மனந்திரும்பி நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்’ (யோவான்14:15) எனும் செய்தியை ஞாபகப்படுத்த மீண்டுமொரு கிறிஸ்து உயிர்ப்பின் நாள் நமக்கு.

குழந்தைவேலு

சற்குணானந்தன்…

(அதிபர்) அக்கரைப்பற்று

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT