Friday, May 10, 2024
Home » அஸ்வெசும குடும்பங்களை வலுவூட்டும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அஸ்வெசும குடும்பங்களை வலுவூட்டும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 முடிவுகள்

by Prashahini
March 12, 2024 10:22 pm 0 comment

– பால்நிலை சமத்துவ சட்டமூலம் வர்த்தமானிக்கு
– வங்கி கடன் பராட்டே சட்ட தீர்மானம் வர்த்தமானிக்கு
– NSBM மருத்துவ மாணவர்களுக்கு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பயிற்சி

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்தும் உத்தேச முறையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்கள் 03 வருடங்களில் பொருளாதார, சமூக மற்றும் உளரீதியாக வலுவூட்டும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 16,000 பயனாளிக் குடும்பங்களை இலக்காகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதியனுசரணை மற்றும் உள்நாட்டு நிதிவசதி மூலம் முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும், குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அடையாளங் காணப்பட்ட பயனாளிக் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தில் (NSBM) மருத்துவக் கல்லூரியை தாபித்தல்

அரசுக்குச் சொந்தமான முழுமையான சுயாதீனமான நிதி ஈட்டும் நிறுவனமான வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தில் (NSBM) கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ பேரவையின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தலின் கீழ் மருத்துவ பீடத்தை தாபிப்பதற்கும் MBBS பட்டத்தை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த பட்டப்படிப்புக்காக வருடாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் 500 பேரை இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் குறித்த சிகிச்சைப் பயிற்சியை வழங்குவதற்காக பொருத்தமான அரச மருத்துவமனையாக ஒதுக்கிக் கொள்வதற்காக NSBM நிறுவகம் அனுமதி கோரியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்களின் சிகிச்சைப் பயிற்சிக்காக ஹோமாகம தள மருத்துவனையைப் பயன்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டிருப்பதால், அதற்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் NSBM நிறுவகத்தின் மருத்துவபீட மாணவர்களுக்கு சிகிச்சைப் பயிற்சிகளுடன் பேராசிரியர் அலகு வசதிகளுக்காக வளங்களைப் பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையை ஒதுக்கி வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவப் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள மருத்துவக் கல்வித் தரநியம கட்டளைகளுக்கு ஏற்புடையவாறு ஹோமாகம தள மருத்துவமனையின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு NSBM நிறுவகம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஹோமாகம தள மருத்துவமனையை சுகாதார அமைச்சின் விடயதானத்தின் கீழ் கையளிக்கப்பட்டு போதனா மருத்துவமனையாகத் தரமுயர்த்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.இலங்கை  தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் சீனாவின் தரநியம நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இறக்குமதி வரியல்லாத வர்த்தகத்தின் போது மேலெழுகின்ற தொழிநுட்ப ரீதியான தடைகளைக் குறைப்பதற்காக இலங்கை தரக்கட்டளை நிறுவனம் மற்றும் சீனாவின் தரநியம நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டை சுகாதாரம் மற்றும் அதுதொடர்பான செயற்பாட்டு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக குத்தகை அடிப்படையில் விடுவித்தல்

நாராஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துன்ன நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டை சுகாதாரம் மற்றும் அதுதொடர்பான செயற்பாட்டு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக 50 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் கையளிப்பதற்காக போட்டித்தன்மையான முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகளைப் பகுப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரையின் பிரகாரம், 0.1929 ஹெக்ரெயார் காணித்துண்டை, நைன்வெல்ஸ் ஹொஸ்பிட்டல் பிறைவெட் லிமிட்டட் மற்றும் எக்சஸ் இன்ரநெஷனல் பிறைவெட் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டிணைக்கப்பட்ட  M/s N W Reality (Pvt) Ltd இற்கு 50 வருடகால குத்தகை அடிப்படையில் கையளிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் நிலப்பரப்பில் நிறுவப்படும்/மிதப்பு சூரிய மின்கல வோல்ட் மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல்

மாத்தறை (10 மெகாவாற்று) மற்றும் வவுணதீவு (08 மெகாவாற்று) உபமின்கட்டமைப்பு நிலையங்களுக்காக சூரிய மின்கல வோல்ட் மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, கிடைக்கப்பெற்ற கருத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரையின் பிரகாரம், நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் நிலப்பரப்பில் நிறுவப்படும்/மிதப்பு சூரிய மின்கல வோல்ட் மின்னுற்பத்தி நிலையமொன்றை மாத்தறை உபமின்கட்டமைப்பு நிலையத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை Mahawa Solar (Pvt) Ltd  இற்கும் மற்றும் Heyleys Power Ltd  இற்கு வழங்குவதற்கும், வவுணதீவு உபமின்கட்டமைப்பு நிலையத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை Capital City Holdings (Pvt) Limited இற்கு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் 100 மெகாவாற்று, மட்டக்களப்பு சூரிய மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நிர்மாணித்தல்

மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி தொழிநுட்பத்துடன் 50 மெகாவாற்று அல்லது அதற்கு அதிகமான இயலளவுடன் கூடிய மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்திக்காக விருப்புக்கூற்று கோரல்களைப் பெறுவதற்கு 2021.08.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள விருப்புக் கூற்றுக்களைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரையின் பிரகாரம், 20 வருடங்களுக்கு தொழிற்பாட்டுக் காலப்பகுதிக்காக நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் மட்டக்களப்பு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் 100 மெகாவாற்று சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம்Solar Forge Batticaloa இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 1969 ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் தரநியமம் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை வெளியிடல்

தேசிய பொருளாதாரம், பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கில் இயைபுமுறைக் குறியீடு (HS code) 217 இன் கீழ் வகைப்படுத்தப்படுத்தப்பட்ட 122 பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது தரநியமம் மற்றும் தரக்கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக 1969 ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கமைய 2017 இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு (தரநியமம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. துரிதமானதும், பாதுகாப்பானதும், பயனுள்ள வகையிலான வர்த்தகப் போக்குவரத்திற்கான வசதிகளை வழங்கல் மற்றும் உள்ளுர் உற்பத்தி மற்றும் இறக்குமதி உற்பத்திகளுக்கான நியாயமான வாய்ப்புக்களை சான்றுப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் தரநியமங்கள் பற்றிய ஒழுங்குவிதிகளில் தற்போது காணப்படுகின்ற தரநியமங்கள் மற்றும் தர அளவுகோல்களை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் அரச நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பிரதான பங்காளர்களுடன் கலந்துரையாடி, தற்போது காணப்படுகின்ற தரநியமங்கள் மற்றும் தர அளவுகோல்களைத் திருத்தம் செய்து காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள 2017 இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு (தரநியமம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாதிப்புக்களின்றி இரத்துச் செய்து, 1969 ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2024 இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு (தரநியமம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 1,600 மில்லியன் ஜப்பான் யென் நிதியுதவியை ஜப்பான் அரசின் மூலம் வழங்கல் 

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகிய சமூகங்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக அரச துறையை வலுவூட்டுவதன் மூலம் ஜப்பான் அரசு தனது ஒத்துழைப்புக்களை விரிவாக்கம் செய்துள்ளது. அதற்கமைய, ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஆயிரத்து அறுநூறு மில்லியன் யென்களை (அண்ணளவாக 3.3 பில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

i. இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையணியில் எண்ணெய்க் கசிவுகளுக்கான பதிலளிப்புக்கள் மற்றும் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டம்

ii. வடமாகாணத்தின் பிரதான மருத்துவமனைகளில் தாய்சேய் மற்றும் மகப்பேற்றுச் சிகிச்சைகளுக்கான துணைக்கருவிகள் விநியோகம் மற்றும் வட மாகாணத்தின் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆடைக் கைத்தொழில் பாடநெறிகளுக்கான துணைக்கருவிகள் வழங்கும் திட்டம்

iii. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர்களின் பாதுகாப்புக்கான துணைக்கருவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்

அதற்கமைய, மேற்படி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நன்கொடை அளிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான அரசுடன் பரிமாற்றப் பத்திரம் மற்றும் ஏனைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. பால்நிலை சமத்துவம் தொடர்பான சட்டமூலம்

பால்நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் தொடர்பான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. Glocal Fair  மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டக் கோவை 2024 – ‘வெற்றியீட்டுவோம் இலங்கை’ 

உலகளாவிய தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் நாட்டின் உழைப்புச் சந்தையை மீள்கட்டமைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள விரிவான நிகழ்ச்சித்திட்டமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்புத் திணைக்களம், தொழில் திணைக்களம், சிரம வாசனா நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் மக்கள் தாம் வசிக்கின்ற பிரதேசங்களில் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் Glocal Fair  மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டத் தொடரை 25 மாவட்டங்களிலும் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எதிர்கால உழைப்புப் படையில் இணைந்து கொள்வதற்குள்ள அவர்களுடைய இளம் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் தொழில் நிபுணத்துவங்களை மேம்படுத்துவதற்கு வசதிகள் மற்றும் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல், மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் அதிகரிப்பதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வாய்ப்புக்களை வழங்குவதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கமைய குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் புடழஉயட குயசை மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டத் தொடரை நடாத்துவதற்கு மேற்கொண்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

11. 1990 ஆண்டின் 04 ஆம் இலக்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாட்டு) (திருத்த) சட்டமூலம்

கடன் பெறுநர்களால் மீளச் செலுத்தப்படாமல் இருக்கின்ற கடன்களை அறிவிடுவதற்காக குறித்த கடன்களுக்குப் பதிலாக ஈடு வைக்கப்பட்ட ஏதேனுமொரு ஆதனத்தை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு குறித்த வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்ற (பராட்டே சட்டம்) நடவடிக்கைகளை 2024.12.15 ஆம் திகதி வரைக்கும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், அதற்குரிய ஏற்பாடுகளை வகுப்பதற்கும் 1990 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாட்டு) (திருத்த) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும் 2024.02.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாட்டு) (திருத்த) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT