Home » மனைவியுடன் கடத்தல்; வாள்வெட்டு தாக்குதலில் யாழ். இளைஞன் உயிரிழப்பு

மனைவியுடன் கடத்தல்; வாள்வெட்டு தாக்குதலில் யாழ். இளைஞன் உயிரிழப்பு

- பழி தீர்க்கும் வகையில் நடாத்தப்பட்டதாக தகவல்

by Prashahini
March 12, 2024 8:58 am 0 comment

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் நேற்று (11) காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே நடைபெற்றுள்ளது.

காரைநகரில் இருந்து பொன்னாலை ஊடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் சென்ற தவச்செல்வம் பவிதரன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது, குறித்த தம்பதியினரை காரில் வாளுடன் வந்த குழுவொன்று அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாம் நோக்கி சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.

இந்நிலையில் கடற்படை முகாம் முன்பாக, குறித்த நபரை ஒரு காரிலும் மனைவியை மற்றுமொரு காரிலும் குறித்த வன்முறைக் கும்பல் கடத்தி சென்று, வாள்கள் மூலம் தாக்கிய நிலையில், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையில் சந்தேநபர்களால் காயங்களுடன் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, மனைவியை அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்க முயற்சி செய்த நிலையில், அயலவர்கள் முரண்பட்டமையினால் வன்முறைக் கும்பல் சித்தன்கேணி பகுதியில் அவரை இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த நபரின் மனைவி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், பொலிசார் சந்தேகநபர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT