Monday, April 29, 2024
Home » உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

by mahesh
February 26, 2024 11:46 am 0 comment
  • உலகிற்கு நிலைபேறான உணவை வழங்க புத்தாக்கம் மற்றும் காலநிலையுடன் ஸ்மார்ட்டான உணவு முறைகளின் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வு

U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர். ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில் முன்னேற்றமடைவது தொடர்பில் இங்கு பல்வேற கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. உலக வங்கியின் அறிக்கையின் படி, தெற்காசியா ஒருபுதிய காலநிலை இயல்பு நிலை” 1 அனுபவித்து வருகிறது. இது வெப்ப அலைகள், சூறாவளி, வரட்சி, வெள்ளம் போன்ற எதிர்பாராத வானிலை நிலைமைகள் என குறிப்பிடப்படுகிறது. அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், தெற்காசியா பிராந்தியத்தின் உணவு மற்றும் போசணை தொடர்பான பாதுகாப்பில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தடுப்பது தொடர்பில் அதன் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது

USSEC இன் South Asia and Sub-Saharan Africa (SAASSA) பிராந்திய பணிப்பாளர் Kevin Roepke, காலநிலை நெகிழ்வுத் தன்மை கொண்ட உணவு முறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் இங்கு தெரிவிக்கையில், “USSEC இன் Sustainasummit மன்றம் மூலம், ஒரு வலுவான உலகளாவிய உணவு முறையை உருவாக்குவதற்காக, US Soy போன்ற நிலைபேறான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து உணவு மற்றும் விவசாய வணிக நிறுவனங்களிடையே மூலோபாய ரீதியான உரையாடல்களை ஏற்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். US Soy, அதன் உயர் போசணைப் பொதி மற்றும் நம்பகமான விநியோகம் மூலம், தெற்காசியாவின் அதிகரித்து வரும் புரதத் தேவையை நிலைபேறான வகையில் பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமான நிலையை அது பெற்றுள்ளது.” என்றார்.

USSEC இன் US Soy Marketing & Sustainability – SAASSA பிராந்தியத் தலைவர் Deeba Giannoulis தெரிவிக்கையில், “இன்றைய உலகளாவிய நுகர்வோர், நிலைபேறான உற்பத்திகளில் தங்கள் விருப்பத்தை காண்பிப்பதோடு, உணவுகளின் மூலப்பொருட்கள் தொடர்பில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென குரல் எழுப்புகின்றனர். Sustainasummit ஆனது, தொழில்துறைகள் முழுவதும் விரிவான நிலைபேறான தன்மை தரநிலைகளை நிறுவுவதற்கான எமது உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதோடு, வணிக நிறுவனங்கள் மூலவளங்களை பொறுப்புடன் கொள்வனவு செய்ய உதவுகிறது. உதாரணமாக, இலங்கையில் உள்ள 11 கோழி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட ‘Fed with Sustainable U.S. Soy’ லேபலை பெற்றுள்ளமையானது, எமது முயற்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த முயற்சியானது US Soy Sustainability Assurance Protocol (SSAP) கடைப்பிடிப்பதை உறுதி செய்வதோடு, இது உயிர்ப் பல்வகைமை மற்றும் U.S. Soy விவசாயிகளின் உற்பத்தி முறைகள் போன்ற பிரிவுகளில் நிலைபேறான நடைமுறைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. Sustainasummit போன்ற முயற்சிகளில் நாம் வெற்றியடைந்துள்ளதால், அதிக பசுமையான, போசாக்கான எதிர்காலத்திற்கு வழி வகுக்கின்ற, இவ்வாறான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான விஞ்ஞான ரீதியான திறன் தொடர்பில் உரையாற்றிய, ISAAA-BioTrust இன் உலகளாவிய ஒருங்கிணைப்பாளரும் மலேசிய உயிரியல் தொழில்நுட்பத் தகவல் மையத்தின் (MABIC) நிறைவேற்றுப் பணிப்பாளருமான வைத்தியர் மகாலெட்சுமி அருஜனன் கருத்து வெளியிடுகையில், “நிலைபேறான தன்மைக்கான தூண்கள், விஞ்ஞானத்தின் மீது தங்கியுள்ளன. பச்சைவீட்டு விளைவு வாயுக்களைக் குறைத்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், இரசாயனங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல், விரையத்தை குறைத்து வளப் பயன்பாட்டை சிறப்பாக முன்னெடுத்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயத் தொழில்துறையால் உருவாக்கப்படும் சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கான தீர்வை விஞ்ஞானம் வழங்குகிறது. உணவுப் பாதுகாப்பை விஞ்ஞானம் ஆதரிப்பதோடு, பொருளாதாரத்தை அது மேம்படுத்துகிறது. உயிரியில் தொழில்நுட்பம் இதன் மையத்தில் உள்ளதோடு, சூழல் மற்றும் சமூக பொருளாதார சுகவாழ்வை அது ஆதரிக்கிறது.” என்றார்.

ஏனைய மூலங்களுடன் சோயாவை ஒப்பிடும்போது, US Soy இன் மிகக் குறைந்த காபன் வெளியீடு தொடர்பில் கருத்து வெளியிட்ட USSEC இன் நிலைபேறான தன்மைக்கான பணிப்பாளர் Abby Rinne, “எமது U.S. Soy விவசாயிகள், 2025 நிலைபேறான தன்மை இலக்குகளை அடைய, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உறுதிபூண்டுள்ளனர். இதில் மொத்த பச்சை வீட்டு வாயு வெளியேற்றம் மற்றும் நிலப் பயன்பாட்டை 10% ஆக குறைத்தல், வலுசக்தி செயற்றிறனை 10% அதிகரிப்பது ஆகியன அடங்குகின்றன. U.S. Soy விவசாயிகள் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி அதிக உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் முன்னணியில் உள்ளதோடு, காபன் வெளியீட்டு தடயத்தை குறைக்கும் விவசாய நடைமுறைகளைச் செயற்படுத்தி, வன வளத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறார்கள்.” என்றார்.

விவசாயம் என்பது பிரச்சினை அல்ல; அதுவே தீர்வு என்பது, Sustainasummit 2024 இன் ஒரு தொடரும் எண்ணக்கருவாகும். காலநிலை தொடர்பான சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கைக் கட்டமைப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தின் அவசியத்தை எடுத்துக் கூறிய, கலிபோர்னியாவின் UC Davis இல் உள்ள விலங்கியல் விஞ்ஞான பேராசிரியர் Frank M. Mitloehner தெரிவிக்கையில், “காலநிலை பற்றிய தீர்வின் ஒரு பகுதியாக விவசாயிகள் இருக்கலாம் ஆயினும், அதனை அடைய, தன்னார்வ மற்றும் ஊக்குவிப்பு அடிப்படையிலான கொள்கைகளின் சாத்தியத்தை நாம் வெளியிடுவது அவசியமாகும்.” என்றார்.

Sustainasummit இல், இலங்கையில் இருந்து மேலும் இரண்டு U.S. Soy வாடிக்கையாளர்களாக, Imo Chicken and Agro Private Ltd மற்றும் Fortune Agro Industries Pvt. Ltd ஆகிய நிறுவனங்கள், தங்கள் பொதிகளில் ‘Fed with Sustainable U.S. Soy’ லேபலைப் பின்பற்றுவதற்கான அனுமதிப்பத்திர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இதன் மூலம், ஒரு வருடத்திற்குள் இந்த லேபல் பயனர்களின் மொத்த எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்துள்ளது. இந்த அனுமதிப்பத்திர லேபலைத் ஏற்பதன் மூலம், U.S. Soy வாடிக்கையாளர்கள், நிலைபேறான தன்மை மற்றும் விநியோகச் சங்கிலி வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதால், சந்தையில் தமது தயாரிப்புகளை உயர்வாகவும், தனித்துவமானதாகவும் காண்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

Illinois Soybean Association, Iowa Soybean Association, United States Department of Agriculture (USDA) ஆகியவற்றின் ஆதரவுடன், USSEC இன் தலைவர் Stan Born, Iowa Soybean Association தலைவர் Suzanne Shirbroun, Iowa Soybean Association பிரதம நிறைவேற்று அதிகாரி Kirk Leeds, Iowa Soybean Association தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Brent Swart, Euromonitor International உலகளாவிய திட்ட முகாமையாளர் Puneet Tomar, Century Financial பெருநிறுவனங்கள் மற்றும் நிலைபேறான தன்மை பணிப்பாளர் Sameera Fernandes, ACI Logistics Ltd (Shwapno) வணிக பணிப்பாளர் Sohel Tanvir Khan, Patanjali பிரதம நிறைவேற்று அதிகாரி Sanjeev Astana உள்ளிட்ட தொழில்துறை சிந்தனைத் தலைவர்களுடன் Sustainasummit 2024 மன்றமானது, மிக அத்தியவசியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT