Saturday, May 4, 2024
Home » புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் முக்கியத்துவம்

புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் முக்கியத்துவம்

by manjula
February 10, 2024 6:00 am 0 comment

இலங்கையை வலுவான பொருளாதார நாடாகக் கட்டியெழுப்புவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பட்டு வருகின்றன.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. என்றாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமைப் பதவியை ஏற்றதைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் மேம்பாட்டுத் திட்டங்களின் பயனாக பொருளாதாரம் கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது.

ஆன போதிலும் நாட்டின் பொருளாதாரத்தை பலமானதாகவும் நிலைபேறானதாகவும் கட்டியெழுப்புவதன் அவசியமும் அதன் முக்கியத்துவமும் பரவலாக உணரப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது.

அவ்வாறான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் போது 2022 ஆம் ஆண்டில் போன்று மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடாது. நாடொன்று பொருளாதார ரீதியில் பலமாக இருக்கும் போது தான் மக்களும் வளமான வாழ்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பர்.

அந்த வகையில் மக்களுக்கு சுபீட்சமான பொருளாதார வாழ்வு கிடைக்கப் பெறக்கூடிய வகையில் அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாகவே 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது நாடும் மக்களும் முகம் கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புக்களும் குருகிய காலப்பகுதிக்குள் நீங்கக்கூடியதாக இருந்தது.

என்றாலும் அப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் இன்னும் காணப்படவே செய்கின்றன. அதனால் இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெற வேண்டிய தேவையும் உணரப்பட்டிருக்கிறது. அதற்கு அமைய பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆன போதிலும் இந்நாட்டை பலமான பொருளாதார நாடாகக் கட்டியெழுப்புவதற்கு பல தரப்பினரதும் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும். அந்த வகையில் புலம்பெயர் இலங்கையரின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

இவ்வாறான சூழலில், இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 07ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையருடனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது குறித்த திட்டங்களை புலம்பெயர் இலங்கையருக்கு எடுத்துக்கூறிய ஜனாதிபதி, அவற்றுடன் தொடர்ச்சியாக இணைந்து கொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பானது வெளிநாடுகளில் வதியும் புலம்பெயர் இலங்கையர் இந்நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதற்கு சிறந்த வாய்ப்பாகும். அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் இலங்கையர் முன்பாக உள்ளது.

இந்நாடு சுதந்திரமடைந்து கடந்த 4 ஆம் திகதியுடன் 76 வருடங்களாகி உள்ளது. அப்படியிருந்தும் இன்னும் மூன்றாம் மண்டல மற்றும் வளர்முக நாடாகவே இந்நாடு இருக்கின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகவும் பொருளாதார ரீதியில் பலமான நிலையை நாடு அடையாதிருப்பதும் ஒரு காரணம் தான்.

அதனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அது மிகவும் இன்றியமையாத தேவையாக விளங்குகிறது. அதன் காரணத்தினால் இந்நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்வாளர்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு நல்க வேண்டும். பெரும்பாலான புலம்பெயர்வாளர்கள் அதற்கான வசதிகளைத் தம்மகத்தே கொண்டவர்களாக உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளது பொருளாதார முன்னேற்றங்களுக்கு பாரிய பங்களிப்பு நல்குபவர்களாக புலம்பெயர்வாளர்களும் உள்ளனர். அவர்களது பங்களிப்புக்கள் எவ்விதத்திலும் குறைந்த மதிப்பிட கூடியவையாக இல்லை.

குறிப்பாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் புலம்பெயர்வாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்குபவர்களாக உள்ளனர் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்களே குறிப்பிட்டுள்ளனர். இந்தியா 150 மில்லியன் புலம் பெயர்வாளர்களைக் கொண்ட நாடான போதிலும் இலங்கையும்

குறிப்பிடத்தக்க அளவிலானோரைப் புலம்பெயர்வாளர்களாகக் கொண்டுள்ளது. அவர்களும் இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க முடியும். அவர்கள் தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் ஊடாக நிலைபேறான பொருளாதார அபிவிருத்திப் பாதையில் நாடு விரைவாகவே பிரவேசிக்கும். அதன் மூலம் நாடும் மக்களும் தான் பயனடைவர்.

ஆகவே ஜனாதிபதியின் அழைப்புக்கு ஏற்ப அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் உள்ள இலங்கைப் புலம் பெயர்வாளர்கள் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துன் இணைந்து கொள்ள வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT