Sunday, May 5, 2024
Home » நாட்டு நலன்களை கருத்தில் கொள்ளாத வெளிநடப்பு

நாட்டு நலன்களை கருத்தில் கொள்ளாத வெளிநடப்பு

by sachintha
February 9, 2024 6:00 am 0 comment

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொள்கை விளக்க உரையையும் அவர் நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் போது எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆனாலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, டொக்டர் ராஜித சேனாரட்ன, குமார் வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஏ,எச்.எம். பெளஸி, இஷாக் ரஹ்மான், பைசல் காசிம், வடிவேல் சுரேஷ், எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்டோர் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்து ஜனாபதியின் உரையை செவிமடுத்தனர்.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருப்பதற்கு வித்தூன்றிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செவிமடுத்தனர்.

நாட்டின் மீதும் மக்கள் மீதும் உண்மையான பற்று கொண்டவர்கள் செய்யும் பணியையே இப்பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் போது தான் மக்களுக்கு வளமானதும் சுபீட்சமானதுமான வாழ்வுக்கு வழிவகை செய்யக்கூடியதாக இருக்கும். அதற்கு ஆக்கபூர்வமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் விளைவாகவே நாடும் மக்களும் குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதார நெருக்கடியின் தீவிர பாதிப்புக்களில் இருந்து மீட்சி பெற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றியுள்ள பணிகள் வரலாற்றில் அழியாத் தடம் பதித்துள்ளன. அதனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரதும் கருத்தாகும்.

இவ்வாறான சூழலில் எதிர்க்கட்சி தலைவரும் அவர் சார்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாபதியின் கொள்கை விளக்க உரையின் போது சபையில் இருந்து வெளியேறியமையானது, அற்ப அரசியல் இலாபம் தேடும் நோக்கமே அன்றி வேறில்லை. ஆனால் முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்தில் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியமையானது நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவர்களது உண்மையான பற்றற்ற தன்மை பகிரங்கமாகியுள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.

அதேநேரம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் போது வெளிநடப்பு செய்ய எதிர்கட்சித் தலைவர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஏகமனதான தீர்மானத்துடன் எடுக்கப்பட்டதாக இல்லை என்பது தெளிவாகிறது. அதற்கு அக்கட்சியைப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் அந்த வெளிநடப்பை நிராகரித்தமை நல்ல எடுத்துக்காட்டாகும்.

நாட்டையும் மக்களையும் உண்மையாகவே நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது அற்ப அரசியல் இலாபம் பெறும் செயற்பாடே அன்றி வேறில்லை என்பதே சமூக ஆர்வலர்களது அபிப்பிராயமாகும்.

அந்த வகையில் ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் ராஜித சேனாரட்ன, ‘அரசியலை விட எனக்கு நாட்டின் எதிர்காலமே முக்கியமானது. நாட்டின் முன்னேற்றத்தின் பின்னரே கட்சி அரசியல் குறித்து சிந்திப்பேன். நெருக்கடிக்குள் இருந்து நாடு மீண்டு வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு இடையூறு விளைவிக்கத் தயாரில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான குமார் வெல்கம, ‘சபையில் இருந்து வெளியேறியவர்களின் நிலைப்பாடுகள் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியைப் போன்று ஒவ்வொரு விடயங்களையும் புறக்கணிப்பு செய்ய முடியாது. நாட்டின் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில் பங்குபற்றுவதே ஏற்புடைய விடயம்’ என்றுள்ளார்.

இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களே ஏகமனதான முடிவின்றி முன்னெடுக்கப்பட்ட வெளிநடப்பு என்பதற்கு போதுமான சான்றாக உள்ளது.

ஆனால் நாடு தற்போதுள்ள நிலையில் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதனால் தான் ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். கட்சி நலன்களுக்கு பாதிப்பான போதிலும் கூட நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தே தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பு. இதனை எவரும் மறந்து விடலாகாது. அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT