Friday, May 3, 2024
Home » நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தவறான அறிக்கைகள்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தவறான அறிக்கைகள்

by sachintha
February 8, 2024 6:00 am 0 comment

பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் சபாநாயகர் அலுவலகம்

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து அச்சட்டம் இயற்றப்பட்டமை தொடர்பான தவறான தகவல்களைத் திருத்தி உண்மையினைத் தெளிவுபடுத்துவதற்காகப் பொதுமக்களின் நலன் கருதி இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.

பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காகவும் அவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்காகவும் சட்டமியற்றல் செயன்முறை ஆரம்பத்தில் இருந்து விளக்கப்படுகின்றது.

சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகையில், அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அச்சட்டமூலத்தினை உயர்நீதிமன்றத்தின் முன் சவாலுக்குட்படுத்துவதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம், உயர்நீதிமன்றம் அவற்றினைப் பரிசீலித்த பின்னர், சம்பந்தப்பட்ட தீர்ப்பு சபாநாயகருக்கு மூன்று வாரங்களினுள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அதன் பின்னர், அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வின் முதலாம் நாளன்று சம்பந்தப்பட்ட அத்தீர்ப்பினைச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்பதுடன் முழுமையான தீர்ப்பு அன்றைய நாளுக்கான ஹன்சாட் அதிகார அறிக்கையில் வெளியிடப்பட வேண்டும் என அவர் கட்டளையிடவும் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட செயன்முறையினைத் தொடர்ந்து, 2023 ஒக்டோபர் 03 அன்று நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், உயர்நீதிமன்றத் தீர்ப்பினை 2023 நவம்பர் 07 அன்று பாராளுமன்றத்தில் வாசித்த சபாநாயகர், அத்தீர்ப்பு அன்றைய நாளுக்கான ஹன்சாட் அதிகார அறிக்கையில் வெளியிடப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதன் பின்னர், ஆர்வமுள்ள எத்தரப்பினாலும் அணுகக் கூடிய விதத்தில் அது ஒரு பகிரங்க ஆவணமாக மாறியது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சு (இந்த விடயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு) சட்ட வரைஞர் திணைக்களத்தின் உதவியுடன் உத்தேச திருத்தங்களை ஒருங்கிணைக்கின்றது. இத்திருத்தங்களை ஒருங்கிணைப்பது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக, அரசியலமைப்புடன் பொருந்தும் வகையில், சட்டமூலத்தினைச் சமர்ப்பித்த தரப்பினால் நிறைவேற்றப்படுகின்றது. திருத்தங்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மும்மொழிகளிலும் விநியோகிக்கப்படுகின்றன.

இதே செயன்முறை நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்திற்கும் பின்பற்றப்பட்டதுடன், இச்சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தின் முதலாம் நாளான 2024 சனவரி 23 அன்று காலையில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தங்கள் மும்மொழிகளிலும் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டதுடன், குழு நிலையானது இரண்டாம் நாளான 2024 சனவரி 24, பி.ப. 5.00 மணிக்கு ஆரம்பமானது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட திருத்தங்களின் பட்டியலின் பிரகாரம், ஒவ்வொரு திருத்தத்தினையும் நிறைவேற்றுவதற்காக அதனை வாசகம் வாசகமாகச் சபாநாயகர் சபையில் சமர்ப்பித்தார். அச்சந்தர்ப்பத்தில், சட்டத்துறைத் தலைமையதிபதியினைப் பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றத்தில் அரசாங்க அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கூடத்தில் சமுகமளித்திருந்த மேலதிக மன்றாடியார் நாயகம், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைவாகச் சகல கட்டாயமான திருத்தங்களும் குழுநிலையின் போது திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதைச் சபாநாயகருக்கு அறிவித்தார்.

இச்சந்தர்ப்பதில் எம். ஏ. சுமந்திரன் எம்.பி சில கரிசணைகளை எழுப்பிய சந்தர்ப்பத்தில், இது தொடர்பாகக் கௌரவ உறுப்பினருக்கு மேலும் விளக்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகத்தினைச் சபாநாயகர் வேண்டியமைக்கு மேலதிக மன்றாடியார் நாயகம் இயைபுற்றார்.

குழுநிலையின் போது குறிப்பிட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுப் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் எந்தச் சட்டமூலத்திற்கும் ஏற்புடையதான செயன்முறையின் பிரகாரம் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் மூன்றாம் மதிப்பீட்டின் பின்னர் பாராளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினால் வழிகாட்டப்பட்டவாறாக, இந்தத் திருத்தங்கள் அரசியலமைப்புடன் பொருந்துகின்றன எனும் சான்றறிவிப்பினைச் சட்டத்துறைத் தலைமையதிபதி வழங்கினார்.

இந்த ஒட்டுமொத்தச் செயன்முறையின் போதும், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு தரப்பினாலும் எந்தத் திருத்தத்தினையும் / திருத்தங்களையும் மற்றும் / அல்லது விதப்புரையினையும் / விதப்புரைகளையும் முன்மொழிவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ சபாநாயகருக்கு எவ்விதமான வகிபாத்திரமோ அல்லது அதிகாரமோ இல்லை என்பதுடன், இங்கே இவ்வாறான செயற்பாட்டிற்கான முழு அதிகாரமும் பாராளுமன்றச் சபையிடம், அதாவது, உறுப்பினர்களிடமே, பொதுவாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டமூலமொன்று உரிய முறையில் நிறைவேற்றப்பட்டதும், அரசியலமைப்பின் 79 ஆம் மற்றும் 80 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் அச்சட்டமூலத்திற்கான சான்றறிவிப்பினை அங்கீகரிப்பதற்குச் சபாநாயகர் கடப்படுத்தப்பட்டுள்ளார். இதன் பிரகாரம், 2024 பெப்ரவரி 02 அன்று நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்திற்கான சான்றறிவிப்பினைச் சபாநாயகர் அங்கீகரித்து அதனை, 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக ஆக்கினார்.

எனவே, சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவாறாக, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது என்பதைச் சபாநாயகரின் அலுவலகம் வாக்குமூலமாகத் தெரிவிக்கின்றது. பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயன்முறை சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்துடனும் சட்ட வரைஞர் திணைக்களத்துடனும் சேர்ந்து கூட்டாக இடம்பெறுவதால் சட்டமூலம் ஒன்று தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணான விதத்திலோ அல்லது அரசியலமைப்பினை மீறும் விதத்திலோ செயற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இச்செயன்முறையினை நன்கறிந்திருக்க வேண்டியவர்களே வேறு விதமாக இது பற்றிக் குறிப்பிடுவது மனம் வருந்தத்தக்கது என்பதுடன் சபாநாயகர் அவரின் தற்றுணிபுக்கு ஏற்பச் சட்டங்களை இயற்றலாம் மேலும் சட்டமூலங்களுக்குத் திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்கின்ற அவர்களின் மறைமுகக் குறிப்பீடுகள் அவர்களுக்கேயுரிய சட்ட அறிவிக்கும் அரசியலமைப்பு அறிவுக்கும் இழுக்கானதாகும்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்களுடன் இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கு இறுதிக் குழு நிலையின் போது சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களம் சமுகமளிப்பதற்கு (2017 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் முதல்) எந்த உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் போதிய ஆதாரமாக இருந்ததோ அந்த உறுப்பினர்களின் உளச்சான்றில் முன்னேற்றத்தினைக் காண்பது ஊக்கமளித்தாலும், என்னென்ன விதப்புரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதைச் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கூறினால், மேலே விளக்கப்பட்டவாறு இவ்வாறான விடயங்களில் சபாநாயகருக்கு தற்றுணிபு இல்லை என்கின்ற காரணத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இயலுமாக இருக்கும்.

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்பு சட்டத்தினை நிறைவேற்றியமை தொடர்பிலான சகல ஆவணங்களையும் நடவடிக்கைமுறைகளையும் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வந்து ஆராயுமாறும் விடயங்களைச் சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்காக விடயத்தில் அறிவுடைய அதிகாரிகளைக் கலந்தாலோசிக்குமாறும் அழைக்கப்படுகின்றனர்.

ஒரு சனநாயக முறைமையில் சட்டவாக்கத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்துவதோ அல்லது அதன் நம்பகத்தன்மையினைக் கீழறுப்பதோ நன்மை பயக்கும் ஓர் உபாயமார்க்கமல்ல. சனநாயக முறைமையில் ஒட்டுமொத்த மதிப்பீடும் சட்டவாக்கம் உள்ளிட்ட சகல பாகங்களினதும் கூட்டுச் செயற்பாட்டினையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதைச் சகல உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அலுவலகம் மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றது.

எச்.ஈ.ஜனகாந்த சில்வா…

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள்/ பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)

இலங்கை பாராளுமன்றம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT