Thursday, May 2, 2024
Home » பழிவாங்கும் மனநிலை

பழிவாங்கும் மனநிலை

திருமுழுக்கு யோவானின் கொடுமையான மரணம்

by damith
February 6, 2024 12:40 pm 0 comment

மனிதர் மத்தியில் பழிவாங்கும் எண்ணம் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது. பழைய ஏற்பாட்டு காலத்தில் அவ்வாறான பெருமளவு சம்பவங்களை குறிப்பிட முடியும்.

அந்த வகையில் ஸ்நாபக அருளப்பர் என அழைக்கப்படும் யோவான் ஸ்நானனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை மாற்கு நற்செய்தி நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது.

கடந்த வாரம் நற்செய்தி வாசகமாக தரப்பட்டுள்ள அந்த சம்பவத்தை மனிதரின் மனநிலைய பரிசோதிப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ளலாம். அது இந்தளவு கொடுமையானதா என்பதைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது.

இனி மாற்கு நற்செய்தியின் அந்தப் பகுதியை பார்ப்போம்.

“இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், “இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன” என்றனர்.

வேறு சிலர், “இவர் எலியா” என்றனர். மற்றும் சிலர், “ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே” என்றனர்.

இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால், அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்” என்று கூறினான்.

இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.

ஏனெனில், யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லிவந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால், அவளால் இயலவில்லை.

ஏனெனில், யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.

ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.

அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான்.

“நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.

அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன்தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.

உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.

இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும், விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.

உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி,

அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.

இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.”

இந்த சம்பவம் போன்ற செயற்பாடுகள் உலகம் வளர்ச்சியடைந்த இந்தளவு நாகரீக காலத்திலும் இடம்பெறுகின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. பழிவாங்கும் எண்ணங்கள் மனித மனங்களிலிருந்து இல்லாதொழிய நாம் இறைவனை பிரார்த்திப்போம்.

எல். செல்வா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT