Sunday, April 28, 2024
Home » கல்வித்துறை, தொழில்நுட்பத்துறைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கத் தயார்

கல்வித்துறை, தொழில்நுட்பத்துறைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கத் தயார்

புகழ்பெற்ற விஞ்ஞானியும் அமெரிக்க பேராசிரியருமான சிவா சிவநாதன் தெரிவிப்பு

by damith
February 5, 2024 8:00 am 0 comment

இலங்கையில் இலவசக் கல்வியை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று சிறந்த வருமானம் ஈட்டுபவர்கள் தங்களது வருமானத்தில் 5 வீதத்தை தாய்நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கினால் நாடு மிக விரைவில் பெரும் முன்னேற்றத்தை அடையும் என உலக புகழ்பெற்ற விஞ்ஞானியும் பேராசிரியருமான சிவா சிவநாதன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் நேற்றைய தினம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பேராசிரியர் சிவா சிவநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிகாகோ ஹி இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பேராசிரியர் சிவா சிவநாதன் நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து யாழ். இந்துக் கல்லூரி, யாழ்.வேம்படி மகளிர் உயர்தர கல்லூரிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் போர்ட் என்பவற்றுக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்வுகளில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையில் பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘’ஸ்டிம்’ கல்வி முறைமை மேலும் விரிவுப்படுத்துவதற்கும் அதனை ஊக்கப்படுத்துவதற்கும் கல்வியமைச்சரின் கோரிக்கைக்கு அமைய பேராசிரியர் சிவா சிவநாதன் தனது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவுள்ளார்.

கல்வி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பேராதனை பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவம், விலங்கு, கால்நடை சத்திரசிகிச்சை உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் தகவல் மற்றும் தொழில்னுட்ப திறன்களை பரிமாற்றிக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியமைச்சின் கோரிக்கைக்கு அமைய இலங்கையின் கல்வி, உயர்கல்வி, திறனபிவிருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக கலாநிதி சிவா சிவநாதன் எதிர்வரும் காலங்களில் பல செயற்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளார்.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை சிறந்த நாடு என்பதை குறிப்பிட்ட அவர், திட்டமிட்ட செயற்திட்டங்கள் மூலம் நாட்டை உலகின் முன்னணி நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியில் எதிர்கால சந்ததியை முன்னேற்றும் செயற் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் பிறந்து அமெரிக்காவில் தற்போது புகழ்பெற்ற விஞ்ஞானியாகவும் பல்கலைக்கழகம் ஒன்றின் ஸ்தாபகராகவும் விளங்கும் பேராசிரியர் சிவா சிவநாதன், வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வடக்கிலுள்ள பாடசாலைகளின் நிலைமைகளை அவதானித்துள்ளதாக குறிப்பிட்டதுடன் வடக்கில் போதைப் பொருள் கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

அது தொடர்பில் வடக்கிலுள்ள கல்லூரிகளின் அதிபர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இலங்கையின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கல்வி பொது தராதர சாதாரண தரத்திற்குப் பின்னரான இரண்டு வருடங்கள் மற்றும் உயர்தரத்திற்கு பின்னர் பல்கலைக்கழகம் செல்லும் வரையிலான இரண்டு வருடங்கள் என நான்கு வருடங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் வீணடிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர் அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் கல்வியமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT