Sunday, April 28, 2024
Home » டெங்கு அபாயம் தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்
புத்தளம் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன்

டெங்கு அபாயம் தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்

by damith
January 30, 2024 5:55 am 0 comment

புத்தளம் நகரசபை மற்றும் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தளம் பள்ளிவாசல்கள் நிர்வாகப் பிரதிநிதிகளுடன் டெங்கு அபாயம் குறித்த விஷேட கலந்துரையாடல் நகரசபை செயலாளர் எல்.பீ.ஜீ. பிரீத்திகா தலைமையில் அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது. தற்போது புத்தளம் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதையும் துரதிஷ்டவசமாக சில உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு இதனைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக புத்தளம் பிரதான பொது சுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் மற்றும் நகரசபை சுகாதார பிரிவு அதிகாரிகள் விவரித்தனர்.

அண்மையில் நகரசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்திருந்தது. எனினும் தற்போது மீண்டும் பிரதேசத்தில் வாரத்திற்கு சராசரியாக 30 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படுவதாகவும் இது ஆபத்தான நிலைமையை நோக்கி நகருவதாகவும் குறிப்பிட்ட பிரதான பொது சுகாதார பரிசோதகர், பள்ளி நிர்வாகங்களினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்பு மூலமே இவற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் மஹல்லாக்களிலும் நிர்வாகத்தினரையும் தன்னார்வலர்களையும் இணைத்துக்கொண்டு புத்தளம் நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT