Sunday, May 5, 2024
Home » வருமானம் ஈட்டும் வகையிலான பொருளாதார முன்னேற்றம் அவசியம்

வருமானம் ஈட்டும் வகையிலான பொருளாதார முன்னேற்றம் அவசியம்

by damith
January 29, 2024 6:00 am 0 comment

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருளாதார முன்னேற்றம் அத்தியாவசியம். பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி எந்தவொரு நாட்டினதும் மக்களால் சுபீட்சமான வாழ்வை அடைந்து கொள்ள முடியாது. அதன் காரணத்தினால் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைந்து கொள்வதில் ஒவ்வொரு நாடும் அக்கறையும் சிரத்தையும் எடுத்துக் கொள்கின்றன. அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரத்திற்கு வருமானம் அளிப்பதில் சுங்கம், வற் மற்றும் வருமான வரி ஆகிய மூன்றும் முக்கிய பங்களிக்கக் கூடியனவாக உள்ளன. அவை ஒவ்வொரு நாட்டினதும் வருமானத்திற்கான பிரதான மூலங்களாக விளங்குகின்றன.

இருப்பினும் சர்வதேச, பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் இந்தத் துறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் சுங்கம் உள்ளிட்ட ஏனைய வருமானத் திணைக்களங்களை முழுமையாக நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் சர்வதேச சுங்க தின வைபவம் கொழும்பு சுங்கத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற போது உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘2023 இல் நாம் எடுத்த முடிவுகளால், 2022 இல் பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கான வழி கிடைக்கப் பெற்றது. ஆனால் அது இன்னும் முடியவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதமாக ஆக்குவோம். 2026 இல் அதனை 15 வீதமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டதோடு ‘ஒவ்வொரு நாளும் கடன் வாங்குவதால்தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. இந்த பொருளாதார முறைமையை மாற்ற வேண்டும். பழைய பொருளாதார முறையால் நாட்டை முன்னேற்ற முடியாது’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட கடன் வாங்கும் முறையில் பலவீனங்களும் தவறுகளும் காணப்பட்டன. அவை நாட்டின் பொருளாதார சரிவுக்கு பாரிய பங்களிப்பு நல்கியது. பலவீனங்களையும் தவறுகளையும் கொண்ட கடன் வாங்கும் முறைமையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது. அதனால் அப்பொருளாதார முறைமையை மாற்றியமைப்பது மிகவும் அவசியமானது.

அதேநேரம் ஜனாதிபதி குறிப்பிடுவது போன்று, பழைய பொருளாதார முறைமையால் நாட்டை முன்னேற்ற முடியாது. இதற்கு கடந்த கால அனுபவங்களும் நல்ல முன்னுதாரணங்களாகும். அதனால் தற்போதைய பொருளாதாரத்தை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு பொருளாதாரத்தை ​மேம்படுத்துவது மிகவும் அவசியமானது. போட்டிச் சந்தையுடன், ஏற்றுமதியை அதிகரிக்கவும், அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும் முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு ஏற்ற வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

இதன் பொருட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், சர்வதேச மற்றும் பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் என்பவற்றைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ஏற்ப சட்ட ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். பொருளாதாரம் மேம்படும் போது அதன் பிரதிபலன்கள் மக்களை சென்றடையக் கூடியதாக இருக்கும். அது மக்கள் சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

2021இல் இந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. எரிபொருள், பசளை ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போது அவற்றுக்கு தட்டுப்பாடு கிடையாது. ஆனால் அவற்றைக் கொள்வனவு செய்ய பணம் இன்றியமையாததாகும். அதேநேரம் மக்கள் இன்னும் வாழ்க்கைச் சுமையை உணர்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியுடன்தான் அது குறையும்.

ஆகவே பொருளாதார ரீதியில் மக்கள் சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ப வருமானம் ஈட்டும் வகையில் முன்னேற்றமடைவது அவசியம். அதுவே ஜனாதிபதியின் விருப்பமாகும். அதற்கேற்பவே பொருளாதார முன்னேற்றத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்போதுதான் மக்கள் சுயமாக முன்வந்து வரிகளையும் செலுத்தக்கூடிய நிலை உருவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT