Sunday, April 28, 2024
Home » வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுப்பு

by Gayan Abeykoon
January 18, 2024 6:11 am 0 comment

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன் துப்புரவு பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினர்.

சீரற்ற காலநிலை மற்றும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகத்துக்குள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி சகல தரப்பு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வளாகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா, எம்.ஜி.எச்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், மற்றும் பேராசிரியர்கள், கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன், செயலாளர் எம்.எம்.முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

வெள்ள அனர்த்தம் காரணமாக  பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்கள்,  ஊழியர்களின்  ஒத்துழைப்பு காரணமாக பாரிய சொத்து இழப்புக்கள் ஏற்படவில்லையென உபவேந்தர் தெரிவித்தார்.

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பில் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

(திராய்க்கேணி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT