Sunday, April 28, 2024
Home » தெற்கு காசாவில் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்து சென்றார் பிளிங்கன்

தெற்கு காசாவில் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்து சென்றார் பிளிங்கன்

by sachintha
January 12, 2024 6:35 am 0 comment

காசா எதிர்காலம் குறித்து உடன்பாட்டை எட்ட முயற்சி

தெற்கு காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கள் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நேற்று (11) எகிப்தை சென்றடைந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த பிளிங்கன், நேற்று கெய்ரோவில் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போருக்குப் பின்னர் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சாத்தியமான ஒன்றிணைப்புக்கான சீர்திருத்த அமைப்பு ஒன்றுக்கு அப்பாஸ் விருப்பத்தை வெளியிட்டதாக பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் பிராந்தியத்தில் பரவுவதை தடுக்கும் முயற்சியாகவே பிளிங்கன் இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்த பின்னர் நான்காவது முறையாக மத்திய கிழக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் இடுபட்டதாக தென்னாபிக்கா தொடுத்திருக்கும் வழக்கு ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையிலேயே பிளிங்கனில் பிராந்தியப் பயணம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

எனினும் புதன்கிழமை (10) இரவு தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 62 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் நேற்று கூறியது. மறுபுறம் இஸ்ரேலிய தரைப்படைய காசாவில் தீர்க்கமான போரில் ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி ஊடகத்திற்கு விளக்கம் அளிக்கும்போது கூறியுள்ளார்.

மத்திய காசாவில் புதனன்று அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் நான்கு மருத்துவ பணியாளர்கள் மற்றும் இரு பயணிகள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் கூறியுள்ளது. மத்திய காசாவில் இருக்கும் டெயிர் அல் பலாஹ்வில் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தவர்கள் அல் அக்ஸா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

“இரவு தொடக்கம் பாடசாலையில் காயமடைந்தவர்கள் இருந்தபோதும் எந்த ஒரு வாகனம் அல்லது அம்பூலன்ஸும் அங்கு வரவில்லை” என்று ரமதான் டார்விட் என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

துருப்புகளுடன் மத்திய காசாவுக்கு சென்றுள்ள இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி, “இது ஒரு சிக்கலான போர்களம்” என்று வர்ணித்துள்ளார். “சண்டை தரையிலும், அதன் தரைக்கு மேலாலும் இடம்பெற்று வருவதோடு எதிரிகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மிக நீண்ட காலத்திற்கு அதன் பாதுகாப்பை தயார்படுத்தியுள்ளனர். இங்கு பல வீடுகளிலும் மக்கள் வாழ்கின்றனர். இது மிக மிகச் சிக்கலான போர்க்களமாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா எதிர்காலம்

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை கொல்லப்பட்டு மேலும் 250 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இந்தப் போர் வெடித்தது. இதில் 132 பயணக்கைதிகள் தொடர்ந்தும் காசாவில் போராளிகளின் பிடியில் இருப்பதாக கூறப்படுவதோடு அதில் 25 பணயக்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

பதில் நடவடிக்கையாக வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக காசா மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 23,357 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை கடைப்பிடிப்பதால் அங்கு உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

ஐ.நா உதவித் தலைவர் மார்டின் கிரிப்பித்ஸ் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காசாவின் சுகாதாரத் துறை மெதுவாக மூச்சுத்திணறி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு மனிதாபிமான நிலைமை விபரிக்க முடியாத அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எகிப்துடனான தெற்கு எல்லை நகரான ரபாவில் அளவுக்கு அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றும் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போர் உக்கிரமடைந்திருந்த வடக்கு மற்றும் தாற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கும் தெற்கின் கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் இருந்து மக்கள் ரபாவை நோக்கி தப்பி வருகின்றனர். இதனால் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் தற்போது ராபாவில் குவிந்துள்ளனர். இதனால் காசா சுகாதார அமைச்சின் முன்னாள் பணியாளரான சக்கி ஷஹீன் தனது கடையை தற்காலிக மருத்துவ நிலையமாக மாற்றியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் அவசரப் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றியதாக ஷஹீன் கூறுகிறார்.

“இதனால் மருத்துவ நிலையம் ஒன்றை திறப்பதற்கு நாம் தீர்மானித்ததோடு சுகாதார அமைச்சினால் எமக்கு உதவி கிடைத்தது” என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிக சுமையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளின் அழுத்தத்தை குறைக்கும் முயற்சியாகவே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“நாளொன்றுக்கு இரவு, பகல் என்று 30 அல்லது 40 சம்பவங்கள் வருகின்றன. உறங்கிக் கொண்டிருக்கும்போது யாராவது காயம் அல்லது தீக்காயத்துடன் வருவார்கள், நாம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்போம்” என்று அவர் தெரிவித்தார். காசாவுக்குள் சுமார் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இந்தப் பகுதி ஏற்கனவே பல ஆண்டு இஸ்ரேலிய முற்றுகையால் வறுமையில் சிக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த புதனன்று அப்பாஸ் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத்துடன் பேசிய பிளிங்கன், போருக்குப் பின்னராக காசாவின் எதிர்காலம் திட்டங்களை வகுக்க முயன்று வருகிறார்.

நீண்ட கால திட்டமாக பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவதை நோக்கிய உறுதியான படிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக பிளிங்கன் அப்பாஸிடம் குறிப்பிட்டார். எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசு பலஸ்தீன நாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பஹ்ரைனில் பேசிய பிளிங்கன், பலஸ்தீன அதிகாரசபையை சீர்திருத்த அப்பாஸ் உறுதி அளித்திருப்பதாகவும் அது காசாவில் பொறுப்பை ஏற்க முடியும் என்றும் குறிப்பிட்டார். எனவே, பலஸ்தீன தலைமையின் கீழ் காசா மற்றும் மேற்குக் கரை ஒன்றிணைய முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், காசாவில் போர் நீடிக்கும் சூழலில் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா உட்பட சிரியா, ஈராக் மற்றும் யெமனில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இடையிலான மோதல் தீவிரம் அடையும் அச்சம் அதிகரித்துள்ளது.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளியிட்டு வரும் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் இருந்து கப்பல்களை பாதுகாப்பதற்காக அமெரிக்காவினால் பன்னாட்டு கடற்படை செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதோடு ஈரானினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் ஆதரவுகள் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பிளிங்கன் எச்சரித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT