Friday, May 3, 2024
Home » ஆயிரம் யாத்திரிகர் ஹஜ், உம்ரா செல்ல சவூதி அரசினால் இலவச வாய்ப்பு

ஆயிரம் யாத்திரிகர் ஹஜ், உம்ரா செல்ல சவூதி அரசினால் இலவச வாய்ப்பு

இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்

by damith
January 8, 2024 12:37 pm 0 comment

அண்மைய காலங்களில் சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொண்ட பாராட்டத்தக்க நடவடிக்கைகளாக இரண்டு ஹரம்களையும் விஸ்தீரணப்படுத்தல், அதிவேக ரயில் சேவையினை ஆரம்பித்தல், மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்துவைத்தல், ஹஜ் யாத்திரிகர்களுக்கான கடவுச்சீட்டு, போக்குவரத்து வசதிகள், உணவு, குடிபானம், வதிவிட வசதிகளை மேம்படுத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இஸ்லாமியர்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு பேராவல் கொள்ளும் பிரதான இடங்களாக இரு ஹரம்களும் திகழ்கின்றன. அதற்கான பிரதான காரணமாக ஹஜ், உம்ரா பயணங்களை நிறைவுசெய்தல், இறையில்லத்தில் இஃதிகாப் இருத்தல், மஸ்ஜிதுன் நபவியைத் தரிசித்தல் மற்றும் பன்மடங்கு நன்மைகளை அள்ளித்தரும் தொழுகைகளைத் தொழுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

பெரும்பாலான முஸ்லிம்களின் கனவு அப்புண்ணிய பூமியைத் தரிசிக்க வேண்டும் என்றிருந்தாலும், பொருளாதார மந்த நிலையின் காரணமாக பலரின் கனவு நனவாகாமலேயே சென்று விடுகின்றது. எனினும் அண்மைய காலங்களில் சவூதி அரேபிய அரசாங்கம் பல நாட்டினருக்கும் இலவசமாக ஹஜ், உம்ரா செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க அம்சமாகும்.

இவ்வருடம் உலகின் உலக நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1000 யாத்திரிகர்களுக்கு சவூதி மன்னரின் நிதியில் இலவசமாக ஹஜ், உம்ரா மற்றும் ஸியாரத் செய்வதற்கான வாய்ப்பு வழங்குவதற்கு சங்கைக்குரிய இரு ஹரம்களினதும் பணியாளர், சவூதி அரேபிய மன்னர் ஸல்மான் இப்னு அப்தில் அஸீஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனை முன்னிட்டு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் இப்னு அப்தில் அஸீஸ் ஆலுஷ் ஷைஹ் கருத்துத் தெரிவிக்கையில், இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் இத்தகைய பெரும் சேவை புரிவதற்கும், உலகின் நாலாபுறங்களிலிமுள்ள முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமிய ஐக்கியத்தை ஏற்படுத்த முனைவதற்கும் சங்கைக்குரிய இரு ஹரம்களினதும் பணியாளர், சவூதி அரேபிய மன்னர் ஸல்மான் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களுக்கும், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் இப்னு அப்தில் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த இலவச ஹஜ், உம்ரா செயற்திட்டத்திற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் இஸ்லாமிய பிரபலங்கள், இஸ்லாமிய பேச்சாளர்கள், போதகர்கள், மத்ரஸாக்கள் மற்றும் பல்கலைக்கழக விவிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதற்கும், இஸ்லாமிய மார்க்கத்தின் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளைப் பரப்புவதற்கும், வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் இஸ்லாமிய விவகார அமைச்சு பெற்றுள்ள மகத்தான, தொடர்ச்சியான ஆதரவை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு புனித பள்ளிவாசல்களின் பணியாளர் மற்றும் முடிக்குரிய இளவரசருக்கும் அவர்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு வழங்கும் மகத்தான சேவைகளுக்காகவும், முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும், அந்நாட்டில் பாதுகாப்பு மற்றும் செழுமையை நிலை நிறுத்துவதற்கும், யாத்திரிகர்களின் ஹஜ், உம்ரா வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் அவர் வேண்டிக் கொண்டார்.

அஷ்ஷேக் ளபர் இப்னு முஹம்மத் அல்-அஜ்வாத் (பஹ்ஜி, மதனி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT