Thursday, May 2, 2024
Home » கல்முனை மாநகரசபை பிரதேசத்தில் முன்னோடி வேலைத்திட்டங்கள்

கல்முனை மாநகரசபை பிரதேசத்தில் முன்னோடி வேலைத்திட்டங்கள்

by damith
January 8, 2024 9:35 am 0 comment

கல்முனை மாநகரசபையை மக்களின் விருப்பத்துக்குரிய சபையாகவும், தேசிய ரீதியில் முன்னணி மாநகர சபையாகவும் அபிவிருத்தி செய்வதில் இலங்கை நிர்வாக சேவை (முதலாம் தரம்) சிரேஷ்ட உத்தியோகத்தரும், கல்முனை மாநகர சபை ஆணையாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி நடவடிக்ைக மேற்கொண்டு வருகின்றார். அதற்காக அவர் பல்வேறு முன்னோடி வேலைத்திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

‘பசுமை நகர்’ வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை மாநகர பிரதான வீதி மத்தியில் மரக்கன்றுகளை நட்டு, அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் கீழ், பொருத்தமான இடங்களில் பழமரம் மற்றும் நிழல்மரக் கன்றுகள் நடப்படவுள்ளன.

மாநகர சபை நிர்வாகப் பிரிவில் தினசரி அகற்றப்படும் கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஆரம்பக் கட்டமாக பாடசாலைகளில் இவ்வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படும் தரம்பிரிக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் வேலைத்திட்டம், விரைவில் குடியிருப்புப் பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆலோசனைகளை மாநகரசபை வழங்குவதுடன், கழிவகற்றலுக்குத் தேவையான பைகளையும் மாநகர சபை விநியோகிக்கவுள்ளது.

அத்துடன் கல்முனை மாநகர சபை நிர்வாகப் பிரிவிலுள்ள வீதிகளுக்கு,பெயரிடும் பணி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கல்முனை மாநகர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இப்பணியை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பணிக்கு அமானா வங்கி அனுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, கல்முனை மாநகர பஸ்நிலையத்தில் நவீன முறையிலான கழிவறை வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. கல்முனை பஸ்நிலையத்திற்கு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் பஸ்வண்டிகள் வருகை தருகின்றன. அதேபோன்று, 24 மணிநேரமும் பயணிகள் நடமாட்டம் காணப்படுகின்றமையால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை கழிப்பறை வசதிகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இவைதவிர, கல்முனை வர்த்தகர்களின் குறைகள் நிவர்த்திக்கப்படவுள்ளன. கல்முனை பொதுச்சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் கல்முனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் நீண்டகாலத் திட்டமொன்றை வகுத்து நடைமுறைப்படத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரை அபிவிருத்தி செய்து, அழகுபடுத்தும் வேலைத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரினதும் உதவி, ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை வரலாற்றுப் பதிவாகும். அதற்காக மாநகர ஆணையாளர் என்ற வகையில் பெருமிதமடைகின்றேன் என்கிறார் ஏ.எல்.எம்.அஸ்மி.

பொத்துவில் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆணையாளர் அஸ்மி சிரேஷ்ட சட்டத்தரணி ஆதம்லெவ்வை_ – ஹலீமா தம்பதியினரின் புதல்வராவார்.

முகம்மட் றிஸான் (அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT