Tuesday, April 30, 2024
Home » 2,258 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமான A/L பரீட்சை

2,258 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமான A/L பரீட்சை

- அனர்த்த பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடு தயார்

by gayan
January 4, 2024 6:40 am 0 comment

தேவையேற்படின் 117 அல்லது 1911 அவசர இலக்கத்துக்கு அழைக்கலாம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை நிலையங்களில், இம்முறை பரீட்சை நடைபெறுகிறது.

பரீட்சைகள் எதிர்வரும் (31) வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகும் பரீட்சையில் 03 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 02 இலட்சத்து 81 ஆயிரத்து 445 மாணவர்கள் பாடசாலை மட்டத்திலும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ள பரீட்சைகள் திணைக்களம், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சாத்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் ஊடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், தேவையான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

அது தொடர்பில் ஒருங்கிணைப்பு முறை தயாரிக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே வேளை, நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வழமையான பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அனுராதபுரம் கெகிராவை, பொலனறுவை, அம்பாறை, பஸ்ஸர, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாணவர்களுக்காக பொலனறுவை வெலிக்கந்தை, அரலஹங்வில மற்றும் திம்புலாகல பிரதேசங்களில் வசிக்கும் பரீட்சாத்திகளை கவனத்திற் கொண்டு விசேட பரீட்சை நிலையம் மன்னம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT