Monday, April 29, 2024
Home » பதுளை மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்

பதுளை மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்

- A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் அவதானம்

by Prashahini
January 3, 2024 3:43 pm 0 comment

பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து வரும் மாணவர்களை திடீர் அனர்த்த நிலைமைகளில் இருந்து பாதுகாத்து பரீட்சைக்கு தோற்றுவதை உறுதிபடுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன தெனிபிட்டிய, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன ஆகியோர் தலைமையில் நேற்று (2) பதுளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது,கடும் மழையின் காரணமாக நிலச்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதிகளின் வழியே பரீட்சைக்கு மாணவர்களை அழைத்து வருவது மற்றும் அனர்த்த பகுதியில் அமைந்துள்ள 11 பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களை அழைத்து வருதல், அவசர அனர்த்தம் ஏற்படும் போது அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மெட்டிக்காதென்ன, வெல்கொல்ல ஆகிய பாடசாலைகளில் இருந்து பசறை மத்திய மகா வித்தியாலயத்திற்கு பரீட்சைக்காக வருகைத் தரும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், லுனுகலை மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக பரீட்சை நிலையம் ஒன்றை தாபித்தல் , மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பரீட்சை காலப் பகுதியில் ஜேசீபி (JCB) இயந்திரங்களை 24 மணி நேர அவசர தேவை நிமித்தம் நிறுத்தி வைத்தல், அதன் சாரதிகளுக்கு தங்குமிட வசதி வழங்குதல் மற்றும் சிசுசரிய மாணவர் போக்குவரத்து பஸ் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன பாடசாலை, தனியார் பரீட்சாத்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிப்பதன் மூலம் தேவையற்ற அசெளகரியங்களை தவிர்க்க முடியும் என்றார்.

இக்கலந்துரையாடலில் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் நிமேஷா பிரியங்கி வனசிங்க, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார , கல்வி உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், வீதி போக்குவரத்து அதிகார சபை உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பசறை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT