Monday, April 29, 2024
Home » இறையருளைப் பெற…

இறையருளைப் பெற…

by Gayan Abeykoon
December 29, 2023 11:28 am 0 comment

தான தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகம் வலியுறுத்தியுள்ளது. ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தில் இருந்து `ஸக்காத்’ வழங்குவதை கட்டாயமாக்கியுள்ள இஸ்லாம் ஸதகாவையும் ஊக்குவித்துள்ளது.​ ஒவ்வொரு இறைவிசுவாசியும் தனது வருமானம் மற்றும் சொத்துக்களை கணக்கிட்டு அதற்கு ஏற்ப பணமாகவோ, பொருளாகவோ, தானியமாகவோ ஸக்காத் வழங்குமாறு கட்டளையிட்டுள்ளது.

தர்மம் செய்வதன் அவசியத்தை அல் குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்தியம்பியுள்ளது. பல நபிமொழிகளும் தர்மம் செய்வதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன்களை பட்டியல் இட்டுள்ளது.

`தர்மம் செய்வதானது ஒரு மனிதனின் பாவத்தை அழித்து விடுகிறது’ என்று கூறியுள்ள நபி (ஸல்) அவர்கள் தர்மத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், `தண்ணீர் நெருப்பை அழிப்பது போன்று தர்மம் பாவங்களை அழித்து விடுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்-: இப்னு மாஜா, அஹ்மது, திர்மிதி)

மற்றொரு தடவை, ‘ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியைத் தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்றும் அன்னார் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

இந்த நபிமொழிகள் தானதர்மத்தின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்தியம்பக்கூடியனவாக உள்ளன.

மேலும் தர்மம் செய்வது வெளிப்படையாக இருக்க வேண்டுமா? அல்லது இரகசியமாக இருக்க வேண்டுமா? என்பது குறித்தும் அல் குர்ஆன் எடுத்துக்கூறியுள்ளது.

“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே. ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும். எனினும் அவற்றை மறைத்து ஏழை-எளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும். நீங்கள் செய்வதை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:271).

இதேவேளை நபி (ஸல்) அவர்கள், “இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில், அல்லாஹ் தன் நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். அவர்களில் ஒருவர் தன் வலக்கை செய்யும் தர்மத்தை தன் இடக்கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் ஆவார்” என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

அதேநேரம் தர்மம் செய்வது என்பது நமக்கு தேவையற்றவற்றையும் நாம் பயன்படுத்தாதவற்றையும் பழைய பொருட்களையும் கொடுப்பது அல்ல. நாம் நேசிக்கும் பொருட்களில் இருந்து வழங்குவது தான் தர்மங்களில் சிறந்தது ஆகும். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் வழங்கியுள்ள இந்த அறிவுரை நல்ல எடுத்துக்காட்டாகும்.

நபித்தோழர்களில் ஒருவரான அபூ தல்ஹா (ரழி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்கு பேரீச்ச மரத்தோட்டங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. இவ்வாறான சூழலில்

‘நீங்கள் நேசிக்கும் பொருட்களில் இருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’ என்ற (அல் குர்ஆன் 3:92) இறைவசனம் அருளப்பட்டதும், அபூ தல்ஹா (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘`இறைத்தூதர் அவர்களே, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ என அல்லாஹ் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்ய விரும்புகிறேன்” எனக்கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதை அவரது உறவினர்களுக்கு கொடுக்குமாறு தெரிவித்தார். அபூ தல்ஹா (ரழி) அவர்கள் இதை ஏற்றுக்கொண்டு தன் தோட்டத்தை தம் நெருங்கிய உறவினருக்கும், தம் தந்தையுடன் பிறந்தவரின் பிள்ளைகளுக்கும் பங்கிட்டு வழங்கினார்.

(ஆதாரம்-: புஹாரி)

தர்மம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மற்றொரு நபி மொழி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது. `தர்மத்தில் சிறந்தது எது?’ என மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவ, `குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது என்றார்கள். அத்தோடு ‘நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்’ என்றும் அன்னார் கூறினார்கள்.

(ஆதாரம்: அபூதாவூத், அஹ்மத்).

`தர்மம் செய்வதன் விளைவாக செல்வத்தில் எதுவும் குறைவடையாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை மேலும் அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்” எனவும் நபி (ஸல்) கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்).

எனவே நாம் விரும்பிய பொருட்களில் இருந்து மனமகிழ்வுடன் தர்மம் செய்வோம், இறையருள் பெறுவோம்.

✒️ அம்மார்… ✒️

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT