Home » மருதமுனையில் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமாக ‘பிரண்ட்ஷிப் போரம் உதயம்

மருதமுனையில் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமாக ‘பிரண்ட்ஷிப் போரம் உதயம்

by Gayan Abeykoon
December 28, 2023 2:34 pm 0 comment

ருதமுனை பிரதேசத்தில் சமூக அபிவிருத்திக்கான ஸ்தாபனமாக ‘பிரண்ட்ஷிப் போரம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ‘நல்லதெனில் நன்றே செய்தல்’ எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ‘கடந்த காலத்தை முன்னிறுத்தி எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம்’ எனும் வாசகத்தின் கீழ் ஒரு புதிய சக்தியாக இளைஞர்கள் ஒன்றிணைந்து ‘பிரண்ட்ஷிப் போரம்’ எனும் சமூக அபிவிருத்திக்கான ஸ்தாபனத்தை நிறுவியுள்ளனர். இதன் தொடக்க விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான ஊடகவியலாளர் ஏ.ஏல்.எம்.ஷினாஸ் தலைமையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மருதூர்கனி மண்டபத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மருதமுனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேசத்தின் மேட்டுவட்டை பகுதியில் கட்டப்பட்ட 179 வீடுகளில் பகிர்ந்தளிக்கப்படாமல் கிடந்த 82 வீடுகளில் 67 வீடுகள் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மேற்கொண்ட முயற்சியினால் கையளிக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவராக அவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த வீட்டுத் திட்டத்தை பயனாளிகளுக்கு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் இவ்விடயத்தில் தீவிரமாகப் பாடுபட்ட பிரதேச செயலாளர் ஜெ.லியாகத்அலி ஆகியோர் மருதமுனை பிரண்ட்ஷிப் போரத்தினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

அத்துடன் பிரண்ட்ஷிப் போரத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அப்துல் கையூம் பாரிஸ் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளதைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

எதிர்காலத்தில் மருதமுனை பிரதேசத்தின் கல்வி, கலை, கலாசாரம், பொருளாதார, சமய, சமூகம்சார் அபிவிருத்தி விடையங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு முறையை உருவாக்குதல், துறை சார்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் மற்றும் சேவையாற்றி ஓய்வு நிலையில் உள்ள அதிகாரிகளை பாராட்டி கௌரவித்தல், திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை நிலைநாட்டும் மாணவச் செல்வங்கள் மற்றும் துறை சார்ந்தவர்களை ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக பாராட்டி கௌரவித்தல் போன்ற நிகழ்வுகளை பிரண்ட்ஷிப் போரம் முன்னெடுக்கவுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்செய்க் எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா, மூத்த ஊடகவியலாளரும் மருதமுனை ஊடக பேரவையின் தலைவருமான எம்.எல்.எம்.ஜமால்தீன், ஊடக ஆலோசகர் எஸ்.எம்.எம்.அன்ஸார், சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன் மற்றும் அதிபர்கள், ஊர்ப்பிரமுகர்கள், போரத்தின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT