Home » சட்டவிரோத காரியங்களால் சம்பவிக்கின்ற அனர்த்தங்கள்!

சட்டவிரோத காரியங்களால் சம்பவிக்கின்ற அனர்த்தங்கள்!

by gayan
December 9, 2023 6:00 am 0 comment

நன்கு திட்டமிடப்படாத அல்லது சட்டவிரோத கட்டுமானங்கள் ஆபத்தை ஏற்படுத்துமென்பதற்கு சிறந்த உதாரணம் சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் ஆகும். சென்னையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் ஏற்பட்டது போன்றதொரு வெள்ளம் சில வருடங்களுக்கு முன்னரும் ஒரு தடவை ஏற்பட்டிருந்தது. சென்னை மாநகரமே முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. அதேபோன்றதொரு வெள்ளமே ஐந்து தினங்களுக்கு முன்னரும் அங்கு ஏற்பட்டிருந்தது.

சென்னையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் பெய்தது சாதாரண மழையல்ல. தொடர்ச்சியாகப் பெய்த பேய்மழை அதுவென்று வர்ணிக்கின்றார்கள் வானிலை அவதான நிலையத்தினர்.

“சென்னையில் பெய்த மழைக்கு எந்த நகரமும் தாக்குப்பிடிக்காது. இப்படி பேய் மழை பெய்தால் எந்த நகரமாக இருந்தாலும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும். சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மி.மீ முதல் 1100 மி.மீ ஆக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு மழை 24 மணி நேரத்தில் பெய்து இருக்கிறது” என்று வளிமண்டலவியல் அதிகாரிகள் கூறினர்.

எனவேதான் இத்தனை பெரும் வெள்ளம் அங்கு ஏற்பட்டு பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது சென்னையில் 24 மணி நேரத்தில் 40 செ.மீ மழை பெய்துள்ளது.குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததே வெள்ளப் பாதிப்புக்கு மிக முக்கிய காரணம்.

சாதாரண பிரதேசமென்றால் வெள்ளம் உடனடியாகவே வடிந்தோடியிருக்கும். இத்தனை பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் சென்னையில் தற்போது எங்குமே கட்டடங்களாகவே காட்சியளிக்கின்றது. வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு இடமே கிடையாது. குறைந்த நேரத்தில் கொட்டிய மழையின் அத்தனை நீருமே வடிந்தோட வழியின்றிப் போனதால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது சென்னை மாநகரம்.

“சென்னையின் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மழையை சமாளிக்கலாம். முன்னொரு காலத்தில் மீனவக் கிராமமாக இருந்த பழைமையான நகரமான சென்னை பின்னாளில் வளர்ச்சி அடைந்து பெருநகரமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் 28 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை தனது திறனை தாண்டி மக்கள் தொகையை தாங்கிக் கொண்டு இருப்பதால் மழைவெள்ளத்தை சமாளிக்க இயலவில்லை” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகவே அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்குப் பிரதான காரணம் திட்டமிடப்படாத கட்டடங்களும், சட்டவிரோத கட்டுமானங்களுமாகும் என்பதுதான் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. அதாவது வடிந்தோட வேண்டிய மழைநீர், செல்வதற்கு வழியின்றி சென்னைக்குள்ளேயே தங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

இந்த ஆபத்து சென்னை மாநகருக்கு மாத்திரமன்றி, கொழும்பு போன்ற பெருநகரங்களிலும் எதிர்நோக்கப்படுகின்றது. கொழும்பின் சில பிரதேசங்களை எடுத்துக் கொண்டோமானால் சில மணிநேரம் பலத்தமழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் அங்கு வீதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன. தெமட்டகொடை, மருதானை, மாளிகாவத்தை, ஆமர்வீதி போன்ற பல பிரதேசங்கள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன. அந்த வெள்ளம் முற்றாக வடிவதற்கு சில மணி நேரம் எடுத்துக் கொள்கின்றது.

அதற்கிடையில் வீடுகள், கடைகள் போன்ற இடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றது. கார், மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து அவற்றைப் பழுதடையச் செய்து விடுகின்றது. கொழும்பில் சிலமணி நேரம் பலத்த மழை பெய்கின்ற போது இக்காட்சிகளை சாதாரணமாகவே நாம் காணலாம்.

திட்டமிடப்படாத கட்டட நிர்மாணங்களே இதற்கான முக்கிய காரணமாகும். வடிகான்களை நிரப்பியும் சிலர் வீடுகளை நிர்மாணித்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதுமாத்திரமன்றி, உரிய அனுமதி பெறப்படாமல் பலர் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளதால் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு வழியே இல்லை. அப்பிரதேசங்கள் சற்று நேரத்திலேயே வெள்ளக்காடாகி விடுகின்றன.

ஒருதரப்பினர் இழைக்கின்ற சட்டவிரோத காரியங்களால் அப்பாவி மக்களும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதேநேரம் சட்டத்தை சிலர் தங்களது கைகளுக்குள் எடுத்துக் கொள்வதனால், இதுபோன்ற பாரதூரமான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்களானால் இவ்வாறு வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சட்டவிரோத கட்டடங்கள் விடயத்தில் அதிகாரிகள் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வது அவசியம். சட்டத்தை மதிக்கின்ற மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கலாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT