Sunday, April 28, 2024
Home » தெற்கு காசாவை மையப்படுத்தி இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்

தெற்கு காசாவை மையப்படுத்தி இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்

24 மணி நேரத்தில் 700 பேர் உயிரிழப்பு

by damith
December 4, 2023 6:00 am 0 comment

சா பகுதியில் இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக சமரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அதிகரித்து வருவதோடு அங்குள்ள மக்கள் அடைக்கலம் பெற முடியுமான பகுதி தெற்கு காசாவின் குறுகிய நிலத்திற்கு சுருங்கியுள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ராபா நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக குண்டுகளை வீசியது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கையாள்வதில் மருத்துவமனைகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

பணயக்கைதிகள் மற்றும் பலஸ்தீன கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையுடன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏழு நாட்கள் நீடித்த போர் நிறுத்தத்திற்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (01) மீண்டும் போர் வெடித்தது.

இந்நிலையில் முன்னரை விடவும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதோடு போர் வலயமாக இருந்து வந்த வடக்கு காசாவை தாண்டி தெற்கை இலக்கு வைத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்திற்குள் காசாவில் 700க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச மருத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று (03) தெரிவித்துள்ளார்.

இதனால் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

இந்நிலையில் தெற்கு காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக காசா குடியிருப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மத்திய காசாவில் டைர் அல் பலாஹ் மற்றும் கான் யூனிஸ் இடையிலான வீதியை இஸ்ரேலிய டாங்கிகள் துண்டித்திருக்கும் நிலையில் காசா பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டிருப்பதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கான் யூனிஸில் உள்ள கணிசமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதில் மேற்கு காசாவில் மக்கள் அடைக்கலம் பெற வேண்டிய பகுதிகள் மற்றும் எகிப்துடனான எல்லையை ஒட்டிய சபாவை நோக்கி மக்களை வெளியேறவே இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எனினும் தாம் அந்தப் பகுதியை நோக்கி செல்லும்போது தாக்குதலுக்கு இலக்காவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தி அங்குள்ள மக்கள் தெற்கை நோக்கி வெளியேறி இருக்கும் நிலையில் அங்கு தொடர்ந்து அடைக்கலம் பெறக்கூடிய இடங்கள் குறைந்துள்ளன.

இணையதள வசதிகளை பெறுவது மற்றும் தொடர்ச்சியான மின்சார விநியோகங்கள் இல்லாத நிலையில் இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை தெரிவதற்கு கடினமாக இருப்பதாக ஐ.நா அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு காசாவில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற இரு சம்பவங்களில் குறைந்தது 160 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஜபலியா அகதி முகாமில் உள்ள ஆறு மாடி கட்டடத்தை இஸ்ரேல் குண்டுவீசி தகர்த்திருப்பதோடு காசா நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றின் ஒட்டுமொத்த வீடுகளையும் தாக்கியுள்ளது.

‘நாங்கள் பார்ப்பவை பற்றி எங்கள் கவலையை வெளிப்படுத்தும் அளவுக்கு வலுவான வார்த்தைகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் அன்ட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எக்ஸ் சமூகதளத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார். ‘இப்போதே போர் நிறுத்தம் தேவை’ என்று அவர் வலியுறுத்தினார்.

ஹமாஸை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் சூளுரைக்கும் அதே நேரம் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படாதபட்சத்தில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

‘சியோனிசக் கைதிகளின் விடுதலைக்குக் கொடுக்க வேண்டிய விலை போர்நிறுத்தத்திற்குப் பிறகு எங்கள் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக இருக்கும் என்று முதல் நாளிலிருந்தே நாங்கள் கூறுகிறோம்’ என்று ஹமாஸ் அரசியல் உயர் பீடத்தின் பிரதித் தலைவர் அலாஹ் அல் அரூர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்லாமி ஜிஹாத் அமைப்புகள் இஸ்ரேலின் பல நகரங்கள் மீது ரொக்கெட் குண்டுகளை வீசி வருகின்றன. இதில் டெல் அவிவை நோக்கியும் அந்த குண்டுகள் பாய்ந்து வருகின்றன. போர் நடவடிக்கையில் மேலும் இரு படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. போர் நிறுத்தம் முடிந்த பின்னரான இஸ்ரேல் படையின் முதல் இழப்புகளாக இவை உள்ளன.

இஸ்ரேலுக்கு வருடாந்தம் பல பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்கி வரும் அதன் கூட்டாளியான அமெரிக்கா காசாவில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘அதிகப்படியான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்று துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஐ.நா காநிலை மாநாட்டில் பங்கேற்க டுபாய் சென்றிருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐ.நா மனிதாபிமான விவகாரங்களின் இணைப்பு அலுவலகத்தின் புதிய மதிப்பீட்டின்படி, காசாவில் சுமார் 1.8 மில்லியன் மக்களான அதன் மக்கள் தொகையில் 75 வீதத்தினர் இடம்பெயர்ந்து திறந்த வெளி மற்றும் பாதுகாப்பற்ற தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். தெற்கு காசா நகரான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலை ஒன்றுக்குள் இருக்கும் கூடாரம் ஒன்றில் இருந்து பெண் மற்றும் சிறுவர்களை வெளியேற்ற உதவியபோது தனது 19 வயது மகன் முஹமது கொல்லப்பட்டதாக ஜுமானா முராத் என்பவர் தெரிவித்துள்ளார். ‘கூர்மையான பொருள் ஒன்று அவனது தலையை தாக்கியது’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று நாசர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் அங்கு அந்த மருத்துவமனையின் கொள்ளளவை விட மூன்று மடங்காக 1000 நோயாளிகள் இருந்ததாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

சிலர் வலியில் கூச்சலிட்டபடி இருக்க அவர்களுக்கு தரையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காசா மக்கள் உணவு, நீர் மற்றும் மற்ற அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதோடு அங்குள்ள பெரும்பாலான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டு சுமார் 240 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே போர் வெடித்தது. இந்நிலையில் கட்டாரின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நீடித்து வந்தன.

எனினும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை தொடர்ந்து இஸ்ரேலி பேச்சுவார்த்தையாளர்கள் கட்டாரில் இருந்து வெளியேறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது. காசாவில் தொடர்ந்து 137 பேர் பணயக்கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸ் மீது அதிக அழுத்தம் கொடுத்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு மேலும் இராணுவ நடவடிக்கை தேவையாக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT