Monday, April 29, 2024
Home » கல்விப்புலத்தில் என்றும் மறவாத ஆளுமை அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் பாரி (நளீமி)

கல்விப்புலத்தில் என்றும் மறவாத ஆளுமை அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் பாரி (நளீமி)

இன்று நினைவுதினம்

by damith
December 3, 2023 8:17 pm 0 comment

பேராதனை பல்கலைக்கழகத்தில் சுமார் மூன்று தசாப்தங்களாக அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறையின் முதுகெலும்பாகவும், பாடசாலை கலைத்திட்டத்தில் இஸ்லாம் பாடவிதானத்தில் முக்கிய பங்காளியாகவும் ஆலோசகராகவும், அஹதியா பாடசாலைக்கான பாடத்திட்ட தயாரித்தலில் பிரதம ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்த மர்ஹும் அஷ்ஷெய்க் எம். எஸ். அப்துல் பாரி காலமான தினம் இன்றாகும்.

அன்னார் எட்டியாந்தோட்டை, கராகொடை கிராமத்தில் 1963 ஏப்ரல் 20 ஆம் திகதி எம்.எச்.எம். சனூன் ஆசிரியர்_உம்மு ஆயிஷா தம்பதிகளின் புதல்வராக இவர் பிறந்தார். 1990 ஆம் ஆண்டு திஹாரியைச் சேர்ந்த கன்சுல் பாஹிமாவுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

ஒரு மனிதன் குடும்ப உறவினர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அவரைக் குறிப்பிட முடியும்.

தனது ஆரம்பக் கல்வியை கராகொடை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும், அநுராதபுரம் கஹடகஸ்திகிளிய முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் பயின்றார். சாதாரண தர பரீட்சைக்குப் பின்பு 1979 இல் ஜாமிஆ நளீமியா கலாபீடத்திற்கு தெரிவானார். அவர் நிறைய ஆக்கங்களை எழுதி இருக்கின்றார்.

ஏழு வருடங்கள் ஜாமிஆ நளீமியாவின் கற்கைநெறியை முதன்மைச் சித்தியுடன் மிகச்சிறப்பாக பூர்த்தி செய்த இவரை ஜாமிஆ நளீமியா நிர்வாகம் விரிவுரையாளராக நியமித்தது. சுமார் ஏழு வருடங்கள் ஜாமிஆவின் விரிவுரையாளராக இருந்த அவர் 1993 இல் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய நாகரிகத்துறைக்கு விரிவுரையாளராக தேர்வானார். அது மாத்திரமல்லாமல் அல்-ஆலிம் பரீட்சை, தர்மாச்சாரியா பரீட்சை, அஹதியா பரீட்சை என இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசாங்க பரீட்சைகளின் முக்கிய கதாபாத்திரமாக அவர் காணப்பட்டார்.

தேசிய கல்வி நிறுவனத்தில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரிக பாடங்களின் கலைத்திட்ட வடிவமைப்பில் முக்கிய ஆலோசராக இறுதிவரை கடமையாற்றினார். தரம் 01 முதல் 13 வரை இஸ்லாம் பாடவிதானத்தின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றினார். 2023 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்படவிருந்த கல்வி கலைத்திட்ட மறுசீரமைப்பில் இஸ்லாம் பாடவிதானத்திற்கும் அதே பங்களிப்பை ஆற்றினார்.

கேகாலை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்ற வரலாற்றை ஆவணப்படுத்தும் புத்தகத்தின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் கடமையாற்றினார். ஜாமிஆ நளீமியாவின் பழைய மாணவர் அமைப்பான ராபிததுன் நளீமிய்யீன் அமைப்பின் தலைவராகவும் சேவையாற்றினார். இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இலங்கை கல்வி வரலாற்றில் சமய பாட கலைத்திட்ட வளர்ச்சிப் போக்கு சம்பந்தமான ஒரு ஆய்வறிக்கை மற்றும் கேகாலை மாவட்டத்தில் ‘துன்கோரள’ என்று அழைக்கப்படுகின்ற பிரதேசத்தின் முஸ்லிம்களின் வரலாறு சம்பந்தமாகவும் மூன்று ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வந்திருந்த சமயம் அன்னார் காலமானார்.

இன்று இவரிடம் கற்ற பல மாணவர்கள் பெரும் பதவிகளிலும் சமூக பொறுப்புக்களிலும் காணப்படுகின்றனர்.

அஷ்ஷெய்க் ஹுஸ்னி ஹுஸைர் (நளீமி) எட்டியாந்தோட்டை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT