Sunday, April 28, 2024
Home » காசாவில் 48 நாட்கள் நீடித்த போர் நிறுத்தம்; வடக்கு காசா செல்ல இஸ்ரேல் முட்டுக்கட்டை

காசாவில் 48 நாட்கள் நீடித்த போர் நிறுத்தம்; வடக்கு காசா செல்ல இஸ்ரேல் முட்டுக்கட்டை

- பணயக்கைதிகள் விடுவிப்பு; உதவி வாகனங்கள் நுழைவு

by Rizwan Segu Mohideen
November 25, 2023 10:04 am 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் காசாவில் நேற்று அமுலுக்கு வந்த நிலையில், குண்டு வீச்சுகள், பீரங்கி தாக்குதல்கள் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் தொடர்பிலான பாரிய சம்பவங்கள் பதிவாகாதபோதும் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

இந்தப் போரின், போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமானது. வடக்கு மற்றும் தெற்கில் விரிவான போர் நிறுத்தம் ஒன்று அமுல்படுத்தப்பட்டதோடு ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளில் 13 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். பெரும் அழிவை சந்தித்துள்ள காசாவுக்கு உதவிகள் செல்ல ஆரம்பித்துள்ளன.

இதன்போது கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்களின் செயற்பாடுகளை காணவில்லை என்றும் பலஸ்தீன ரொக்கெட் தாக்குதல்களின் சத்தங்கள் கேட்கவில்லை என்றும் அங்கிருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் காசாவில் எந்த குண்டு சத்தமும் கேட்கவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் வடக்கு காசாவில் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை இஸ்ரேலிய படை தடுத்து வருதாக கூறப்படுகிறது.

ஒரு சம்பவத்தில் வீடுகளுக்கு திரும்பும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது வடக்கு காசாவில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பக் கூடாது என எச்சரித்து இஸ்ரேலிய இராணுவம் துண்டுப்பிரசுரங்களையும் வானில் இருந்து வீசியுள்ளது.

இஸ்ரேலின் டஜன் கணக்கான டாங்கிகள் உட்பட இராணுவ வாகனங்கள் காசாவில் இருந்து வெளியேறுவதை கண்டதாக ரோட்டர்ஸ் செய்தியாளர் விபரித்துள்ளார். பலஸ்தின பகுதியில் இருந்து வாபஸ் பெறுவதாக இஸ்ரேலிய வாகனத் தொடரணியின் இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு காசா பகுதிக்கு அருகில் இருக்கும் இரு இஸ்ரேலிய கிராமங்களில் பலஸ்தீன ரொக்கெட் குண்டுகள் தொடர்பில் எச்சரிக்கும் வகையில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. போர் நிறுத்தத்தை மீறி ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல் ஒன்றை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

தெற்கு காசா நகரான கான் யூனிஸில் வீதிகளில் மக்கள் நிரம்பி இருந்தனர். காலித் அபூ அன்சா என்ற பலஸ்தீனர் ரோய்ட்டர்ஸுக்கு கூறியதாவது, “நாம் முழு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்போடு இருப்பதோடு எமது போராட்டம் குறித்து பெருமை கொள்கிறோம். வலியை ஏற்படுத்தியபோதும் இந்த அடைவுக்காக நாம் பெருமை கொள்கிறோம்” என்றார்.

போர் நிறுத்தம் ஆரம்பிக்கும் கடைசி நிமிடம் வரையும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரம் அடைந்திருந்தன. இதில் காசா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றும் இலக்கு வைக்கப்பட்டது. போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானது என்றும் போர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

காசாவில் உதவி வாகனங்கள்
காசாவின் இந்தோனேசிய மருத்துவமனை இடைவிடாத குண்டு தாக்குதலுக்கு இலக்கானதோடு அங்கு மின் வெளிச்சம் இல்லாமல் சத்திரசிகிச்சைகள் நடத்தப்பட்டன. அங்கு வயதானவர்கள் படுத்த படுக்கையாகவும் சிறுவர்கள் நகர முடியாத அளவுக்கு பலவீனமான நிலையிலும் இருப்பதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருத்துமனையை இஸ்ரேலிய இராணுவம் நேற்றுக் காலை சுற்றிவளைத்து மேற்கொண்ட சோதனையின்போது ஒரு பெண் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. காசாவுக்கு மேலதிக உதவிகள் செல்ல ஆரம்பித்திருக்கும் நிலையில் பணயக்கைதிகளின் முதல் குழுவினர் உள்ளுர் நேரப்படி நேற்று பிற்பகல் 4 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இந்த நான்கு நாள் போர் நிறுத்த காலத்தில் மொத்தம் 50 பணயக்கைதிகள் விடுவிக்கப்படவிருப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்ஸாரி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் ஆரம்பித்து ஒன்றரை மணி நேரத்தின் பின் எகிப்தில் இருந்து காசாவுக்குள் உதவி வாகனங்கள் நுழைய ஆரம்பித்தன. எகிப்திய அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் முதல் இரு வாகனங்களில் “மனிதாபிமானத்திற்காக ஒன்றிணைவோம்” மற்றும் “காசாவில் எமது சகோதரர்களுக்காக” என்று எழுதப்பட்ட பதாகைகள் இருந்தன.

போர் நிறுத்த காலத்தில் காசாவுக்கு தினசரி 130,000 லீற்றர் டீசல் மற்றும் நான்கு டிரக் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதோடு தினசரி அங்கு 200 டிரக் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இதன்போது இஸ்ரேலிய சிறையில் இருக்கும் குறைந்தது 150 பலஸ்தீனர்கள் இந்த போர் நிறுத்த காலத்தில் விடுவிக்கப்படவுள்ளனர். “இந்த போர் நிறுத்தம் பரந்த அளவில் செயற்படும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை அடைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமது படைகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு டெலிகிராம் ஊடாக உறுதி செய்துள்ளது.

எனினும் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா, பின்னர் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் “இது ஒரு தற்காலிக போர் நிறுத்தம்” என்று குறிப்பிட்டார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை உட்பட “அனைத்து எதிர்ப்பு முனைகளிலும் (இஸ்ரேலுடன்) மோதலை அதிகரிக்க” அழைப்பு விடுத்தார். காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோதல் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று இஸ்ரேலிய இராணுவமும் தெரிவித்துள்ளது.

“இது குறுகிய நிறுத்தமாக இருக்கும். கடைசியில் மோதல் பெரும்பாலும் பாரிய அளவில் தொடரும் என்பதோடு மேலும் பணயக்கைதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்கப்படும். குறைந்தது இரண்டு மாத போர் எதிர்பார்க்கப்படுகிறது” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் களன்ட் கடற்படை கமாண்டோக்களிடம் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

“வடக்கு காசாவை கட்டுப்படுத்துவது நீண்ட போர் ஒன்றின் முதல் கட்டமாக இருப்பதோடு, அடுத்த கட்டத்திற்கும் நாம் தயாராகி வருகிறோம்” என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையிலேயே காசா மீது இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக பயங்கர தாக்குதல்களை ஆரம்பித்தது.

அந்த குறுகிய நிலப்பகுதி மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்திய குண்டு மழையில் 14000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதில் சுமார் 40 வீதமானவர்கள் சிறுவர்களாவர். இந்த வன்முறையில் இருந்து உயிர் தப்புவதற்கு 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதோடு இஸ்ரேல் முழு முற்றுகையை மேற்கொண்டதால் உணவு, நீர் மற்றும் எரிபொருள் அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டது.

“மக்கள் சோர்வடைந்து, மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்” என்று ஐ.நாவின் பலஸ்தீன அகதி நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லஸரினி வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார். காசாவுக்கான பயணத்தில் சொல்ல முடியாத துயரங்களை கண்டதாகவும் அவர் விபரித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT