புத்தளம் – மாதம்பை பிரதேசத்தில் வீதியோரத்தில் பயணித்த சிறுமி உட்பட பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட தனியார் பயணிகள் பஸ் மீது நேற்று (20) பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியான சிறுமி உட்பட பெண்கள் மூவரும் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மாதம்பை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்துள்ள பெண்கள் மூவரில், ஒருவரான வயோதிப பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த தனியார் பஸ் மாதம்பை பழைய நகரில் மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முட்பட்ட போது 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக மாதம்பை பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியதில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனால், சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டது.
எனினும், இந்த அமைதியின்மை நிலைமையை கட்டுப்படுத்த மாதம்பை பொலிஸாருக்கு மேலதிகமாக, சிலாபம் மற்றும் தொடுவாவ பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்த விபத்துச் சம்வத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்