Monday, April 29, 2024
Home » நுவரெலியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

- இலங்கை அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு

by Prashahini
November 9, 2023 10:35 am 0 comment

நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக இன்று (09) நண்பகல் 12.00 மணிக்கு தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நேற்று (08) நுவரெலியா தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த அஞ்சல் முன்னணி தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக அஞ்சல் பணியாளர்கள் நேற்று முன்தினம் (08) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்று அஞ்சல் பணியாளர்கள் அஞ்சல் நிலையங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை வரையில் அனைத்து அஞ்சல் பணியாளர்களினதும் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் அறிவித்துள்ளார்.

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களின் பிரகாரம், அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என இலங்கை அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், நுவரெலியா அஞ்சல் நிலையத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக நுவரெலியா நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT