Monday, April 29, 2024
Home » ஏறாவூர் ஹைறாத் மகளிர் கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா

ஏறாவூர் ஹைறாத் மகளிர் கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா

by mahesh
November 8, 2023 9:18 am 0 comment

ஏறாவூர் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியில் அமைந்துள்ள அல் மர்கஸுல் இஸ்லாமி ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவர் எம். எச். எம். ஆரிப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருதமுனை தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைக்கான மகளிர் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம். எல். முபாரக் (மதனி) Phd கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பிரதான உரையையும் நிகழ்த்தினார்.

கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலீலுர்ரஹ்மான் MA, ஏறாவூர் நகர சபையின் செயலாளர் மற்றும் விசேட ஆணையாளர் எம். எச். எம். ஹாமீம் MA, மட்டக்களப்பு மத்திய கல்வி வலயப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் எம். யூ. எப். ரிப்கா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு அதிதிகளாக பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம். ஆர். எம். அம்ஜத் ராசிக் (மதனி) Phd , ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம். எம். எம். முஹிதீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏறாவூர் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ. எல். சாஜித் ஹஸன் (பாக்கவி), ஏறாவூர் ஹைரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (ரஹ்மானி, ஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ. எல் பீர் முஹம்மது (காஸிமி) MA, காத்தான்குடி மஹத்துஸ் சுன்னா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம். சி. எம். ரிஸ்வான் (மதனி) ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது பிரமுகர்கள் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த பறகஹதெனிய ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் என். பி. எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) சுகவீனம் காரணமாக சமுகமளிக்காமையின் காரணமாக அதன் விருதினை அதன் பொதுச் செயலாளரும் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட ஏ. எல். கலீலுர்ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

ஏறாவூரில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டமைக்காக கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கலை கலாசாரத் துறையின் தலைவர் கலாநிதி அல்- ஹாபிழ் எம். பீ. பௌசுல் மற்றும் நீண்ட காலமாக மார்க்கப் பிரசாரப் பணியினை மேற்கொண்ட அஷ்ஷெய்க் கனி​ ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

123 மாணவிகள் மௌலவியாப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் விசேட அம்சம் என்னவென்றால் மௌலவியாப் பட்டத்தைப்பெற்றுக் கொண்ட ஒருவர் இம்முறை வெளியான உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ பீடம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது அம்மாணவி விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ‘ஹைறாத்’ எனும் பெயரில் முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வரவேற்புரையினை கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம். எல். எம். அஸ்மி (ஹாமி) நிகழ்த்தினார்.

* ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க் ஜே. எம். சியாத் தலைமையுரையில்; எமது முதலாவது பட்டமளிப்பு விழாவில் 123 மாணவிகள் மௌலவியாப் பட்டங்களைப் பெற்று வெளியேறுவதையிட்டு நான் பேருவகையடைகின்றேன். இந்தக் கலாபீடம் எட்டு வருட கால அறுவடையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எமது பிரதேசத்தில் குறிப்பாக பெண்களுக்கான மார்க்கக் கல்வி காணப்படாத ஒரு கால கட்டம் இருந்தது. 1999 இல் பெண்களுக்கான மார்க்கக் கல்வி வழங்க வேண்டும், புகட்ட வேண்டும் என்ற நன்நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் அல் ஜாமியதுல் ஹைரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியாகும்.

இன்றைய தினம் எமது சிறப்பு அதிதிகளுள் ஒருவராக கலந்து கொண்டுள்ள ஏறாவூர் ஹைரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் ஜே. அப்துல் ஹலீம் (ரஹ்மானி) அவர்களை முதல்வராகக் கொண்டு இம்மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது. சிறியளவிலான மாணவிகளையும், குறைந்தளவிலான இட வசதிகளையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அக் கல்லூரி 2015 ஆம் ஆண்டு வரையிலும் நூற்றுக்கணக்கான ஆலிமாக்களையும் ஹாபிழாக்களையும் வெளிக்கொணர்ந்துள்ளன. இருப்பினும் அரபுக் கல்லூரிக்குரிய வளங்கள் போதாமையின் காரணமாகவும் கல்வி தொடர்பில் இன்னோரன்ன தேவைகளின் காரணமாகவும் கல்லூரியை இன்னுமோர் இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை நன்கு உணர்ந்த நிர்வாகத்தினர்கள் இதற்கான வேறு ஓர் இடத்தை தெரிவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் எமக்கு பொருளாதார ரீதியாகவும் பல்வேறு ரீதியாகவும் பெரும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற பறகஹதெனிய ஜம்மிய்யதுல் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா இதற்கான காணியை கொள்வனவு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முன்வந்தன.

சவூதி அரேபிய நாட்டின் செல்வந்தர் ஒருவரின் ஊடாக மிகப் பெரிய நிதிப் பங்களிப்பினைப்பெற்று ஏறாவூர் சுன்னக்குடா வீதியில் அமைந்துள்ள காணியில் ஹைறாத் மகளிர் கலாபீடத்தின் புதிய கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு 2015 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது ஜாமியதுல் ஹைரிய்யாவில் ஷரிஆப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்த மாணவிகள் எமது கலாபீடத்திற்கும் அங்கே ஹிப்ழுப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவிகள் அக்கலாபீடத்திலும் அங்கு தொடர்ந்து நல்ல முறையில் கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹைறாத் மகளிர் கலாபீடம் தனது அடுத்த கட்ட முன்னெடுப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. போதுமானளவு வகுப்பறைகள், விடுதி வசதிகள், நூலகம், கேட்போர் கூடம் என அனைத்து வசதிகளும் இருந்தமையின் காரணமாக முழு நேரம் கலாபீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்தினர் தீர்மானம் எடுத்தனர். அந்த அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு முழு நேர மாணவிகளை இணைத்துக் கொண்டு பகுதி நேரம் மற்றும் முழு நேர என்ற வகையில் இன்று வரை அரபுக் கலாபீடம் தன் எழுச்சிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இங்கு ஷரிஆப் பிரிவுகள், உயர்தரக் கற்கைகள், அரபு மொழிப்பாட நெறி, ஆளுமை விருத்திப் பயிற்சிகள், தலைமைத்துவ வழிகாட்டல்கள், க பொ. த உயர் தர வகுப்புக்கள் என்ற அடிப்படையில் கல்வித் திட்டங்கள் திறன்பட வகுக்கப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் இன்று 123 ஆலிமாக்கள், மௌலவியாக்கள் வெளியேற இருக்கும்வேளையில் பகுதி நேரமாகக் கல்வி கற்று மருத்துவத் துறைக்கு ஒரு மௌலவியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்துறை, கலைத்துறை என்று முக்கியமான கல்வித்துறைகளில் சாதனைகளை நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எமது முழு நேர மாணவிகள் நாங்கள் எடுத்த முயற்சியில் முதன் முதலாக 23 மாணவிகள் க. பொ. த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களில் ஆறு மாணவிகள் ‘3 ஏ’ என்ற வகையில் சித்திகளைப் பெற்று இருந்தார்கள். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்தடுத்து வந்த வருடத்தில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இல்லாமல் சாதனைகளைப் பெற்றுக் காட்டினார்கள். உலகக் கல்வி மாத்திரமின்றி சிறந்த தூய்மையான பெண்களாகவும் சிறந்த குடும்பத் தலைவிகளாகவும் சிறந்த தாய்மார்களாகவும் சிறந்த நற்கல்வியைப் புகட்டக் கூடிய கலாபீட ஆசிரியைகளாகவும் முன்மாதிரியான வழிகாட்டிகளாகவும் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கின்ற முஅல்லிமாக்களாகவும் இவர்களுடைய பரிணாமங்களை நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.

ஒரு பெண் சமூகத்தின் சிறந்த சீர்திருத்தவாதி என்பதை நாம் அனைவரும் கண்டிப்பாக நன்கு உணர வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு களப்பணிகள் பெரிதாக இல்லை என்றாலும் அல்லாஹ்வுடைய உதவிக்கப்பால் அவர்களுடைய உதவிகள் இல்லாமல் எந்தவொரு நூலும் எந்தவொரு குடும்பமும் சீரிய சிறந்த வழிகாட்டலின் கீழ் கொண்டு வர முடியாது என்பதே நிதர்சனமாகும். உங்களுடைய தாய், தந்தையர்களுக்கு கண்குளிர்ச்சியாக மிளிர வேண்டும். உங்களுடைய ஆசான், இதற்காகத் தியாகம் செய்த உலமாக்கள் போன்ற அனைவருக்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய கலாநிதி எம். எல். முபாரக் (மதனி); இஸ்லாம் கல்விக்கு கொடுத்திருக்கின்ற முக்கியத்துவம் நம் எல்லோருக்கும் தெரியும். ஷிர்க்குகள், மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் போன்ற பாவச் செயல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அல்லாஹுத்தஆலா முதன் முதலாக இறக்கிய வஹி கல்வியைப் பற்றியே. ஷிர்க் செய்ய வேண்டாம். தவ்ஹீதை நிலைநாட்டுங்கள், விபச்சாரம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் சொல்வதற்கு முதலில் சொல்லியது ‘இக்ரஃ’ என்ற சொல் முழுக்க முழுக்க கல்வியைப் பற்றியே பேசுகிறது. இஸ்லாம் கல்விக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளமை என்பது பற்றி நம் எல்லோருக்குமே நன்கு தெளிவாகத் தெரிந்த விசயம்.

இந்தக் கல்வியை நபி (ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஸஹாபாக்கள் கற்றுக் கொண்டு அவர்கள் அடுத்த தலைமுறையினர்களுக்குப் போதிக்கிறார்கள். இப்படியாக கற்றலும் போதிப்பதும் தொடர்ச்சியாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கல்வி முறையில் இடையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. உலக இஸ்லாமிய கல்வி வரலாற்றில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி முறை இடம்பிடிக்கிறது. குறிப்பாக அப்பாஸியருடைய ஆட்சிக் காலத்தில் இந்த முறை காணப்பட்டது. அதன் பின்பு உலகத்தின் பல இடங்களுக்கும் பறந்து செல்லுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில் 1870 களில் காலியில் மத்ரஸா ஆரம்பிக்கப்படுகிறது. அதற்குப் பின்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று இலங்கையில் 310 க்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கான கல்லூரிகள் இருந்தன. பெண்களுக்கான அரபுக் கல்லூரிகள் இருக்கவில்லை. பெண்களுக்கான முதலாவது அரபுக் கல்லூரி கல்- எளியவில் 1959 களில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்தடுத்த வந்த காலங்களில் பெண்கள் அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அண்மைக்காலமாக பெண்கள் அரபுக் கல்லூரிகளின் விகிதம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. அரபுக் கல்லூரிகள் மட்டுமல்ல பெண்களுடைய கல்வித்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

பெண்கள் மார்க்கக் கல்வியைக் கற்பதிலும் ஏனைய கல்வியைக் கற்கின்ற காலத்திலே நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். 310 அரபுக் கல்லூரிகளில் 26 விகிதம் பெண்கள் அரபுக் கல்லூரிகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஒரு குடும்பத்தைச் சரியான முறையில் வழிநடத்தக் கூடியவர் யாரென்றால் தாய்தான். பெண்தான். எனவே பெண்கள் மார்க்கக் கல்வியின் பால் ஆர்வத்துடன் செயற்படச் செய்வது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும் என்று அவர் நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார்.

* சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஆர்.எம். அம்ஜத் ராசிக் (மதனி) உரையாற்றுகையில்;

கல்வி என்பது ஓர் எல்லை இல்லாத ஒன்று. அதிலும் மார்க்கக் கல்வியினைப் பொறுத்தவரையில் எமக்கு முன் சென்ற மார்க்கக் கல்விசார் அறிஞர்கள், இமாம்கள், உலமாக்கள், ஏன் தாபிஈன்கள், ஸஹாபாக்கள், ஸஹாபாப் பெண்மணிகள் ஆகிய அனைவரும் எடுத்துக் காட்டிய ஒரு கல்வி பயணத்தின் வழிமுறையாக நாங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தெளிவான விடயம்.

இங்கு மௌலவியாப் பட்டம் பெறும் பிள்ளைகளின் அடைவு மட்டமானது ஒரு முற்றுப்புள்ளியாக இருக்காது. அவர்கள் கல்வியை மென்மேலும் தொடர்வதற்கு பல்கலைக்கழகங்கள் செல்லலாம். அல்லது உயர் கல்வி நிறுவனங்களில், அவ்வாறு வாய்ப்பு இல்லாவிட்டால் தங்களது வீட்டில் இருந்தவாறே உயர் கல்வியினைத் தொடரக் கூடிய நிறைய வசதிகள் உள்ளன.

உயர் கல்வியைத் தொடர்வதற்கு உயர் கல்வி நிறுவனம் தான் தேவை என்று கிடையாது. ஸஹாபாப் பெண்மணிகள் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அவர்கள் வாசிப்பின் மூலமாகவும் மூத்த ஆலிமாக்களை அணுகி கற்றுக் கொண்டதன் வாயிலாக தங்களுடைய அறிவுப் பசியைத் தீர்த்துக் கொண்ட வரலாற்றை நாங்கள் பார்க்கின்றோம். நீங்கள் அல்குர்ஆனை நன்கு வாசிக்க முடியும். அன்றாடம் அல்குர்ஆனை ஓதி அதன் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அறிவுப் பொக்கிஷம் அது. இன்னோரன்ன மார்க்க அறிவு சார்ந்த நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் முன் தமிழ், ஆங்கிலம் மொழிக்குப் புறம்பாக அரபு மொழி தற்பொழுது தங்களுக்கு சரளமாக கிடைத்துள்ளது. அது ஒரு கடல். நிறைய வாசியுங்கள் நிறையப் பயன்பெறுவீர்கள்.

அதிலும் பட்டம் பெற்றவர்கள் விடும் தவறு என்னவென்றால் நாங்கள் பட்டம் பெற்று விட்டோம். நமது படிப்பு முடிந்து விட்டது என்று இருக்கக் கூடாது. சமூகத்தில் துறை சார் நிபுணர்களுடைய இடைவெளி நிறைய இருக்கின்றன. அந்த இடைவெளியை நீங்கள் நிரப்ப வேண்டும்.

நீங்கள் கற்ற கல்வி தாங்களுக்கு மாத்திரமன்றி, உங்களில் முதலில் நீங்கள் கற்ற கல்வியின் தாத்பரியத்தை கொண்டு வர வேண்டும். ஒரு மார்க்கப் பற்றுள்ள பெண்ணாகவும் அல்லாஹுத்தஆலா விரும்பக் கூடிய பெண்ணாகவும் மாற வேண்டும். உங்களுடைய சூழலில் தாய் தந்தையர்கள், கணவர் பிள்ளைகள், சகோதர்களிடத்தில் உங்களுடைய பிரசாரப் பணியை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்தக் கல்வி நிறுவனரின் நோக்கமாகும். கொள்கை பண்பாடுகளுடன் சிறந்து விளங்கி பயன் தரும் மார்க்கத்தை உருவாக்கக் கூடிய ஒரு முன்மாதிரியான கல்வி நிறுவனம் இது.

ஒரு மனிதன் பிறக்கும் போது நல்லவனாகத்தான் பிறப்பான். அவன் நல்லவனாக மாறுவதும் தீயவனாக மாறுவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற தமிழ் பாடல் வரிகள் உள்ளன. ஆனால் அரபுக் கவிஞர் தனது பாடலில்; பிள்ளை வளர்ப்பதில் தந்தைக்கும் சம பங்கு உண்டு என்று கவிதையில் பாடியுள்ளார் என்பது மிக முக்கிய அம்சமாகும்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT