Home » பாராளுமன்ற வளாகத்திற்குள் டயனா கமகே மீது தாக்குதல்?

பாராளுமன்ற வளாகத்திற்குள் டயனா கமகே மீது தாக்குதல்?

- ஐ.ம.ச. ரோஹண பண்டார, சுஜித் பெரேரா எம்.பிக்கள் மீது டயானா சீற்றம்

by Rizwan Segu Mohideen
October 20, 2023 8:48 pm 0 comment

– அநாகரிகமாக நடந்த டயானா தாக்க முயன்றதையே தடுத்தேன்
– விசாரணைக்கு ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தன்னை தாக்கியதாக அதே கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டயனா கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற அவைக்கு வெளியே நூலகத்திற்கு அருகில் உள்ள மின்தூக்கிக்கு (Lift) அருகில் வைத்து தம்மை தாக்கியதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அறையில் விசாரிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தர்ப்பத்தில் அவையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவையில் இருக்கவில்லை என்பதோடு, அவைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற வளாகத்தில் டயானா கமகே மற்றும் ரோஹண பண்டார, சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் இரு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, குறித்த குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவும், குழு உறுப்பினர்களாக சமல் ராஜபக்ஷ, கலாநிதி ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள சுஜித் பெரேரா எம்.பி. அவையில் விளக்கமளிக்கையில், நான் தாக்குதல் நடத்தியதாக டயானா கமகே தெரிவித்தார். அப்படி எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.

நான் கீழே செல்லும்போது, அவர் ரோஹண பண்டார எம்.பியுடன் அநாகரீகமான வார்த்தைகளால் விவாதத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டாம் என இதன்போது நான் கூறினேன். அதனையும் பொருட்படுத்தாத அவர் என்மீது தாக்குதல் நடத்தினார்.

நான் அப்போது அந்தத் தாக்குதலை தடுக்க மட்டும்தான் முற்பட்டேன். இதுதொடர்பாக CCTV காட்சிகளை பார்வையிட்டால் டயானா கமகே எவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும் என அவர் கூறினார்.

சம்பவத்துடன் தொர்புடைய ரோஹண பண்டார எம்.பி. தெரிவிக்கையில், பாராளுமன்ற அவைக்குள் நாம் ஒரு விடயம் பற்றி பேசினால், அது தொடர்பாக அவைக்கு வெளியே பேசுவது முறையல்ல. நான் அமைதியாக மின்தூக்கி அருகில் சென்றபோது, டயானா கமகே அநாகரிகமாக வார்த்தைகளால் பேசினார். நான் அதனைக் கவனத்தில் எடுக்காமல் சென்றபோது, அவர் என்னைத் தொடர்ந்து வந்து தொடர்ச்சியாக அநாகரீகமாக பேசினார்.

பெண் உரிமை பற்றி பேசுகிறோம். ஆனால் பெண்களால் ஆண்களின் உரிமைகள் இழக்கப்படுவது தொடர்பிலும் பேச வேண்டும்.ஆண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். என அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற அவைக்கு வெளியே இடம்பெற்ற சம்பாசணை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rizwan Segu Mohideen

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x