Home » அரசின் கலாபூஷணம் விருது பெற்றார் தினகரன் பிரதேச ஊடகவியலாளர் தஸ்தகீர்

அரசின் கலாபூஷணம் விருது பெற்றார் தினகரன் பிரதேச ஊடகவியலாளர் தஸ்தகீர்

by sachintha
October 17, 2023 3:14 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மஹரகமவில் நடைபெற்ற அரச கலாபூசண விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையில் தெரிவான 10 முஸ்லிம்களில் ஒருவராக ஓய்வுபெற்ற உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் கலாபூஷணம் பட்டம் பெற்றார்.இவர் தினகரன் பிரதேச ஊடகவியலாளர் ஆவார்.

கிழக்கு மாகாணத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இலக்கியம் ஊற்றெடுத்த ஒரு ப​ைழமை வாய்ந்த குடும்பமாக மருதூர் குடும்பத்தைக் குறிப்பிடலாம். இக்குடும்பத்தில் பன்னூலாசிரியர், பிரபல இலக்கியவாதி மர்ஹூம் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் மற்றும் கலாபூசணம் ஏ.பீர்முஹம்மது, மர்ஹூம் மருதூர் அலிகான், மருதூர் அக்பரலி, மருதூர் ஏ. ஹசன் ஆகியோர் தத்தமது ஆளுமைக்கேற்ப இலக்கியத்தை வளர்த்து நாடறியச் செய்தனர்.

இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான கல்முனை தஸ்தகீர் இக்குடும்ப இலக்கியத்தில் இரண்டறக் கலந்து இப்பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டு தன்னையும் ஓர் கவிஞராக, கலைஞராக, எழுத்தாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

இவரது பாடசாலைக் காலத்தில் மறைந்த பிரபல இலக்கியவாதி தெணியானின் சகோதரரான க.நவம் எழுதிய ‘இந்த தேசத்துக்காக’ எனும் நாடகம் தேசிய மட்ட தமிழ்த்தின விழா போட்டி_1973 இல் தங்கப்பதக்கம் வென்றது. இந்நாடகக் குழுவில் தஸ்தகீர் அவர்களும் ஒருவராக இருந்தார்.

இவரது முதலாவது கவிதை அவர் கல்வி கற்ற கல்முனை சாகிறாவினால் வெளியிடப்பட்ட ‘சாஹிறா’ சஞ்சிகையில் 1978 ஆம் ஆண்டு’ நோன்பாமே நோன்பு’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தில் முழு நேர டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்திசெய்த பின் சுகாதாரத் திணைக்களத்தின் பொதுசுகாதாரப் பரிசோதகராகவும் பின்னர் மேற்பார்வை பொதுசுகாதாரப் பரிசோதகராகவும் பல வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் சுகாதாரத் திணைக்களத்தின் உணவு மருந்துகள் பரிசோதகர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து விசேட பயிற்சியின் பின்னர் பிராந்திய உணவு மருந்துகள் பரிசோதராக நியமிக்கப்பட்டார். இப்பதவிகளின் மேலதிக நிபுணத்துவப் பயிற்சிகளை ஜப்பான், தாய்லாந்து, புதுடில்லி போன்ற நாடுகளில் பெற்றுக் கொண்டார். இவருடைய கடமைக் காலத்தில் பல்லின சமூகங்களுடன் சுகாதார சேவை செய்த சந்தர்ப்பங்களில் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகியமையால் சமூகத்தில் உள்ள சுகாதாரக் குறைபாடுகளையும்,

சுகாதாரத் தேவைகளையும் இனம் கண்டு சுகாதாரப் பரப்பில் சமூகங்கள் விழிப்படைய வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் திடகாத்திரமான சமூகம் உருவாக வேண்டும் என்பதையும் நோக்காகவும் கருப்பொருளாகவும் கொண்டு தனது கவிதைகளையும் கட்டுரைகளையும் வரைந்துள்ளார்.

சுகந்தப் பூக்கள், இன்று தான் திருமணம், நான் ஒரு உயிர்கொல்லி, முனையின் மகுடம், நோய்களின் கேடயம் நோன்பு, சமநிலை, துஆ செய்வோம், மாசடைந்த மானுடம், சுகப்பிரசவம், தாய், சமாதான ஒளியேற்ற, சமிபாடு, யார் ஓவியன்?, கொவிட் பிண வாடை, அதிவலு, காகம், உலக கிட்லர் கொரோனாவே, தாயின் பிம்பம், நடமாடும் கைதிகள் நாம், என்றும் வாழும் ஜிப்ரி, பாவிகள் யார்?, செருப்புச்சோடி, முகக்கவசம் போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.

கவிதைகள் தவிர்ந்த ஏனைய பல்வேறு ஆக்கங்களை அவர் எழுதியுள்ளார். 1977 ஆம் ஆண்டில் ‘கல்முனை இளைஞர் கலை வட்டம்’ எனும் அமைப்பை உருவாக்கி அதன் பதில் தலைவராக செயல்பட்டார். இம்மன்றத்தினால் பல நாடகங்கள், கவியரங்குகள், பேச்சுப்போட்டிகள் போன்றவைகளும் நடத்தப்பட்டன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், ஊவா வானொலி போன்ற அமைப்புக்களினால் இவருடன் நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்வுகளில் பங்குகொண்டு பொதுமக்களுக்கு பல பிரயோசமிக்க கருத்துகுகளை வழங்கினார்.

இவரது சொந்த கற்பனையில் எழுதப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட சிலைகளும் சிரிக்க வைக்கும், வைத்தியம், பள்ளிக்கூடம் போன்ற நாடகங்கள் மிகவும் பிரபல்யமிக்கவை.

இவரது கட்டுரைகள்,கவிதைகள் அனைத்தும் தேசிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, நவமணி, டெய்லி நியூஸ் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும் சுகி,அரண்,சுகமஞ்சரி, ஸாஹிறா போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவர் கல்முனை பிரதேச செயலகத்தின் கலாசார அதிகார சபையின் செயற்குழு உறுப்பினராக செயற்பட்டு இச்சபையினால் நடாத்தப்படும் சகல கலாச்சார நிகழ்வுகளுக்கும் கூடிய ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். மேலும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், கண்டி மலையக கலை கலாச்சார சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளராகவும், இந்திய தமிழ் பட்டறை இலக்கியப் பேரவையின் இலங்கைக்கான கிளையின் அங்கத்தவராகவும், இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

இவரின் இலக்கிய செயற்பாடுகளைக் கௌரவித்து இலங்கை கலாசார அதிகார சபை இவருக்கு ‘கலைஞர் சுவதம்’ விருதினை கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.

இவரின் கவிதைகளுக்கு இலங்கை மற்றும் இந்தியா நாடுகளினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்று பல வாழ்த்துக்களும் பட்டங்களும் கிடைத்துள்ளன. அவை சிந்தனைச் சிற்பி, கவி மாமணி, பாவலர், சமூக சிந்தனையாளர், கவிச்செம்மல், கவிப் புயல், கவிச்சித்தர், காதல் கவிநிலவு என்பனவாகும்.

பிரதேச மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம்_ தேசிய மட்டம், சர்வதேச மட்டங்களில் இவருக்கு பல கௌரவ விருதுகள் கிடைத்துள்ளன. தஸ்தகீர் அவர்களின் தனிப்பட்ட குடும்பம் ஒரு இலக்கிய குடும்பமாகும். மூத்த சகோதரர் மர்ஹும் செய்யது முஹம்மது (அதிபர்) தனது சொந்த ஆர்மோனியத்தினால் பாடல்களுக்கு இசையமைப்பவர். இவரது இரண்டாவது சகோதரர் மர்ஹும் எஸ்.அப்துல் ஜப்பார் இவர் பாடல்களை தானே இயற்றி இசையமைத்து பாடுபவர். இவரது மூத்த புதல்வன் ரி. முஹம்மத் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றவர். இவரது கனிஷ்ட புதல்வி ரி. பாத்திமா ஹப்ஷா இவர் பாடசாலை மட்டத்தில் ‘எதிர்நீச்சல்’ எனும் நாடகத்தில் தாயாக நடித்தார். ‘முன்னேற்றம்’ எனும் மேடை நாடகத்திலும் மகளாக நடித்து பலரின் பாராட்டுக்களைப்பெற்றார். இவரது மருமகன் எஸ்.அஷ்ரப்கான் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.

-– எஸ்.அஷ்ரப்கான் – (கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT