Monday, April 29, 2024
Home » முதியோருக்கு உதவிகளை வழங்கிய மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்

முதியோருக்கு உதவிகளை வழங்கிய மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்

by gayan
October 12, 2023 1:04 pm 0 comment

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வைபவமொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் வனபரிபாலன திணைக்களத்தின் ஆய்வு உத்தியோகத்தரும், உயர் அதிகாரியுமான சுஹ்ரி லத்தீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“ஒரு சமூகத்தில் உள்ள பலம் பொருந்தியவர்கள் ஒட்டுண்ணிகளாக வாழும் வரை அச்சமூகத்தை மீட்க முடியாது என்பது ஒரு தத்துவக் கருத்தாகும். எனவே இயன்றவரை சமூகத்திலுள்ள பலம் பொருந்தியவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு சமூகத்தின் பாதுகாவலர்கள் அல்லது பலம் பொருந்தியவர்கள் மூன்று பிரிவினர் காணப்படுவதாக சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். படித்தவர்கள், பணம் படைத்தவர்கள், பதவிகளில் உள்ளவர்கள். இம்மூன்று சாராரும் சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக வாழத்தொடங்கினால் அச்சமூகம் சிதைவதைத் தவிர்க்க முடியாது” என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் ஜே.எம். யாசீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இங்கு முதியோர் பலருக்கு ஒரு இலட்ச ரூபாவுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுத்துறையில் உயர்பதவிகளில் இருந்து ஓய்வு பெற்று 75 வயதையும் கடந்த மடவளைவாழ் சிரேஷ்ட பிரஜைகள் ஐவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மடவளையைச் சேர்ந்த ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்டசையில் சித்தியடைந்தவர்கள் மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்றவர்கள், உயர்தரப் பரீட்சையில் 3 ஏ பெற்றவர்கள், ஆங்கிலப்பாடத்தில் ஏ சித்தி பெற்றவர்கள் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதிதிகளாகக் கலந்து கொண்ட சட்டத்தரணி பாத்திமா அஸ்னா, வத்தேகம வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரிஸானா பாருக் உடையார், அல் முனவ்வரா ஆரம்பப் பாடசாலை அதிபர் ஸாய்னா ஹலீல்தீன் , சிரேஷ்ட பிரஜைகள் சங்க பதில் தலைவர் கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ், செயலாளர் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல.ஏ. ஜெலீல் உட்பட பலர் மாணவர்களுக்கான பரிசில்களைக் கையளித்தனர்.

எம்.ஏ.அமீனுல்லா…?

(படங்கள்: அக்குறணை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT