Wednesday, May 8, 2024
Home » மதுரையில் புகையிரத பெட்டியில் தீ விபத்து; 10 பேர் பலி

மதுரையில் புகையிரத பெட்டியில் தீ விபத்து; 10 பேர் பலி

- தேநீர் ஊற்ற முயன்ற நிலையில் சிலிண்டர் வெடித்து விபத்து

by Rizwan Segu Mohideen
August 26, 2023 1:19 pm 0 comment

– யாத்திரிகர்கள் பயணித்த புகையிரதப் பெட்டியே சேதம்
– 3 மண்ணெண்ணெய் அடுப்புகள், 2 சிலிண்டர்கள், விறகு போன்றவை கண்டுபிடிப்பு

இந்தியாவின், மதுரை புகையிரத நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக பயணம் செய்த யாத்திரிகர்கள் பயணித்த புகையிரத பெட்டி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதில் 3 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் ஒருவர் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர், புகையிரத மருத்துவமனை மற்றும் அரச ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 2 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

புகையிரதத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என தென்னக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் ஊற்ற முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் அடங்கிய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கு சென்று, இறுதியாக நேற்று (25) நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் புணலூரில் இருந்துவந்த புகையிரதம் மூலம் அவர்கள் மதுரை வந்துள்ளனர். அவர்கள் வந்த இரண்டு புகையிரத பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு புகையிரதம் மூலம் நாளை அவர்கள் சென்னை செல்லவிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மண்ணெண்ணெய் அடுப்புகள், இரண்டு சிலிண்டர்கள், விறகுக்கட்டை போன்றவை தீ விபத்துக்குள்ளான ரயிலில் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் பெட்டி தனியார் தரப்பில் ஒன்லைன் முன்பதிவு மூலமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 இலட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலையத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே மீண்டும் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT