Wednesday, May 15, 2024
Home » முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்

by Rizwan Segu Mohideen
August 26, 2023 12:37 pm 0 comment

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சரான மயோன் முஸ்தபா என அழைக்கப்படும் எம்.எம்.எம். முஸ்தபா காலமானார்.

இன்று (26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து அன்னார் காலமாகியுள்ளார். இதனை அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1952ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி பிறந்த மீராமொஹிடீன் மொஹமட் முஸ்தபா, மரணிக்கும்போது 71 வயதாகும்.

ஒரு கணக்காளரான இவர், 1994 – 1999 காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக அரசியலுக்குள் பிரவேசித்தார்.

2001 – 2004 மற்றும் 2004 – 2010 காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், 2007 – 2010 காலப் பகுதியில் உயர் கல்வி பிரதியமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சுயாதீன வேட்பாளராக களமிறங்கிய அவர், 3,134 (0.03%) வாக்குகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.

அத்தேர்தலில் போட்டியிட்ட 22 பேரில் 17ஆவது இடத்தை அவர் பிடித்தார்.

சரத் பொன்சேகா உள்ளிட்டோர் போட்டியிட்ட குறித்த தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக பின்னர் பணியாற்றிய அவர், பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதற்காக, தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மொஹமட் முஸம்மிலுக்கு ரூ. 42 மில்லியன் இலஞ்சம் வழங்க முன்வந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் 13 வருடங்களாக இடம்பெற்ற குறித்த வழக்கு, கடந்த 2023 பெப்ரவரி 18ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், தொலைபேசி உரையாடல், CCTV காட்சி உள்ளிட்ட ஆதரங்களின் அடிப்படையில் குறித்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, 7 வருடங்களுக்கு அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகின்றது.

ஆயினும் MYOWN எனும் கல்வி நிறுவனத்தை நடாத்தி வந்த இவர், அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் அம்பாறை மாவட்டத்தின் கல்வி, சமூக, சயம விடயங்களில் மக்களுக்கு பாரிய சேவைகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rizwan Segu Mohideen

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT