Thursday, May 9, 2024
Home » இரசாயன தொழிற்சாலையில் தீ; 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

இரசாயன தொழிற்சாலையில் தீ; 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

by Rizwan Segu Mohideen
August 8, 2023 3:26 pm 0 comment

இன்று (08) காலை கந்தானை பள்ளிய வீதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீவிபத்து காரணமாக, எழுந்த புகையை சுவாசித்த அருகிலுள்ள 3 பாடசாலைகளைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகவீனமுற்று ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மு.ப. 7.30 மணியளவில் குறித்த தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ பரவியதில் அதில் சிக்கிய குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட புகை அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில், தொழிற்சாலைக்கு அருகில் இருந்த 3 பாடசாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில், புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரி, புனித செபஸ்தியார் ஆரம்பப் பெண்கள் கல்லூரி, புனித செபஸ்தியார் ஆண்கள் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடசாலை நிர்வாகம், ஜாஎல பொது சுகாதார பரிசோதர்கள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வெலிசறை கடற்படை முகாம் வீரர்கள், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

தீயினால் குறித்த களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, தீ விபத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.

கந்தானை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT