Monday, May 20, 2024
Home » ‘இணைந்து செயற்படுவோம்’ கருப்பொருளில் அக்கரைப்பற்றில் உலமாக்கள் ஒன்றுகூடல்

‘இணைந்து செயற்படுவோம்’ கருப்பொருளில் அக்கரைப்பற்றில் உலமாக்கள் ஒன்றுகூடல்

by sachintha
August 8, 2023 3:09 pm 0 comment

 

அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் கீழுள்ள உலமாக்களின் ‘இணைந்து செயற்படுவோம்’ எனும் தொனிப்பொருளிலான ஒன்றுகூடலும், இச்சபையின் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று கடற்கரை தனியார் விடுதியில் அக்கரைப்பற்று உலமா சபையின் தலைவர் கலாநிதி அஷ்ஷேக் எம்.ஐ.சித்தீக் (அஸ்ஹரி) தலைமையில் நடைபெற்றன.

இப்பிரதேசத்தின் ஏராளமான உலமாக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் உலமாக்கள் மூலம் இப்பிரதேசத்தில் சமூகநலன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களை சந்தித்து, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு பற்றிய விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தி, மாணவர்களிடையே இஸ்லாம் கூறும் நற்பண்புகளை விதைப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த காலத்தில் க.பொ.த சா/த பரீட்சையில் இஸ்லாம் பாடத்தின் பெறுபேறுகளில் மாணவர்களிடையே காணப்பட்ட வீழ்ச்சியை நிவர்த்தி செய்யும் பொருட்டு இஸ்லாம் பாடத்திற்கான உதவிக்கல்வி பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து ஜம்இய்யாவினால் முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவதாக இங்கு தீர்மானிக்கப்பட்டது. அக்கரைப்பற்றின் பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபையினரோடு சிநேகபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டு, பள்ளிவாயில்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது தொடர்பான வழிகாட்டல்களை வழங்குதல்.

இப்பிரதேசத்தில் வாலிபர்களை ஒழுக்கப் பிறழ்வான நடவடிக்கைகளில் இருந்து மீட்டெடுத்து அவர்களை வலுவூட்டுவதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுத்தல். பெண்களை வலுவூட்டுவதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை செயற்படுத்துதல்.

உயிரோட்டமுள்ள குத்பா பிரசங்கங்களை நிகழ்த்தும் பொருட்டு துறைசார் நிபுணர்களைக் கொண்டு கதீப்மார்களுக்கான பயிற்சிநெறியினை ஏற்பாடு செய்தல். அக்கரைப்பற்றின் அனைத்து உலமாக்களின் தகவல்களை திரட்டுவதோடு, மூத்த உலமாக்களின் தற்போதைய நிலையை அறிதல்.

பள்ளிவாயில்களில் கடமை புரியும் உலமாக்களுக்கான தகுந்த வேதனம், ஓய்வூதியம் மற்றும் விடுமுறை பற்றி கலந்துரையாடி நடைமுறைப்படுத்துதல். மஃரிப் நேரத்திற்கு முன்னதாக பாடசாலை மாணவர்களுக்கான பகுதிநேர மேலதிக வகுப்புகளை நிறைவு செய்து அவர்களை சமய ஒழுக்க விழுமியங்களின் பால் முன்னடத்திச் செல்வதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்தோடு, அக்கரைப்பற்று உலமாக்களின் மூலம் இச்சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் பிறைக்குழு, கல்விக்குழு. சமூகசேவை மற்றும் ஆய்வு வெளியீட்டுக்கான குழு, பிரசாரக் குழு, இளைஞர் விவகாரக்குழு, மகளிர் விவகாரக் குழு, ஊடகக்குழு, ஆலிம்கள் விவகாரக்குழு போன்ற குழுக்கள் உலமாக்களை கொண்டு இதன்போது தெரிவு செய்யப்பட்டன.

எம்.எஸ்.எம். றிஸ்வான்

(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT