Friday, May 10, 2024
Home » Visit Sri Lanka: வருடாந்தம் 5 மில். சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதே இலக்கு

Visit Sri Lanka: வருடாந்தம் 5 மில். சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதே இலக்கு

- புதிய சுற்றுலாத் திட்டம் விரைவில் வெளியிடப்படும்

by Rizwan Segu Mohideen
July 25, 2023 9:28 am 0 comment

– சமையற்கலை தொடர்பில் கூடுதல் கவனம்
– சமையற்கலைப் பாடசாலைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை
– மறைந்த மெரில் ஜே பெனாண்டோவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான Visit Sri Lanka திட்டம் அடுத்த சில மாதங்களில் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் (23) நடைபெற்ற Bocus d’Or 2023 போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Bocus d’Or 2023 போட்டியின் வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்தியாவின் மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் உள்ளது என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாக இருப்பார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய சுற்றுலா சந்தையில் போட்டியிடும் வகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை மாற்றியமைக்க வேண்டும் எனவும் பல்வேறு சமையல் கலைகளைக் கொண்ட வெப்பமண்டல நாடாக இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களை அரசாங்கம் அடையாளங்கண்டுள்ளதாகவும், நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் சமையற் கலையின் முழுமையான பங்களிப்பை பெறுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், ‘டில்மா டீ’ நிறுவனரும், முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மறைந்த மெரில் ஜே. பெர்ணான்டோ இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அளித்த உயர்ந்த பங்களிப்பை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு முக்கிய பங்காற்றிய மெரில் பெனாண்டோ இன்றி இன்று முதல்முறையாக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

இந்த நாட்டின் சுற்றுலாத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் மறக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்த போது எட்ரியன் சேகா நம்நாட்டிற்கு வருகை தந்தார். சுற்றுலாத் தொழிலை எப்படி விரிவுபடுத்துவது என்பது குறித்துப் அவர் விளக்கினார்.

மேலும், இலங்கை வந்திருந்த ஜெப்ரி டோபிஸ், பொட்டிக் ஹோட்டல் எண்ணக்கரு குறித்து பேசினார். இந்த பொட்டிக் ஹோட்டல் எண்ணக் கருவின் மூலம் இலங்கை பெருந்தோட்டங்களில் உள்ள “பங்களாக்களை” பொட்டிக் ஹோட்டல்களாக மாற்றுவது எப்படி என்று குறித்து அவர் விளக்கியிருந்தார்.

‘Tea Trails’ ஆரம்பிப்பது குறித்து மெரில் ஒருநாள் என்னிடம் கூறினார். அவர் முதலில் என்னை பொட்டிக் ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்றார். நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தரத்திற்கு அவர் அதனை அமைத்திருந்தார்.

எனவே, இந்நாட்டின் தேயிலை தொழிலுக்கு மாத்திரமன்றி, சுற்றுலாத்துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. அவர் கொல்கத்தாவில் சமையற்கலை பாடசாலை ஒன்றை தொடங்கினார்.

அரசியல்வாதி என்ற வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். 40 ஆண்டுகளாக, நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் போது, பல்வேறு வகையான உணவு வகைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்று நான் அனுராதபுரம் சென்றிருந்தேன். மிகவும் சுவையான ஏரி மீன் குழம்பை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில காலத்திற்கு முன்பு திருகோணமலையில் ஒரு சுவையான பிரியாணியை சுவைத்தேன்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல்களுக்கு வெளியே துப்பரவு வசதிகள் சிறந்த மட்டத்தில் இருக்காதது தொடர்பில் நடந்த சம்பவமொன்று நினைவில் வருகிறது. ஒரு நாள் நாங்கள் கல்பிட்டியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றோம், சிறந்த நண்டுக் கறி சமைக்கும் உணவகமொன்றுக்கு சென்றோம். நண்டுக் கறி மிகவும் சுவையாக இருந்தது. பிறகு கடற்பாசி ஜெலி சாப்பிட்டோம். இந்தக் கடற்பாசி ஜெலி போர்த்துக்கேய செய்முறையின் படி முஸ்லிம் பெண்களால் சமைக்கப்பட்டது. எனவே கல்பிட்டிக்கு சென்றால் கடற்பாசி ஜெலி தயாரிப்பதையும் கற்றுக் கொள்ளலாம்.

சாப்பிட்டு முடித்து பின்னர் அங்கிருந்து வெளியேற முன்னர் வெள்ளை மேசைவிரிப்புக்குப் பதிலாக மஞ்சள் விரிப்பைப் பயன்படுத்தியிருப்பது பற்றி வினவினேன். சிலநாட்களாக மேசை விரிப்புகள் சலவைக்கு அனுப்பவில்லை என்று சொன்னார்கள்.

நாம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். வங்குரோத்து நிலையில் மீண்ட பின்னர் நமக்கு போதியளவு அந்நியச் செலாவணி அவசியம். அனைத்தும் எளிதில் கிடைக்காது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிபந்தனைகள் உள்ளன. பணத்தை சம்பாதிக்கும் வகையில் நமது சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவது போதாது. வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.

அவர்களில் 2.5 மில்லியன் பேர் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யக் கூடிய ஆற்றலுள்ள சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும்.இந்திய மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியும், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். எனவே, சுற்றுலாத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

இன்று போட்டியில் பங்கேற்ற இளைஞர்களில் பலர் இன்னும் மூன்று வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இவர்களை இந்த நாட்டில் தங்க வைப்பதற்கு மாலைதீவில் உள்ள ஹோட்டல்களில் வழங்கப்படும் மட்டத்திற்கு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.

நாம் இலக்காகக் கொண்டுள்ள 5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளிடையே பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள் இருக்கலாம். நம் நாடு சமையற் கலைச் சுற்றுலாவுக்கு சிறந்த பின்னணியைக் கொண்டுள்ளது.

நமது சுற்றுலாத் துறையில் சமையற் கலைச் சுற்றுலாவை இலக்காகக் கொண்டால், ஆசியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்கள். அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதற்கான, அதிகளவிலான பணியாளர்களை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டிய அதேநேரம் அதற்குரிய பாடசாலைகளையும் நாம் மேம்படுத்த வேண்டும். மேலும் தனியார்துறை பங்களிப்புடன் சமையற்கலை பாடசாலையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கம் தனியாக அனைத்தையும் செய்யும் வரையில் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. இதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும். தற்போதும் பல பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் சமயற்கலை தொடர்பிலான பாடசாலைகள் இயங்குகின்றன. Visit Sri Lanka என்ற பெயரில் நாம் புதிய சுற்றுலாத் திட்டத்தை ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதமளவில் வெளியிடுவோம். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

டெல்மா தேயிலை நிறுவனம் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சீ பெனாண்டோ உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோ பிரென்ஸ்ஸூவா, Bocuse d’Or இலங்கைக்கான தலைவர் ரொஹான் பெனாண்டோபுள்ளே, டெல்மா தேயிலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஹான் சீ பெனாண்டோ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT