Tuesday, May 21, 2024
Home » சிட்டி லீக் தலைவர் கிண்ணத்தின் இறுதிக்கு கொழும்பு முன்னேற்றம்

சிட்டி லீக் தலைவர் கிண்ணத்தின் இறுதிக்கு கொழும்பு முன்னேற்றம்

by sachintha
July 25, 2023 9:47 am 0 comment

சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றின் முதல் போட்டியில் வெற்றியீட்டிய கொழும்பு கால்பந்து கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ஜாவாலேன் இடையிலான போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதோடு, மொரகஸ்முல்ல விளையாட்டு கழகம் மற்றும் மாளிகாவத்தை யூத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெனால்டி சூட் அவுட் முறையில் மாளிகாவத்தை யூத் 4–3 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இதன்படி ஜாவாலேன் மற்றும் மாளிகாவத்தை யூத் அணிகளுக்கு இடையிலான எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி கொழும்பு அணியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி பிற்பகல் 3.30க்கு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ஜாவாலேன் இடையிலான போட்டியில் முதல் பாதியில் 1–0 என கொழும்பு அணி முன்னிலை பெற்றது. 19ஆவது நிமிடத்தில் மொஹமட் மசீத் கோல் பெற்றதோடு, 49 ஆவது நிமிடத்தில் அதற்கு பதிலடியாக சி.வி. சந்தருவன் ஜாவாலேன் அணிக்கு கோல் பெற்றுக்கொடுத்தார். எனினும் 66 ஆவது நிமிடத்தில் கே.ஈ.பி. பெரேரா கோல் ஒன்றை பெற்றதோடு 75 ஆவது நிமிடத்தில் மொஹமட் நெளமான் ஓன்கோல் பெற கொழும்பு அணிக்கு சாதகமாக அமைந்தது.

மொரகஸ்முல்ல விளையாட்டு கழகம் மற்றும் மாளிகாவத்தை யூத் அணிகள் இடையிலான போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையிலேயே முடிவை தீர்மானிப்பதற்கு பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

6ஆவது முறையாகவும் இடம்பெறும் சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 150,000 ரூபாவும் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 100,000 ரூபாவும் வழங்கப்படவிருப்பதோடு ஒவ்வொரு போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சிட்டி லீக் கால்பந்து லீக்கின் தலைவர் ஆர். புவனேந்திரனின் தனிப்பட்ட நிதி மூலமே அனுசரணை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT