Friday, May 10, 2024
Home » பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்பாட்டு குழு

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்பாட்டு குழு

by Rizwan Segu Mohideen
July 19, 2023 6:14 pm 0 comment

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி குழு நியமிக்கப்ட்டது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையிலான மேற்படிச் செயற்பாட்டு குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக கல்வி அமைச்சு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்குகின்றனர்.

பொருளாதார நெருக்கடியினால் தொழில்களை இழந்தவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் இருதரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அக்குழுவினால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்களை பெற்றுக்கொடுப்பதற்கான மூலோபாய திட்டமிடலொன்று தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்புக்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத்தருமாறு உலக தொழிலாளர்கள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், உலக தொழிலாளர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பிலான இறுதி அறிக்கையும் அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து இருதரப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களின் பலனாக குறுகிய கால, இடைக்கால, நீண்டகால தீர்வுகள் கண்டறியப்பட்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான குழுவே தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இனிவரும் நாட்களில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளை கண்டறிந்து அந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான தகைமைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT