Home » யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை

- காயமடைந்த 'அக்போ' யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை

by Rizwan Segu Mohideen
July 19, 2023 8:21 pm 0 comment

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தின் ஊடாக இதற்கான தீர்வுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் யானை மரணங்களும் இடம்பெற்ற விதங்களும்

Cause of Elephant Deaths 2023

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

”இந்நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத நிலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சனத்தொகை அதிகரிப்பால் மக்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளின்போது யானைகளின் வாழ்விடங்கள், அவை பயணிக்கும் பாதைகள் பாதிக்கப்படுகின்றன. இதுவே யானை – மனித மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

 

அமைச்சு என்ற ரீதியில் இந்த யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யானை-மனித மோதலுக்கான குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை காண அமைச்சு பல செயலமர்வுகளை நடத்தியுள்ளது. அதன்படி, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரு கொள்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்தக் கொள்கையை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் யானை மனித மோதலைத் தீர்க்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் யானைகளால் ஏற்பட்ட மனித மரணங்கள்

Human Death by Wild Elephant

மேலும் இந்த மோதலுக்கு யானை வேலியே பொருத்தமான தீர்வு என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருவதைத் தடுக்க 1650 கிலோ மீட்டர் தூரம் யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுமார் 650 கிலோமீட்டர் யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 1000 கிலோமீட்டருக்கான யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

 

இதற்குத் தேவையான மனித வளம் போதுமானதாக இல்லாததால், 3000 பல்துறை ஊழியர்களை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் முழுமையாக யானை வேலிகளை அமைக்க இன்னும் சில காலம் தேவைப்படும். தற்போதுள்ள  யானை வேலிகளை பராமரிப்பது கடினமான பணியாக உள்ளது. தற்போது  அவற்றை சிவில் பாதுகாப்புப் படையினரே பராமரித்து வருகின்றனர்.

 

‘அக்போ’ யானைக்கு காயம் ஏற்பட்டதை அறிந்த வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தது என்பதை இங்கு கூற வேண்டும். தற்போதும் யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கான நிதி ஒதுக்கீட்டை அமைச்சு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இதுவரை நிதி மற்றும் மருத்துவ பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, ‘அக்போ’ யானை தொடர்பாக யாரும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் யானையை வாழவைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.

 

எதிர்கால சந்ததியினருக்காக வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதுடன், வன வளங்களை செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் வருடாந்தம் 16,000 கன மீட்டருக்கும் அதிகமான மரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, விவசாயிகளின் பங்களிப்புடன் பலவகைத் தேவைக்கான மரங்களை வளர்க்கவும், இதற்கான காணிகள், கன்றுகள் மற்றும் அவற்றை பராமரிப்பதற்கான ஆரம்ப மூலதனமாக ஹெக்டயருக்கு ரூ. 15,000 வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தளபாடத் தேவைக்கு பயன்படுத்தக் கூடிய தேக்கு மரங்களை பயிரிட உத்தேசித்துள்ளதாகவும் அந்த மரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் வருமானத்தை அந்த விவசாயிகளுக்கே வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

பல்வேறு பிரதேசங்களில் சுற்றுச்சூழல் பூங்காக்கள் (Eco Park) உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்தத் திட்டத்தின்கீழ், கலவில, கல்ஒய, ஹுரலு சூழலியல் பூங்கா தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழல் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த சுற்றுலாத்துறையின் மூலம் அந்தப் பகுதி மக்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும், பாரிய அளவிலான நிர்மானங்கள் இல்லாமல் சூழல்நேய சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான அந்நியச் செலாவணியைப் பெற வன வளங்களைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT