Sunday, April 28, 2024
Home » மத்திய வங்கி அதன் கொள்கை வட்டிவீதங்களை மேலும் குறைத்துள்ளது

மத்திய வங்கி அதன் கொள்கை வட்டிவீதங்களை மேலும் குறைத்துள்ளது

- வைப்பீடு வசதி (SDFR) 11%; கடன் வசதி (SLFR) 12%

by Rizwan Segu Mohideen
July 6, 2023 2:28 pm 0 comment

– நியதி ஒதுக்கு விகிதம் (SRR) மாற்றமில்லை: 4%
– இதன் பலனை மக்களுக்கும், வியாபாரங்களுக்கும் வழங்குமாறு வங்கிகளுக்கு மத்திய வங்கி வலியுறுத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நேற்று (05) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதத்திற்கும் 12.00 சதவீதத்திற்கும் 2% இனால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறை மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து, நாணயச் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் அதன் உரிய வகையில் நிலைபேறு அடைவதனையும், எதிர்வரும் நாட்களில் பணவீக்கத்தினை ஒற்றை இலக்க மட்டத்திற்கு கொண்டு வரும் வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களைத் தளர்த்துவதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்து.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொள்கை வட்டி வீதங்களில் மேற்கொள்ளப்பட்ட இக்குறைப்பு மற்றும் அரச பிணையங்கள் மீதான இடர்நேர்வு மிகையில் அண்மையில் பதிவுசெய்யப்பட்டவாறான குறிப்பிடத்தக்க குறைவுடன் இணைந்து 2023 ஜூன் முற்பகுதியில் 2.5% இனால் கொள்கை வட்டி வீதங்களில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பு என்பவற்றுடன் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்கள் போதியளவாலும் விரைவாகவும் கீழ்நோக்கிச் சீராக்கப்படுமென சபை எதிர்பார்க்கின்றது.

எனவே, மத்திய வங்கியின் மூலமான நாணயக் கொள்கையின் இக்குறிப்பிடத்தக்க தளர்த்தலின் நன்மைகளைத் தனிநபர்களுக்கும் வியாபாரங்களிற்கும் வழங்குவதன் மூலம் எதிர்வரும் காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் மீளெழுச்சியடைவதற்கு ஆதரவளிக்குமாறு வங்கித் துறையினர் மற்றும் நிதியியல் துறையினருக்கு இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT