டயனா கமகே நாட்டை விட்டு செல்ல முயற்சி; நவம்பர் 17 வரை வெளிநாடு செல்ல தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு நவம்பர் 17ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கிற்குகு அமைய, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட பல சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனு மூலம் இன்றையதினம் (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் வழக்கு இடம்பெறும் இச்சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சட்டத்தரணிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நகர்த்தல் மனுவை தாக்கல் செய்ததாக, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க  தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த விடயத்தை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, எதிர்வரும் வியாழக்கிழமை, நவம்பர் 17ஆம் திகதி டயனா கமகே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் (17) வரை அவருக்கு வெளிநாடு செல்ல தற்காலிக தடை விதித்து நீதவான் உத்தரவிட்டதாக வன்னிநாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பெக்ஸ் மூலம் அறிவிக்க நீதவான் உத்தரவிட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த விசாரணையை சீர்குலைக்கும் முயற்சிகள் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் முன்னேற்றம் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்ற அறிக்கையை டிசம்பர் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிலையப் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயம் நேற்று (10) வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் குறித்த உத்தரவை விடுத்தார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்று தொடர்பான விசாரணை தொடர்பில் விளக்கமளிக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரிக்கு இன்றையதினம் (10) நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.ச. கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயனா கமகே, ஆளும் கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதோடு, தற்போது சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...