நாடு கடத்தலுக்கு எதிரான பிரித்தானிய பெண்ணின் மனு தள்ளுபடி

தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான குடிவரவு - குடியகல்வு திணைக்கள தீர்மானத்திற்கு எதிராக, பிரித்தானிய பெண் கெய்லி பிரேசர் (Kayleigh Fraser) தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே நீதிமன்றம் இன்றையதினம் (16) தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா இந்த உத்தரவை அறிவித்தார்.

பிரித்தியானிவின் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடிதமொன்றின் மூலம் அறிவித்திருந்தது.

காலி முகத்திடலில் அரச எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்ததால், குடிவரவு குடியகல்வு திணைக்களம் தனது வீசாவை இரத்து செய்வதற்கான தன்னிச்சையான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு வழங்கப்பட்ட வீசாவை ஓகஸ்ட் 15ஆம் திகதி இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

குறித்த வழக்கு தொடர்பான செயற்பாடுகளில் சிவில் சமூக ஆர்வலர் இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, அவருக்கு உதவி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இன்றையதினம் (16) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன,

குறித்த பெண் 2019ஆம் ஆண்டு இலங்கை வந்துள்ளார். அவர் தொடர்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களம், குடிவரவு - குடியகல்வு சட்டத்திற்கு அமையவே செயற்படுகின்றது. அரசாங்கம் இது தொடர்பில் தலையிடுவதில்லை.

திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் திணைக்களம் விளக்கமளிக்கும் என்பதுடன், இது ஒரு ஒரு நீதிமன்ற செயற்பாடுடன் தற்போது தொடர்புபட்டுள்ளதால், நீதிமன்ற செயற்பாடுகள் நிறைவடையும் வரை இது தொடர்பில் மேலதிகமாக எதனையும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...