இன்றும் நாளையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது

இன்றும் நாளையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது-No Power Cuts for Today & Tomorrow

இன்று (08) மற்றும் நாளையதினம் (09) மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று (07) பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சார சபை அறிவித்திருந்தது.

எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் வழங்கப்படாமை மற்றம் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மின்சார சபையினால் எரிபொருளுக்கான நிலுவைகள் செலுத்தப்படாததன் காரணமாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருளை விடுவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மின் உற்பத்திக்காக தற்போது சுமார் 2,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வழங்கியுள்ளதாக, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலா, 1,000 மெட்ரிக் தொன் வீதம், சபுகஸ்கந்த அனல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக அனல் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றிற்கு அவை பயன்படுத்தப்படவுள்ளன.

அந்த வகையில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது வரை இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மின்சார விநியோகத்திற்கு அவசியமான எரிபொருள் இருப்புகள் தொடர்பில் நாளை மீளாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...